தேடுதல்

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தென் கொரியக் குடியரசுத் தலைவர் லீ ஜே-மியுங் அவர்களை வரவேற்று சந்தித்தபோது. திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தென் கொரியக் குடியரசுத் தலைவர் லீ ஜே-மியுங் அவர்களை வரவேற்று சந்தித்தபோது.  (@VATICAN MEDIA)

தென்கொரிய அதிபர் லீ ஜே-மியுங்குடன் திருத்தந்தை சந்திப்பு

வத்திக்கானில் கொரிய அதிபர் லீ ஜே-மியுங் திருத்தந்தையைச் சந்தித்து, இரு நாடுகளின் நீண்டகால நல்லுறவு மற்றும் சமூகப் பங்களிப்புகள் குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும், 2027 உலக இளைஞர் தினம் மற்றும் நிலவரங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

ஜூன் 15, திங்களன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கொரியக் குடியரசின் அரசுத் தலைவரான லீ ஜே-மியுங் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

திருத்தந்தையுடனான சந்திப்பிற்குப் பிறகு, அதிபர் லீ ஜே-மியுங் அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் மற்றும் பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் ஆகியோரையும் சந்தித்தார்.

திருப்பீடச் செயலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது, கொரியக் குடியரசிற்கும் திருப்பீடத்திற்கும் இடையில் 1963-ஆம் ஆண்டு, அதாவது 63 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட நல்லுறவு குறித்து இருதரப்பினரும் உரையாடினர்.

1963 லிருந்து, இரு நாடுகளும் நெருக்கமான உறவைப் பேணி வருகின்றன என்றும், இதன் வெளிப்பாடாக திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள் 1984 மற்றும் 1989 ஆகிய ஆண்டுகளில் இருமுறை கொரியாவிற்கு வருகை புரிந்துள்ளார் என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் குறிப்பிட்டுள்ளது.

திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்களும் கொரிய அதிபரும், "குறிப்பாகக் கல்வி மற்றும் சமூக நலத் துறைகளில் கொரிய சமூகத்திற்கு உள்ளூர் கத்தோலிக்க திருஅவை வழங்கி வரும் ஆக்கபூர்வமான பங்களிப்பு" குறித்துப் கலந்துரையாடினர் என்று அச்செய்தித் தொடர்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இச்சந்திப்பில், 2027-ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள உலக இளைஞர் தினம் குறித்தும், "கொரியா மற்றும் பன்னாட்டு சூழலின் சில விடயங்கள்" குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

2014-ஆம் ஆண்டு ஆறாவது ஆசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அங்கு பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

16 ஜூன் 2026, 12:12