தேடுதல்

திருத்தந்தை பதினான்காம் லியோ திருத்தந்தை பதினான்காம் லியோ   (@Vatican Media)

அன்பெனும் மொழியால் சமுதாயத்தைக் கட்டியெழுப்புங்கள்!

வெறும் எண்களும் தரவுகளும் மட்டுமே ஒரு சமுதாயத்தை உருவாக்கிவிட முடியாது; மக்களின் இதயங்கள் ஒன்றிணைந்து பாடும்போதுதான் உண்மையான ஆன்மீகக் குடும்பம் உருவாகும்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஜூன் 09, செவ்வாயன்று, திருத்தந்தை ஸ்பெயின் நாட்டிற்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின் ஒரு நிகழ்வாக மேட்ரிட் நகரில் அமைந்துள்ள IFEMA Madrid' கண்காட்சி மையத்தின் 3-வது அரங்கில் கூடியிருந்த கத்தோலிக்கத் தன்னார்வலர்கள் மற்றும் ஆன்மீகப் பணியாளர்களை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் சந்தித்தார். அச்சந்திப்பின்போது திருத்தந்தை ஆற்றிய உரை:

அன்பான சகோதர, சகோதரிகளே!

இறைவனைப் போற்றுவதிலும், இந்த அழகான திருஅவைக் குடும்பத்தின் (Ecclesial family) பிணைப்பை வலுப்படுத்துவதிலும் உங்களுடன் எனது குரலையும் இணைப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். நாம் இணைந்து பாடும் இப்பாடல், வெறும் தரவுகளும் எண்களும் மட்டுமே ஒரு சமுதாயத்தை உருவாக்கிவிட முடியாது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. மாறாக, நமது இதயங்கள் ஒன்றிணைந்து பாட வேண்டும். வாழ்க்கையின் அர்த்தத்தை நாம் அனைவரும் இணைந்து கண்டறியவும், நம் வாழ்வில் இறைவனின் பிரசன்னத்தைக் கொண்டாடவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம். குறிப்பாக, கிறிஸ்துவின் மீட்புப் பணிகளை நாம் நினைவுகூரும் திருஅவை வழிபாட்டின் வழியாக இதனை நாம் செய்கிறோம்.

கலாச்சாரமும் பன்முகத்தன்மையும் நிறைந்த ஒரு மாபெரும் நகரத்தின் மையப்பகுதியில் நீங்கள் ஒரு திருஅவையாக வாழ்ந்து வருகிறீர்கள். அதே வேளையில், சவால்கள், ஏமாற்றங்கள் மற்றும் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மைகளும் இந்நகர சூழலில் நிறைந்துள்ளன. இத்தகைய சூழ்நிலைகளிலும், நற்செய்தி நமக்கான நம்பிக்கையின் பாதையைத் திறந்து காட்டுகிறது. கிறிஸ்தவ மகிழ்ச்சி என்பது கடந்து போகும் ஒரு தற்காலிக உணர்ச்சியாக மட்டும் இருந்துவிடக் கூடாது; அது தனிநபர்களையும், குடும்பங்களையும், ஒட்டுமொத்த சமுதாயத்தையும் புதுப்பிக்கும் ஒரு நிலையான வாழ்க்கை முறையாக மாற வேண்டும்.

திருமுழுக்கு என்பது உண்மையிலேயே நமது வாழ்க்கையை மாற்றியமைக்கிறது. நாம் வெவ்வேறு பின்னணிகளில் இருந்து வந்திருந்தாலும், கிறிஸ்துவின் வழியில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்துள்ளோம். பன்முகத்தன்மை என்பது ஒருபோதும் அச்சுறுத்தல் அல்ல, மாறாக அது ஒரு கொடை. ஒற்றுமை என்பது எல்லாரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பதல்ல என்பதைத் திருஅவை நமக்குக் காட்டுகிறது. பிறருக்குச் செவிசாய்த்தல், உரையாடல் மற்றும் கூட்டுப் பொறுப்புணர்வு ஆகியவற்றின் மூலம், நம்மிடையே உள்ள வேறுபாடுகளைச் சகோதரத்துவமாகவும் அமைதியாகவும் நம்மால் மாற்றியமைக்க முடியும்.

பெரிய நகரங்களில் திருஅவையின் ஆன்மீகப் பணி இன்று மிக அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ளது. புதிய சிந்தனைகளும், நவீன கலாச்சாரங்களும், எதிர்காலத்திற்கான புதிய பார்வைகளும் எந்தெந்த இடங்களில் வடிவமைக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் நம்முடைய நம்பிக்கை சாட்சியமாக விளங்குகிறதா என்பதை நாம் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும். இதற்கு நமக்குத் தேவையானது குறுகிய எண்ணங்கள் இல்லாத பரந்த மனப்பான்மை, மக்களை நேரில் சந்திக்கும் பண்பு மற்றும் கிறிஸ்து ஏற்கனவே எங்கு ஒளிர்கிறாரோ அங்கு அவரைத் துணிச்சலோடு தேடிச் சென்று கண்டடைவதே ஆகும்.

இதன் காரணமாக, நாம் நமக்குத் தெரிந்த நெருக்கமான வட்டங்களுக்குள்ளேயே முடங்கிப் போய்விடக் கூடாது. நாம் நம் எல்லைகளைத் தாண்டி வெளியே வரவும், மற்றவர்களை அன்போடும் கனிவோடும் சந்திக்கவும், நமது வாழ்க்கை முறையின் மூலமாகவே நற்செய்தியை அறிவிக்கவும் அழைக்கப்பட்டுள்ளோம். கனிவான அன்பு என்பது ஒரு சிறிய விடயம் அல்ல; அது மூடிய கதவுகளைத் திறக்கிறது, மனக் காயங்களைக் குணப்படுத்துகிறது, மேலும் மக்கள் தாங்கள் வரவேற்கப்படுவதையும் நேசிக்கப்படுவதையும் உணரச் செய்கிறது.

உங்களது சபைகள், சமூகக் கூட்டமைப்புகள் மற்றும் பங்குக் கூட்டங்கள் வெறும் நிர்வாக அமைப்புகளாக மட்டுமே சுருங்கிவிடக் கூடாது. மாறாக, அவை தூய ஆவியாரின் குரலுக்குச் செவிசாய்க்கும் இடங்களாகவும், இறைவன் நமக்குக் காட்டும் பாதையை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தேடும் தளங்களாகவும் விளங்க வேண்டும். எனவே, பிறருக்குச் செவிசாய்க்கும் பண்பையும், தெளிந்து தேர்தலையும் வளர்த்துக் கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் நான் ஊக்குவிக்கிறேன்.

நமது ஆன்மீகப் பணியாளர்கள் எப்போதும் தங்களது மக்களுடன் நெருங்கிப் பழகி, அவர்களின் குரலுக்குச் செவிசாய்த்து, அவர்களோடு இணைந்து பயணிக்க வேண்டும். அப்போதுதான் நற்செய்தியின் உண்மையான மகிழ்ச்சி அவர்களின் திருப்பணியைப் புதுப்பிக்கும்.

அன்பான நம்பிக்கையாளர்களே, நீங்கள் எதற்கும் தயங்கவோ அஞ்சவோ தேவையில்லை. நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் நம்பிக்கைப் பாதைக்குத் திரும்புபவர்களையும், முதன்முறையாகக் கிறிஸ்துவை அறிந்துகொள்பவர்களையும் திறந்த மனதுடன் இன்முகத்தோடு வரவேற்க வேண்டும்.

நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் உங்களது வாழ்க்கையே ஒரு வாழும் நற்செய்தியாக அமையட்டும். ஏனெனில், 'அன்பு' என்ற உலகளாவிய மொழி மட்டும்தான் ஒரு மனிதனை எங்கிருந்தாலும் அவனது சொந்த இல்லத்தில் இருப்பதைப் போன்ற பாதுகாப்பான உணர்வைத் தரும். உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள், இறை ஆசி என்றும் உங்களோடு இருக்கட்டும்!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

09 ஜூன் 2026, 12:29