விளையாட்டு உலகை இணைக்கும் உலகளாவிய மொழி!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
விளையாட்டுத்துறையின் விழுமியங்களுக்காக இறைவேண்டல் செய்யுமாறு உலகெங்கிலும் உள்ள நம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜூன் 02, செவ்வாயன்று, வெளியிட்டுள்ள ஜூன் மாதத்திற்கான தனது இறைவேண்டல் கருத்தில் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, விளையாட்டுத் துறையின் நன்மைகளையும், அதில் உள்ள சவால்களையும் சுட்டிக்காட்டியதுடன், விளையாட்டு நிகழ்வுகள் அமைதியையும் சகோதரத்துவத்தையும் வளர்க்க உதவ வேண்டும் என்றும் இறைவேண்டல் செய்தார்.
விளையாட்டு, அதன் நட்பு மற்றும் குழு மகிழ்ச்சிக்காக இறைவனுக்கு நன்றி கூறிய திருத்தந்தை, விளையாட்டைப் போலவே வாழ்விலும் யாரும் தனித்து மீட்கப்படுவதில்லை" என்று ஆண்டவர் நமக்குக் கற்றுக்கொடுப்பதை எடுத்துக்காட்டினார்.
நாம் "வளர்வதற்கும், மரியாதையைக் கற்றுக்கொள்வதற்கும், நமது எல்லைகளைக் கடந்து செல்வதற்கும், நாம் அடையும் வெற்றிகளை ஒன்றிணைந்து கொண்டாடுவதற்கும் மற்றவர்கள் நமக்குத் தேவை" என்று வலியுறுத்திய திருத்தந்தை, விளையாட்டு என்பது "எப்போதும் வெற்றுப் போட்டிக்கானதாக இல்லாமல் சகோதரத்துவத்தின் பள்ளியாகவும், புறக்கணிப்பிற்கான இடமாக இல்லாமல் சந்திப்பிற்கான தளமாகவும், வன்முறையின் பாதையாக இல்லாமல் அமைதியின் பாதையாகவும் திகழ வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் விளையாட்டை உலகை இணைக்கும் ஒரு பொதுவான மொழியாகக் கண்டறிய வேண்டும் என்று அழைப்பு விடுத்த திருத்தந்தை, விளையாட்டு என்பது வெவ்வேறு கலாச்சாரங்களை ஒன்றிணைக்கவும், மக்களிடையே ஒற்றுமை, ஒருவரையொருவர் மதித்தல் மற்றும் தனிமனித வளர்ச்சியை விதைக்கவும் உதவும் என்றும் எடுத்துக்காட்டினார்.
ஒவ்வொரு விளையாட்டும் இறைவனோடு இணைந்து வாழும் வாழ்வின் ஓர் உவமையாக மாற வேண்டும் என்று குறிப்பிட்ட திருத்தந்தை, மகிழ்ச்சியோடும் உழைப்போடும் செயலாற்றவும், தோல்வியின் போது பணிவோடும், வெற்றியின் போது நன்றியுணர்வோடும் வாழ அது கற்றுத்தர வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இறுதியாக, நம்மை ஒரே குழுவாக மாற்றி, வரலாற்றில் அமைதியையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்ப இறைவனோடு நம்மை இணைக்கும் தூய ஆவியின் ஆற்றல், நம்மிடம் எப்போதும் குறையாமல் இருக்கட்டும்" என்று கூறி திருத்தந்தை தனது இறைவேண்டலை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
