தேடுதல்

பெரு நாட்டின் குடியரசுத் தலைவரை திருத்தந்தை பதினான்காம் லியோ வத்திக்கானில் சந்தித்தார். பெரு நாட்டின் குடியரசுத் தலைவரை திருத்தந்தை பதினான்காம் லியோ வத்திக்கானில் சந்தித்தார்.  (@Vatican Media)

பெரு அரசுத் தலைவருடன் திருத்தந்தை சந்திப்பு!

பெரு குடியரசுத் தலைவர் ஜோசே மரியா பால்காசார் செலாடா அவர்கள், ஜூன் 18 அன்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களை திருப்பீடத்தில் சந்தித்தார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஜூன் 18, வியாழனன்று, பெரு குடியரசுத் தலைவர் ஜோசே மரியா பால்காசார் செலாடா அவர்களை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

திருத்தந்தையுடனான இந்த சந்திப்பைப் தொடர்ந்து,  பால்காசார் செலாடா அவர்கள்,  திருப்பீடச்  செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் மற்றும் பன்னாட்டு உறவுகளு க்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் இருவரையும் சந்தித்து உரையாடினார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் குறிப்பிட்டுள்ளது.

இச்சந்திப்புகள் நட்புறவான சூழலில் நடைபெற்றதுடன், திருப்பீடத்திற்கும் பெரு நாட்டிற்கும் இடையிலான நல்லுறவுகள் குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டது என்றும், மேலும், அந்த உறவுகளை எதிர்காலத்தில் மேலும் வலுப்படுத்துவதற்கான விருப்பமும் வெளிப்படுத்தப்பட்டது என்றும் அச்செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது .

கலந்துரையாடல்களில், பெரு நாட்டின் சமூக மற்றும் பொருளாதார நிலவரங்கள், சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள், பொதுநலனை மேம்படுத்தும் முயற்சிகள், சமூக உரையாடல் மற்றும் ஒற்றுமையை ஊக்குவித்தல் போன்ற விடயங்கள் முக்கியமாக எடுத்துரைக்கப்பட்டன.

மாநில மற்றும் உலகளாவிய சமூக-அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாகவும் கருத்துகள் பரிமாறப்பட்டன. குறிப்பாக, புலம்பெயர்வு பிரச்சினை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் பல்வேறு மோதல்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து இருதரப்பினரும் கவனம் செலுத்தியதாக அச்செய்தித் தொடர்பகம் குறிப்பிட்டுள்ளது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

19 ஜூன் 2026, 09:00