ஸ்பெயின் திருத்தூப்பயணத்தின்போது செய்தியாளர்களை சந்தித்த திருத்தந்தை!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
ஸ்பெயின் நாட்டிற்குத் தனது திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டுள்ள திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், பத்திரிகையாளர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். விமான பயணத்தின் போது செய்தியாளர்களைச் சந்தித்த திருத்தந்தை, இந்த வருகையின் முக்கியத்துவம் குறித்தும், உலகிற்கான அமைதிச் செய்தி குறித்தும் உரையாடினார். இப்போது திருத்தந்தையின் அச்செய்திக்கு செவிமெடுப்போம்.
நீண்ட காலத்திற்குப் பிறகு ஸ்பெயினுக்கு மேற்கொள்ளப்படும் முதல் திருத்தந்தை பயணம் இதுவாகும். தனிப்பட்ட முறையில், இந்தப் பயணத்தை மேற்கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் இதற்கு முன்பும் பலமுறை ஸ்பெயினுக்கு வந்திருக்கிறேன், ஆனால் திருத்தந்தையாக இந்தத் தூதரகப் பொறுப்பில் நான் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுதான்.
இறை நம்பிக்கையாளர்களைச் சந்திக்கவும், அந்த நம்பிக்கையைக் கொண்டாடவும், இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கவும் மேற்கொள்ளப்படும் பயணம் இது. அதே நேரத்தில், இது ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் என் வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்கான ஒரு நல்ல வாய்ப்பு. ஏனென்றால், திருஅவையிடம் (சபையிடம்) அனைவருக்கும் ஒரு செய்தி இருக்கிறது; கடந்த மே 25 அன்று வெளியான திருத்தூது மடலில் இது மிகத் தெளிவாக விளக்கப்பட்டிருந்தது என்று நான் நம்புகிறேன்."
அனைவருக்கும் இந்தப் பயணம் நல்லதாக அமைய வேண்டும் என்றும், இந்த வருகை ஒரு சிறந்த உற்சாகத்தைக் கண்டறிவதற்கான வாய்ப்பாக அமையும் என்றும் நான் நம்புகிறேன். ஸ்பெயினில் ஏராளமான கத்தோலிக்கர்கள் உள்ளனர், குறிப்பாக இளைஞர்களின் வருகையை நான் முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். எனக்கு ஏற்கனவே கூறப்பட்டவற்றின் படி, பெருமளவிலான இளைஞர்கள் இதில் பங்கேற்று, தங்களின் உற்சாகத்தையும் ஆற்றலையும் கொண்டு வரவுள்ளனர்.
நம்பிக்கையின் மகிழ்ச்சியை நாம் ஒன்றாகப் பகிர்ந்துகொள்ளும்போது, ஒரு நேர்மறையான செய்தியை உலகிற்குத் தர முடியும். நான் செல்லும் இடங்களான மாட்ரிட், பார்சிலோனா மற்றும் கேனரி தீவுகள் என ஒவ்வொன்றிலும் அந்தச் செய்தி ஒரு தனித்துவமான அர்த்தத்தைப் பெறும். எல்லாவற்றிற்கும் மேலாக, இது நம்பிக்கையோடு வாழ்வதையும், இறைவனின் அன்பு, பிறரன்பு மற்றும் ஒவ்வொரு மனிதர் மீதான மரியாதையையும் பறைசாற்றும் ஒரு செய்தியாகும்.
உங்கள் அனைவரையும் வாழ்த்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் உங்களுக்கு ஒரு நல்ல பயணம் அமைய வாழ்த்துகிறேன்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
