தேடுதல்

திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள் OEI–திருப்பீட சந்திப்பில் பங்கேற்றவர்களைச் சந்தித்த போது. திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள் OEI–திருப்பீட சந்திப்பில் பங்கேற்றவர்களைச் சந்தித்த போது.  (@Vatican Media)

மனநலப் பிரச்சினைகளுக்குத் தொழில்நுட்பத் தீர்வுகள் மட்டும் போதாது!

கல்வி என்பது தனிமனிதவாதத்தை வளர்க்காமல், இணக்கமான உறவையும் உலகளாவிய ஒருமைப்பாட்டையும் உருவாக்க வேண்டும்.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

அறிவியல், உளவியல் மற்றும் மருத்துவத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் அதே வேளையில், மனநலப் பிரச்சினைகளுக்கு வெறும் தொழில்நுட்பத் தீர்வுகள் மூலமாக மட்டுமே தீர்வு கண்டுவிட முடியாது என்று வலியுறுத்திய திருத்தந்தை, இளைஞர்களுக்கு வாழ்வின் அர்த்தம், அன்பு மற்றும் நம்பிக்கை நிறைந்த ஒரு பரந்த வாழ்வியல் எல்லையும் தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

மே 30, சனிக்கிழமையன்று, கல்வி, மனநலம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் குறித்த 'ஐபெரோ-அமெரிக்க நாடுகளின் அமைப்பின்' (OEI) உறுப்பினர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு மொழிந்த  திருத்தந்தை, நாளுக்கு நாள் டிஜிட்டல்மயமாகி வரும் இந்த உலகத்தில் இளைஞர்கள் தங்களுக்கான வாழ்வின் அர்த்தத்தையும் நம்பிக்கையையும் கண்டடைய உதவ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

பாரம்பரிய நெசவுத் துணிகளின் உருவகத்தைப் பயன்படுத்தி விளக்கிய திருத்தந்தை, தனித்தனி நூலிழைகள் ஒரு பெரிய வடிவமைப்புக்குள் இணையும் போதுதான் அர்த்தம் பெறுகின்றன என்றும், அதுபோலவே, கல்வியானது தனிமைப்படுத்தப்பட்ட தனிமனிதவாதத்தை வளர்க்காமல், மாறாக இணக்கமான உறவு, ஒருமைப்பாடு மற்றும் ஒரே மனிதக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்ற உணர்வை உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

வெவ்வேறு கலாச்சாரங்கள் தங்களுக்குரிய தனித்துவமான கொடைகளை மனிதகுலத்திற்கு வழங்கும் வகையிலான ஒரு உலகளாவிய கல்வி முயற்சியை முன்னெடுக்குமாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை,  இன்றைய இளைஞர்கள் பலர் மேம்பட்ட தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டிருந்தாலும், தங்களது வாழ்வில் நோக்கம், நம்பிக்கை மற்றும் சரியான வழியைக் கண்டறியப் போராடி வருகின்றனர் என்று கவலை தெரிவித்தார்.

இளைஞர்களிடையே அதிகரித்து வரும் தனிமை, பதற்றம் மற்றும் உளவியல் ரீதியான பலவீனங்களுக்குப் பின்னால் பெரும்பாலும், "என் வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறதா?" என்ற ஆழமான கேள்வியே மறைந்திருக்கிறது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, மனிதர்கள் என்பவர்கள் வெறும் தரவுகளோ செயல் திறனோ அல்லது அல்காரிதம்களோ (Algorithms) அல்ல என்றும், மனிதர்களை வெறும் உற்பத்தித் திறனாகச் சுருக்குவது ஆழமான அகத் துன்பத்திற்கே வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டார்.

கல்வியாளர்கள், குடும்பங்கள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், ஆன்மீகச் சமூகங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் ஆகியவை ஒன்றிணைந்து செயல்பட்டு, இளைஞர்களிடம் அக வாழ்வு, சிந்தனைத் திறன், உண்மையான உறவுகள் மற்றும் இறைவனை நோக்கிய திறந்த மனநிலை ஆகியவற்றை வளர்க்குமாறு திருத்தந்தை வலியுறுத்தினார்.

இறுதியாக, இளைய தலைமுறையினர் மிகவும் நீதியான, நம்பிக்கை நிறைந்த மற்றும் சகோதரத்துவமிக்க ஒரு உலகைக் கட்டியெழுப்புவதை நோக்கி அவர்களை வழிநடத்த, தொடர்ந்து இத்தகைய கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அவர்களுக்கு  அழைப்பு விடுத்து தனது உரையை திருத்தந்தை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 ஜூன் 2026, 08:18