நியூயார்க் நகரின் ஐக்கிய யூத மேல்முறையீட்டு கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை நியூயார்க் நகரின் ஐக்கிய யூத மேல்முறையீட்டு கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை   (ANSA)

யூத-கத்தோலிக்க உறவை வலுப்படுத்த அழைப்பு விடுத்த திருத்தந்தை!

நியூயார்க் நகரின் ஐக்கிய யூத மேல்முறையீட்டு கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்த திருத்தந்தை, யூதர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு மற்றும் அனைத்து வகையான பாகுபாடுகளையும் நிராகரிப்பதாக வலியுறுத்தினார். மேலும், யூதர்களும் கத்தோலிக்கர்களும் உரையாடல், பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பின் வழியாக உலக அமைதிக்காக இணைந்து செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

யூதர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு, பாகுபாடு, துன்புறுத்தல் மற்றும் சகிப்பின்மையின் அனைத்து வடிவங்களையும் திருஅவை நிராகரிக்கிறது என்றும், பிளவுகளும் மோதல்களும் நிறைந்த இன்றைய உலகில், யூதர்களும் கத்தோலிக்கர்களும் பொதுநலனுக்காகவும் உலக அமைதிக்காகவும் இணைந்து செயல்பட அழைக்கப்படுகிறார்கள் என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.

ஜூன் 15, திங்களன்று, நியூயார்க் நகரின் ஐக்கிய யூத மேல்முறையீட்டு கூட்டமைப்பின் (United Jewish Appeal-Federation) பிரதிநிதிகளை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, அவர்களின் மனிதாபிமான சேவைகளைப் பாராட்டியதுடன், கத்தோலிக்க திருஅவைக்கும் யூத சமூகத்திற்கும் இடையிலான வலுவான உறவையும் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

வறுமையில் வாழ்பவர்கள், அகதிகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய மக்களுக்காக நியூயார்க், இஸ்ரேல் மற்றும் உலகின் எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் மனிதாபிமான உதவிகளையும் சமூகப் பணிகளையும் வழங்கி வரும் இவ்வமைப்பின் சேவைகளை பாராட்டிய திருத்தந்தை, மனித மாண்பு, சகோதரத்துவ உணர்வு மற்றும் தேவைப்படுவோரின் நலனில் அக்கறை செலுத்தும் பொதுவான அர்ப்பணிப்பையே இச்சேவைகள் பிரதிபலிக்கின்றன என்று கூறினார்.

மேலும் 66 ஆண்டுகளுக்கு முன்பு, திருத்தந்தை இருபத்து மூன்றாம் யோவான் அவர்கள் இவ்வமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை சுட்டிக்காட்டிய திருத்தந்தை, “நான் யோசேப்பு, உங்கள் சகோதரன்” என்ற அவரது புகழ்பெற்ற வார்த்தைகளை மேற்கோள்காட்டி, யூதர்களும் கிறிஸ்தவர்களும் பகிர்ந்து கொள்ளும் பொதுவான ஆன்மீக பாரம்பரியத்தை அந்த வார்த்தைகள் வெளிப்படுத்துவதாக கூறினார்.

கிறிஸ்தவம் அல்லாத சமயங்களுடனான திருஅவையின் உறவைப் பற்றி இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் வெளியிட்ட Nostra Aetate அறிக்கையை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, அதன் 60ஆம் ஆண்டு நிறைவை கடந்த ஆண்டு கொண்டாடிய திருஅவை, அந்த ஆவணத்தை கத்தோலிக்கர் மற்றும் யூதர்களுக்கிடையிலான உரையாடல், ஒருவருக்கொருவர் மரியாதை, நட்பு மற்றும் ஒத்துழைப்பின் புதிய காலத்தைத் தொடங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாகக் கருதுவதாக தெரிவித்தார்.

இறுதியாக, ஏழைகளுக்கு உதவுவதிலும், வெறுப்புணர்வை எதிர்த்துப் போராடுவதிலும், ஒருவருக்கொருவர் புரிதலை வளர்ப்பதிலும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் அவ்வமைப்பின் பிரதிநிதிகளுக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை, அவர்களின் பணி உரையாடலை வலுப்படுத்தவும், ஒருவருக்கொருவர் கொண்டுள்ள மதிப்பை மேலும் பலப்படுத்தவும் உலகம் ஆவலுடன் எதிர்நோக்கும் அமைதியை உருவாக்கவும் துணைபுரிய வேண்டும் என்று வாழ்த்தி தனது உரையை திருத்தந்தை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

16 ஜூன் 2026, 11:14