தேடுதல்

திருத்தந்தை பதினான்காம் லியோ திருத்தந்தை பதினான்காம் லியோ   (@Vatican Media)

திருத்தந்தையின் ஸ்பெயின் நாட்டிற்கான திருத்தூதுப் பயணத்தின் ஏழாம் நாள் நிகழ்வுகள்!

கேனரி தீவுகளின் டெனரிஃப் பகுதியில் புலம்பெயர்ந்தோரைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதலும் வழங்கும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், சிறப்புத் திருப்பலியையும் நிறைவேற்றி, தனது ஸ்பெயின் திருத்தூதுப் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று உரோம் நகருக்குத் திரும்புகிறார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஜூன் 12, வெள்ளியன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஸ்பெயின் நாட்டிற்கான திருத்தூதுப் பயணத்தின் இறுதி நாளை   கேனரி தீவுகளின் டெனரிஃப் (Tenerife) பகுதியில் நிறைவு செய்துவிட்டு இன்று இரவு உரோம் நகருக்குப் புறப்படுகிறார். ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து கடல்வழியாகப் புலம்பெயர்ந்து வரும் அகதிகளின் நிலையை நேரடியாகக் கண்டறியவும், அவர்களுக்கு ஆதரவளிக்கவுமே திருத்தந்தை அவர்களின்  இந்த இறுதி நாள் பயணம் அமைகிறது.

இன்று காலை மணி 08:30க்கு கிரான் கனாரியாவில் உள்ள காண்டோ விமானப்படை தளத்திலிருந்து (Gando Air Base) திருத்தந்தை தனி விமானம் மூலம் டெனரிஃப் தீவுக்குப் புறப்படுகிறார். சரியாக 40 நிமிடப் பயணத்திற்குப் பிறகு, காலை 09:10 மணிக்கு 'டெனரிஃப் நோர்டே-லாஸ் ரோடியோஸ்' சர்வதேச விமான நிலையத்தை (Tenerife Norte-Los Rodeos International Airport) வந்தடைகிறார். அங்கு அவருக்கு அரசு அதிகாரிகள் மற்றும் திருஅவைத்  தலைவர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.  

காலை மணி 09:30 க்கு “லாஸ் ராய்சஸ் புலம்பெயர்ந்தோர்  மையத்திற்கு” (Las Raíces Center) செல்கிறார். அங்கு தங்கியிருக்கும் புலம்பெயர்ந்த மக்கள் மற்றும் அகதிகளை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிகிறார். ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு தஞ்சம் புகுந்துள்ள அவர்களுக்குத் தனது ஆழ்ந்த ஆறுதலையும், ஆதரவையும் தெரிவிக்கிறார்.

அதைத் தொடர்ந்து, காலை 10:10 மணிக்கு 'பிளாசா டெல் கிறிஸ்டோ டி லா லகுனா' (Plaza del Cristo de La Laguna) என்ற பொதுச் சதுக்கத்திற்கு திருத்தந்தை வருகை தருகிறார். அங்கு புலம்பெயர்ந்தோரைச் சமூகத்துடன் ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசுகிறார். 

மதியம் மணி 12:15க்கு இப்பயணத்தின் முக்கிய நிகழ்வாக, சான்டா குரூஸ் டி டெனரிஃப் (Santa Cruz de Tenerife) துறைமுகப் பகுதியில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான கத்தோலிக்கப் பொதுமக்கள், மாலுமிகள் மற்றும் மீனவர்கள் கலந்து கொள்கின்றனர். கடல் பயணங்களின் போது உயிரிழந்த புலம்பெயர்ந்த மக்களுக்காக இந்தத் திருப்பலியில் சிறப்பு இறைவேண்டல்கள் ஏறெடுக்கப்படுகின்றன.

இன்றைய நாளுக்கான அனைத்து நிகழ்வுகளையும் நிறைவு செய்து கொண்டு மதியம் மணி 02:30 க்கு மீண்டும் டெனரிஃப் நோர்டே சர்வதேச விமான நிலையத்திற்கு திருத்தந்தை வருகை தருகிறார். அங்கு அவருக்கு அதிகாரப்பூர்வ அரசு விடைபெறும் விழா (Farewell Ceremony) நடத்தப்படுகிறது. பின்னர்,  மதியம் மணி 03:00 க்கு டெனரிஃப் விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் இத்தாலி நாட்டின் உரோம் நகருக்கு புறப்படுகிறார். சுமார் 5 மணி நேர வான்வழிப் பயணத்திற்குப் பிறகு, உரோம் நேரப்படி இன்று இரவு 08:10 மணிக்கு ரோம்/பியுமிசினோ சர்வதேச விமான நிலையத்தை வந்தடைகிறார். இதன் மூலம் சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த திருத்தந்தை அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்பெயின் மற்றும் கேனரி தீவுகளுக்கான திருத்தூதுப் பயணம் இனிதே நிறைவடைகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

12 ஜூன் 2026, 08:03