தேடுதல்

ஜூன் 26, 2025 அன்று ROACO உறுப்பினர்களை திருத்தந்தை பதினான்காம் லியோ சந்தித்தார். ஜூன் 26, 2025 அன்று ROACO உறுப்பினர்களை திருத்தந்தை பதினான்காம் லியோ சந்தித்தார்.  (ANSA)

கிழக்கு திருஅவைகளின் பாரம்பரியத்தைப் பாதுகாக்க உருவாக்கப் பணி அவசியம்!

கிழக்கு திருஅவைகளின் பாரம்பரியத்தைப் பாதுகாக்க, எதிர்கால அருள்பணியாளர்கள், மற்றும் நிரந்தர உதவி அருள்பணியாளர்களின் பயிற்சிக்கான உருவாக்கப் பணிக்கு ஊக்கம் அளித்தல் அவசியம்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

கிழக்கு மறைக்கல்விக் கல்லூரிகளில் அருள்பணியாளர்கள் மற்றும் துறவியரின் உருவாக்கத்திற்கு ஆதரவளிப்பது மிகவும் முக்கியமானது என்றும், திருஅவை ஒன்றுபட்டதாக இருந்தாலும் ஒரே மாதிரியானதல்ல என்றும், பல்வேறு ஆன்மீக மரபுகள், வழிபாட்டு முறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் அதன் செழுமையை அதிகரிக்கின்றன என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.

ஜூன் 18, வியாழனன்று, கிழக்கு திருஅவைகளுக்கான உதவி அமைப்புகளின் ஒன்றியமான ROACO-வின் முழுக்கூட்டப் பங்கேற்பாளர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, கிழக்கு கத்தோலிக்க திருஅவைகளின் ஆன்மீக செல்வங்கள் உலகத் திருஅவைக்கு மிகப்பெரிய கொடையாக இருப்பதாக எடுத்துக்காட்டினார்.

கிழக்கு திருஅவைகளின் பாரம்பரியத்தைப் பாதுகாக்க, எதிர்கால அருள்பணியாளர்கள், மற்றும் நிரந்தர உதவி அருள்பணியாளர்களின் பயிற்சிக்கான உருவாக்கப் பணிக்கு ஊக்கம் அளித்தல் அவசியம் என்று குறிப்பிட்ட திருத்தந்தை, அறிவும் அன்பும் இணைந்த சேவைக்கு தூய ஆவியால் நிறைந்த இதயமும் தேவை என்று வலியுறுத்தினார்.

உலகின் பல பகுதிகளில் நீடித்து வரும் போர்களும் அரசியல் நிலையற்ற தன்மையும் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த திருத்தந்தை, மனித வாழ்வை அழிக்கும் போர் மனப்பான்மைக்கு மாறாக, திருஅவை அமைதி, நம்பிக்கை மற்றும் புதிய வாழ்வை வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார்.

மேலும், போர்களின் விளைவாக தங்கள் தாயகங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளான கிழக்கு கிறிஸ்தவர்களின் துயரமான நிலையை சுட்டிக்காட்டி  அவர்களுக்கான ஒற்றுமையையும் அக்கறையையும் திருத்தந்தை வெளிப்படுத்தினார்.

இறுதியாக, நிலையற்ற தன்மை என்பது கிழக்கு திருஅவைகளை பலவீனப்படுத்தும் ஒரு பெரும் கொடுமை என்று குறிப்பிட்ட திருத்தந்தை, ஆயுதக் குழுக்கள், பலவீனமான நிறுவனங்கள் மற்றும் வெளிப்புற தலையீடுகள் சமூக வளர்ச்சியைத் தடுக்கின்றன என்றும், மனித மாண்பையும் அமைதியையும் மீட்டெடுக்க அனைவரும் மனமாற்றம் பெற்று இறைவேண்டல் செய்யுமாறு அழைப்பு விடுத்தும்  தனது உரையை திருத்தந்தை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

19 ஜூன் 2026, 08:52