திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தனது திருத்தூதுப் பயணத்தின் ஆறாவது நாளை இன்று தொடங்குகிறார். திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தனது திருத்தூதுப் பயணத்தின் ஆறாவது நாளை இன்று தொடங்குகிறார்.   (@Vatican Media)

திருத்தந்தையின் ஸ்பெயின் நாட்டிற்கான திருத்தூதுப் பயணத்தின் ஆறாம் நாள் நிகழ்வுகள்!

ஸ்பெயின் திருத்தூதுப் பயணத்தின் இறுதிக்கட்டமாக, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஜூன் 11 அன்று கனாரியா தீவுகளுக்குச் செல்கிறார். அங்கு புலம்பெயர்ந்தோருக்காகப் பணியாற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்திப்பதுடன், ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் மறைப்பணியாளர்களுடன் உரையாடி, கிரான் கனாரியா விளையாட்டரங்கில் திருப்பலி நிறைவேற்றுகிறார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஸ்பெயின் நாட்டிற்கான தனது முதல் திருத்தூதுப் பயணத்தின் இறுதிக்கட்டமாக, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஜூன் 11, வியாழக்கிழமையன்று பார்சிலோனாவிலிருந்து கனாரியா தீவுகளின் முக்கிய நகரமான லாஸ் பால்மாஸ் டி கிரான் கனாரியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். புலம்பெயர்ந்தோர் நலன், திருஅவைப் பணியாளர்களின் ஊக்கம் மற்றும் இறைமக்களுடனான விசுவாசக் கொண்டாட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு அமைந்திருந்த இந்த நாள், திருத்தந்தையின் பயணத்தில் முக்கிய இடத்தைப் பெறுகிறது

காலை 8.30 மணிக்கு பார்சிலோனாவின் ஜோசெப் டரடெல்லாஸ்–எல் பிராட் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு திருத்தந்தை, காலை மணி 10.50 க்கு கிரான் கனாரியா தீவின் கான்டோ விமானப்படைத் தளத்தை வந்தடைகிறார். அதனைத் தொடர்ந்து, காலை மணி 11.40 க்கு அர்குயினெகுயின் துறைமுகத்தில் புலம்பெயர்ந்தோருக்காகப் பணியாற்றும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மக்கள் நல அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்திக்கிறார்.

பிற்பகல் 1.30 மணிக்கு, லாஸ் பால்மாஸ் நகரிலுள்ள புனித அன்னாள் பேராலயத்தில் ஆயர்கள், அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், துறவியர்கள், குருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் மறைப்பணியாளர்களை திருத்தந்தை சந்திக்கிறார். மாலை மணி 6.30 க்கு, கிரான் கனாரியா விளையாட்டரங்கில் நடைபெறும்  திருப்பலியை திருத்தந்தை தலைமையேற்று நிறைவேற்றுகிறார். இந்நிகழ்வுடன்  இன்றைய நாளுக்கான தனது  திருத்தூதுப் பயணத்தை திருத்தந்தை நிறைவு செய்கிறார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

11 ஜூன் 2026, 10:45