திருத்தந்தை மறைத்தூதுக் கழகத்தின் பொதுப்பேரவையில் கலந்துகொண்டவர்களை திருப்பீடத்தில் சந்தித்த போது. திருத்தந்தை மறைத்தூதுக் கழகத்தின் பொதுப்பேரவையில் கலந்துகொண்டவர்களை திருப்பீடத்தில் சந்தித்த போது.  (@Vatican Media)

கிறிஸ்துவில் ஒன்றுபட்டு நற்செய்திப் பணியாற்றுவோம்

வத்திக்கானில் நடைபெற்ற திருத்தந்தை மறைத்தூதுக் கழகத்தின் பொதுப்பேரவையில் உரையாற்றிய திருத்தந்தை, உலக மறைபரப்பு ஞாயிறின் 100-வது ஆண்டு நிறைவு உள்ளிட்ட முக்கிய மைல்கற்களைக் குறிப்பிட்டு, மறைபரப்புப் பணிகளுக்கு ஆன்மீக மற்றும் நிதியுதவிகளை வழங்க கத்தோலிக்க சமூகத்திற்கு அழைப்பு விடுத்தார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

உலக மறைபரப்பு ஞாயிறன்று, புதிய பகுதிகளில் நடக்கும் நற்செய்திப் பணிகளுக்காகவும், இளம் திருஅவைகளின் வளர்ச்சிக்காகவும் ஜெபிக்கவும், தங்களின் ஆன்மீக மற்றும் நிதியுதவிகளை வழங்கவும் ஒவ்வொரு கத்தோலிக்க சமூகமும் அழைக்கப்படுகிறது என்று திருத்தந்தை குறிப்பிட்டார்.

ஜூன் 01, திங்களன்று, திருத்தந்தை மறைத்தூதுக் கழகத்தின் பொதுப்பேரவையில் கலந்துகொண்டவர்களை திருப்பீடத்தில் சந்தித்த போது இவ்வாறு கூறிய திருத்தந்தை, நீண்ட காலமாக நிலைபெற்றுள்ள திருஅவைகளில் உள்ளவர்கள் உட்பட, அனைத்து கத்தோலிக்கர்களும் திருஅவையின் மறைபரப்பு உணர்வில் பங்குகொள்ளும் தங்களது பொறுப்பை உலக மறைபரப்பு ஞாயிறு நினைவூட்டுகிறது என்று சுட்டிக்காட்டினார்.

பல முக்கியமான மறைபரப்பு ஆண்டுவிழாக்களை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, இதில் உலக மறைபரப்பு ஞாயிறின் 100-வது ஆண்டு நிறைவும், திருத்தந்தையின் மறைபரப்பு ஒன்றியத்தின் 110-வது ஆண்டு நிறைவும் அடங்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும், உலகெங்கும் நற்செய்தியைப் அறிவிப்பதிலும், இளம் திருஅவைகளை ஆதரிப்பதிலும் காட்டிய அர்ப்பணிப்புக்காக, உலகெங்கிலும் உள்ள மறைபரப்பு பணியாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்ட திருத்தந்தை, இதன் மூலம் திரட்டப்படும் நிதியானது, மறைபரப்பு நிலங்களில் உள்ள 1,130-க்கும் மேற்பட்ட திருஅவை எல்லைகள் (ecclesiastical territories), மறைபரப்பு முயற்சிகள் மற்றும் அருள்பணியாளர்கள், துறவிகளின் பயிற்சி ஆகியவற்றிற்கு ஆதரவளிக்க உதவுகிறது என்றும் எடுத்துக்காட்டினார்.

வணக்கத்திற்குரிய பேராயர் ஃபுல்டன் ஜே. ஷீன் (Fulton J. Sheen) அவர்களுக்கு விரைவில் வழங்கப்படவிருக்கும் அருளாளர் பட்டத்தை வரவேற்ற திருத்தந்தை, மேலும், நற்செய்தியைப் அறிவிக்கவும், உலகம் முழுவதும் உள்ள மறைபரப்புப் பணிகளுக்கு ஆதரவளிக்கவும் நவீன ஊடகங்களைப் பயன்படுத்திய ஒரு ஆற்றல்மிக்க நற்செய்தியாளர் என்று அவரைப் பாரட்டினார்.

பிரிவினைகளும், மோதல்களும், போர்களும் நிறைந்த இந்த உலகில் அமைதியின் அரசரான கிறிஸ்துவை உலகிற்கு அறிவிப்பதில் திருத்தந்தையின் நான்கு மறைபரப்புச் சங்கங்கள் எவ்வளவு முக்கியப் பங்காற்றுகின்றன என்பதை திருத்தந்தை வலியுறுத்தினார்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதிலும், அந்தந்த நாடுகளைச் சேர்ந்த உள்ளூர் அருள்பணியாளர்களையும், துறவிகளையும் உருவாக்குவதிலும் திருத்தந்தை மறைத்தூதுக் கழகங்கள் செய்யும் பணிகளை  திருத்தந்தை பாராட்டி மகிழ்ந்தார்.

"கிறிஸ்துவுக்குள் ஒன்றுபட்டு, மறைபரப்புப் பணியில் இணைவோம்" (One in Christ, United in Mission) என்ற 2026-ஆம் ஆண்டின் உலக மறைபரப்பு ஞாயிறு மையக்கருத்தை மேற்கோள்காட்டிய திருத்தந்தை, இன்னும் ஆழமான ஆன்மீக உறவுக்கும், மறைபரப்புப் பணியின் மறுமலர்ச்சிக்கும், தொடர்ச்சியான மனமாற்றத்திற்கும் அழைப்பு விடுத்தார்.

இறுதியாக, நற்செய்தி அறிவிப்பின் மையமாக கிறிஸ்துவை நிலைநிறுத்தவும், மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் புதிய எழுச்சியோடு திருஅவையின் மறைபரப்புப் பணியைத் தொடரவும் அவர்களைக் கேட்டுக்கொண்டு தனது உரையை திருத்தந்தை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 ஜூன் 2026, 08:30