திருத்தந்தை அவர்களின் மாட்ரிட் வருகைக்கான முன்னேற்பாடுகள். திருத்தந்தை அவர்களின் மாட்ரிட் வருகைக்கான முன்னேற்பாடுகள்.  

மாட்ரிட்டில் திருத்தந்தை: நற்செய்தியும் சமூக நீதியும்!

மாட்ரிட் நகரில் நடைபெறவுள்ள சந்திப்பில், பொதுவாழ்வு மற்றும் அரசியலில் திருச்சபையின் பங்களிப்பு குறித்து விவாதிக்கப்படவுள்ளது. அங்குள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசும் திருத்தந்தை, திருச்சபை அரசியல் அதிகாரத்திலிருந்து முற்றிலும் விலகி நிற்பதை உறுதிப்படுத்துவார்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஸ்பெயின் நாட்டிற்கு மேற்கொள்ளவிருக்கும் ஏழு நாள்  திருத்தூதுப் பயணம், இன்றைய திருஅவையும் ஐரோப்பாவும் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவால்களை முன்னிலைப்படுத்தும் ஒரு புனிதப் பயணமாக அமைய உள்ளது.

மாட்ரிட், பார்சிலோனா மற்றும் கேனரி தீவுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை, நம்பிக்கை, சமூக ஒற்றுமை, நற்செய்தி அறிவிப்பு மற்றும் புலம்பெயர்வு தொடர்பான சிக்கல்களைக் குறித்து உரையாற்ற உள்ளார். ஸ்பெயின் சமூகம் ஆழ்ந்த துருவமுனைப்பு மற்றும் அதிகரித்து வரும் மதச்சார்பின்மையை எதிர்கொள்ளும் வேளையில் இந்தப் பயணம் இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாட்ரிட் நகரில், பொதுவாழ்வு மற்றும் அரசியலில் திருஅவையின் பங்களிப்பு குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும். அங்குள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்கும் திருத்தந்தை, திருஅவை  அரசியல் அதிகாரத்திலிருந்து தள்ளி நிற்பதைச் சுட்டிக்காட்டுவார். அதேவேளையில், பொதுநலன், சமூக நீதி மற்றும் மனித மாண்பைக் காப்பதில் திருஅவை  கொண்டுள்ள உறுதியான அர்ப்பணிப்பை அவர் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பார்சிலோனாவில், அந்தோனி கவுடி மறைந்த நூற்றாண்டை ஒட்டி, புகழ்பெற்ற திருக்குடும்ப பேராலயத்திற்கு  திருத்தந்தை செல்வார். நம்பிக்கை பரிமாற்றம் என்பதை  சாதாரணமாகக் கருத முடியாத ஒரு சமூகத்தில், நற்செய்தி அறிவிப்புக்கான கருவிகளாக அழகு மற்றும் புனிதக் கலைகளின் ஆற்றலை இந்த வருகை முன்னிலைப்படுத்துகிறது.

கேனரி தீவுகளில் இடம்பெறும் இறுதி கட்ட பயணம், ஆபத்தான அட்லாண்டிக் புலம்பெயர்வுப் பாதை வழியாக வருகை தரும் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் மீது கவனம் செலுத்த உள்ளது. அங்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் புலம்பெயர்ந்தோரையும் உள்ளூர் சமூக மக்களையும் சந்திப்பார்.

திருத்தந்தை அங்கு ஏழைகள், எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தோரின் கண்களினூடாக உலகைப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உரையாற்ற உள்ளார்.

இந்தப் பயணம் கிறிஸ்தவ சான்று வாழ்வுக்கு அழைப்பு விடுப்பதுடன், மனித மாண்பையும் ஒருமைப்பாட்டையும் நிலைநாட்ட வேண்டிய பகிரப்பட்ட பொறுப்பை நினைவூட்டும் ஒரு நிகழ்வாகவும் அமையும்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

05 ஜூன் 2026, 12:24