மாட்ரிட்டில் அகுஸ்தின் சபை துறவிகளுடன் திருத்தந்தை!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
ஸ்பெயின் நாட்டிற்கு அதிகாரப்பூர்வத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டுள்ள திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், மாட்ரிட் நகரில் அகுஸ்தின் சபையினரை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
மாட்ரிட் நகரின் புகழ்பெற்ற உட்புற விளையாட்டு மற்றும் கலை அரங்கமான 'மோவிஸ்டார் அரங்கில்' (Movistar Arena) கலை, கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் விளையாட்டுத் துறைப் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கு முன்பாக, ஜூன் 7, ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இந்தச் சிறப்புச் சந்திப்பு நடைபெற்றது. இதில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 220 அகுஸ்தின் சபைத் தந்தையர்களும், அகுஸ்தின் ஆன்மீகக் குடும்பத்தின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் தொடக்கமாக, அகுஸ்தின் சபையின் மாநிலத் தலைவர் திருத்தந்தைக்குத் தனது மனமார்ந்த வரவேற்புரையை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்களிடம் உரையாற்றிய திருத்தந்தை, இந்த நெகிழ்ச்சியான சந்திப்பிற்கான வாய்ப்பிற்குத் தனது ஆழந்த நன்றியைத் தெரிவித்தார். இன்றைய பதற்றம் நிறைந்த உலகச் சூழலில், அகுஸ்தினியர்களுக்கு இடையேயான கூட்டுறவும், இதயங்களின் ஒருமைப்பாடும் வரலாற்றின் இந்தத் தருணத்தில் ஒட்டுமொத்த உலகிற்கும் அமைதியைத் தரும் ஒரு சிறந்த செய்தியாக அமையும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்தச் சந்திப்பின் போது, அங்கிருந்த தியான வாழ்வு வாழும் துறவறச் சகோதரிகளின் (Contemplative Sisters) வருகையைத் திருத்தந்தை தனித்துக் குறிப்பிட்டுப் பாராட்டினார். இன்றைய நவீன உலகில் மனிதர்களின் மௌனமும், மனிதன் தன் சொந்த இதயத்திற்குள் நுழைந்து சுயபரிசோதனை செய்து பார்க்கும் திறனும் படிப்படியாகத் தொலைந்து போய்க்கொண்டிருக்கின்றன. இத்தகைய சவாலான இக்காலத்தில், ஒட்டுமொத்த சமூகச் செயல்பாடுகளுக்கும் ஆழமான, உண்மையான அர்த்தத்தை வழங்குவதற்கு இத்துறவறச் சகோதரிகளின் அர்ப்பண வாழ்வு மிக இன்றியமையாதது என்று அவர்களின் ஆன்மீகப் பணியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
இறுதியாக, அங்கு குழுமியிருந்த அனைவரும் இணைந்து 'விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே' என்ற இறைவேண்டல் செபத்தை செபிக்குமாறு திருத்தந்தை அழைப்பு விடுத்தார். தொடர்ந்து, அகுஸ்தின் சபைக் குடும்பத்தினர் அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கிய திருத்தந்தை, அங்கிருந்த ஒவ்வொருவரையும் தனித்தனியாகச் சந்தித்துத் தனது வாழ்த்துக்களையும் அன்பையும் பகிர்ந்துகொண்டார்.
திருப்பீடச் செய்தித் தொடர்பகம்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
