"நாளைய நல்வாழ்விற்கான வலைப்பின்னல்: மனிதநேயமும் ஆன்மாவும் மிக்க புதிய சமூகத்தைப் படைப்போம்"

ஸ்பெயின் நாட்டின் கலை, கலாச்சாரம் மற்றும் வரலாற்றுச் செழுமையைப் பாராட்டும் திருத்தந்தை, 'எதிர்காலத் தலைமுறையினருக்கு நாம் என்ன மாதிரியான சமூகத்தை விட்டுச் செல்லப் போகிறோம்?' என்ற சிந்தனைமிக்க கேள்வியை எழுப்புகிறார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஜூன் 07, ஞாயிறன்று, திருத்தந்தை ஸ்பெயின் நாட்டிற்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின் ஒரு நிகழ்வாக மாட்ரிட் நகரில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற உட்புற விளையாட்டு மற்றும் கலை அரங்கமான மோவிஸ்டார் அரங்கத்திற்குச் சென்றார். அங்கு கலாச்சாரம், கலை, பொருளாதாரம் மற்றும் விளையாட்டுத் துறைகளைச் சார்ந்த தலைவர்கள், நிபுணர்கள் மற்றும் இளைஞர்களைச் சந்தித்தார். அச்சந்திப்பின்போது திருத்தந்தை ஆற்றிய உரை: 

அன்பான நண்பர்களே!

இன்று உங்களுடன் இருப்பதில் நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். ஸ்பெயின் நாடு அசாத்தியமான அழகு, படைப்பாற்றல் மற்றும் கலாச்சாரச் செழுமை நிறைந்த ஒரு தேசமாகும். அதன் நகரங்கள், வரலாற்றுச் சின்னங்கள், பல்கலைக்கழகங்கள், தேவாலயங்கள், கலை, இசை மற்றும் மரபுகள் ஆகியவை இந்த நாட்டை வடிவமைத்த தலைமுறையினரின் அறிவுத்திறன், அர்ப்பணிப்பு மற்றும் ஆன்மாவை வெளிப்படுத்துகின்றன.

இந்தப் பாரம்பரியத்தை நாம் வியந்து பாராட்டும் அதே வேளையில், நம்மிடம் நாமே ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும்: எதிர்காலத் தலைமுறையினருக்கு நாம் என்ன மாதிரியான பாரம்பரியத்தை விட்டுச் செல்லப் போகிறோம்? இன்று நாம் எத்தகைய ஒரு சமூகத்தை உருவாக்கி வருகிறோம்?

நமது உலகம் புதுமைகளைப் படைப்பதிலும், உற்பத்தி செய்வதிலும், தொடர்புகொள்வதிலும் வியக்கத்தக்கத் திறன்களைக் கொண்டுள்ளது. "ஆயினும், நாம் உருவாக்கும் படைப்புகளின் ஆன்மாவைக் காக்கவும் நாம் பழகிக்கொள்ள வேண்டும். இல்லையெனில், நமது உழைப்பின் ஆழமான நோக்கம் என்ன அல்லது அது உண்மையாகவே யாருக்குப் பயன்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளாமலேயே, நாம் வெறும் இயந்திரத்தனமாகச் செயல்படுபவர்களாக மாறும் ஆபத்தைச் சந்திப்போம்.

திருஅவை சமகால உலகத்துடன் தொடர்ந்து உரையாடலில் ஈடுபட விரும்புகிறது; ஏனெனில் நன்மை, அழகு மற்றும் உண்மை ஆகியவற்றுக்கான தேடல் ஒவ்வொரு மனித இதயத்திலும் ஆழமாக வேரூன்றியுள்ளது. ஆனால், 'உண்மையான மனிதனாக இருப்பது என்பதன் பொருள் என்ன?' என்ற அடிப்படை கேள்வி இன்னும் நீடிக்கிறது. விசுவாசத்தின் வழியாக, இயேசு கிறிஸ்து இந்த கேள்விக்கு மிக முழுமையான பதிலை வழங்குகிறார் என்றும், ஒவ்வொரு மனிதனின் மாண்பையும் வெளிப்படுத்துகிறார் என்றும் நாம் கண்டறிந்துள்ளோம்.

ஒரு சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்குப் ஒருவரையொருவர் செவிமடுத்தல், மரியாதை மற்றும் மனித மாண்பு ஆகியவற்றின் அடிப்படையிலான உரையாடல் வலைப்பின்னல்களை (Networks of Dialogue) உருவாக்குவது அவசியமாகும். பல்கலைக்கழகங்கள், வணிக நிறுவனங்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தொழில்நுட்பத் தலைவர்கள் என அனைவரும், தங்களின் உழைப்பு மக்களை வெறும் இ லாபத்திற்கான அல்லது வெற்றிக்கான கருவிகளாக நடத்தாமல், அவர்களுக்குச் சேவை செய்வதை உறுதி செய்வதற்கான கூட்டுப் பொறுப்பைக் கொண்டுள்ளனர். குறிப்பாக, தொழில்நுட்ப முன்னேற்றம் என்பது முதியவர்களையும், ஏழைகளையும், குரலற்றவர்களையும் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

வலைப்பின்னல்களைக் (Networks) கட்டியெழுப்புவது என்பது ஒன்றிணைந்து அழகைப் படைப்பதையும் குறிக்கிறது. கலை, இசை, இலக்கியம், கலாச்சாரம் மற்றும் விசுவாசம் ஆகியவை மனித ஆன்மாவை உயர்த்துவதோடு, வாழ்க்கை என்பது வெறும் பொருள்சார்ந்த சாதனைகளையும் தாண்டியது என்பதை நமக்கு நினைவூட்டும் ஆற்றல் கொண்டவை. வரலாறு நெடுகிலும், கத்தோலிக்க விசுவாசம் இன்றுவரை மனிதகுலத்தை வளப்படுத்தும் பல்வேறு உன்னதமான கலைப்படைப்புகளுக்கு உந்துசக்தியாகத் திகழ்ந்துள்ளது.

அதே நேரத்தில், வலைப்பின்னல்களைக் (Networks) கட்டியெழுப்புவது என்பது பிறருக்குச் சுயநலமின்றிச் சேவை செய்வதையும் குறிக்கிறது. உண்மையான முற்போக்கான நீதிநெறி சார்ந்த சமூகம், பொது நலனைத் தன் மையப்புள்ளியாகக் கொண்டு செயல்படுகிறது; மேலும், பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்புகள் ஒவ்வொரு மனிதனின், குறிப்பாக ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களின் மாண்பையும் வளர்ச்சியையும் ஊக்குவிப்பதை அது உறுதி செய்கிறது.

இறுதியாக, விளையாட்டு உலகைப் பற்றியும் நான் குறிப்பிட்டாக வேண்டும். ஒருவரையொருவர் மதித்தல், விடாமுயற்சி, குழு உணர்வு, வெற்றியைக் தலைக்கனம் இல்லாமல் ஏற்கும் பக்குவம் மற்றும் தோல்வியைக் மாண்போடு எதிர்கொள்ளும் குணம் ஆகியவற்றை விளையாட்டு நமக்குக் கற்றுத்தருகிறது. சமூகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் வளர்ப்பதற்கு இவை மிகச் சிறந்த பாடங்களாகும்.

அன்பான நண்பர்களே, இருதரப்பு உரையாடல், ஒருமைப்பாடு, நம்பிக்கை மற்றும் அமைதி நிறைந்த ஒரு புதிய சமூகத்தைப் படைப்பவர்களாக நாம் மாறுவோம். நம்மிடையே இருக்கும் பொதுவான மனிதநேயத்தின் மேன்மை, வருங்காலத் தலைமுறையினருக்கு வழிகாட்டும் ஒளியாகத் தொடர்ந்து பிரகாசித்திட நாம் அனைவரும் கைகோர்த்து உழைப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

07 ஜூன் 2026, 20:47