தேடுதல்

ஜெரோம் லெஜூன் அறக்கட்டளையின் உறுப்பினர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது ஜெரோம் லெஜூன் அறக்கட்டளையின் உறுப்பினர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது  (@VATICAN MEDIA)

மனித மாண்பையும் உயிரின் மதிப்பையும் காக்க திருத்தந்தை அழைப்பு!

ஆராய்ச்சி, சிகிச்சை மற்றும் உயிர் பாதுகாப்பு பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் ஜெரோம் லெஜூன் அறக்கட்டளையை ஊக்குவித்த திருத்தந்தை, அறிவியல் மற்றும் மருத்துவம் எப்போதும் மனித உயிரின் சேவைக்காக இருக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு மனிதரின் உள்ளார்ந்த மாண்பை மதித்து காக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் துயரத்தால் ஆழமாகத் தொடப்பட்ட லெஜூன், தனது வாழ்நாளை அறிவியல் ஆராய்ச்சிக்கும், நோயாளிகளின் நலனுக்குமான மருத்துவப் பணிக்கும் அர்ப்பணித்தார் என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் பாராட்டினார்.

ஜூன் 22, திங்களன்று, ஜெரோம் லெஜூன் அறக்கட்டளையின் உறுப்பினர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, நவீன மரபணு அறிவியலின் முன்னோடியும், டவுன் சிண்ட்ரோம் எனப்படும் டிரைசோமி 21 மரபணுக் குறைபாட்டை கண்டறிந்த விஞ்ஞானியுமான ஜெரோம் லெஜூனின் பிறந்த நூற்றாண்டை எடுத்துக்காட்டினார்.

“மருத்துவம் என்பது நோயை வெறுப்பதும், நோயாளியை நேசிப்பதும் ஆகும்” என்ற அவரது கொள்கையை சுட்டிக்காட்டிய திருத்தந்தை, மிகவும் பலவீனமானவர்களின் உயிரையும் மாண்பையும் பாதுகாப்பதற்காக லெஜூன் தன் வாழ்க்கையை அர்ப்பணித்ததாகக் குறிப்பிட்டார்.

டிரைசோமி 21 மரபணுக் குறைபாட்டை கண்டறிந்த அவரது அறிவியல் சாதனை, பிறக்குமுன் குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து அழிக்கும் புதிய யூஜெனிக்ஸ் நடைமுறைகளுக்குப் பயன்படுத்தப்படுவதை லெஜூன் எதிர்த்தார் என்றும், ஒவ்வொரு மனிதருக்கும் கடவுள் வழங்கிய உள்ளார்ந்த மாண்பைத் துணிவுடன் பாதுகாத்தார் என்றும் திருத்தந்தை தெரிவித்தார்.

இன்றும் ஜெரோம் லெஜூன் அறக்கட்டளை ஆராய்ச்சி, சிகிச்சை மற்றும் மனித உயிரின் பாதுகாப்பு ஆகிய துறைகளில் அவரது பணியைத் தொடர்ந்து வருகிறது என்று பாராட்டிய திருத்தந்தை, சமூகத்தில் உண்மை, உயிர் மற்றும் பொதுநலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுமாறு உறுப்பினர்களை ஊக்குவித்தார்.

இறுதியாக, மனித மாண்பு எந்தச் சூழலிலும் குறையாத ஒன்று என்றும், அறிவியல் மற்றும் மருத்துவம் எப்போதும் உயிரின் சேவைக்காகவே இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி திருத்தந்தை தனது உரையை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

22 ஜூன் 2026, 10:51