தேடுதல்

திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள் பால் ஆறாம் அரங்கில் இத்தாலிய கத்தோலிக்க வழிகாட்டிகள் மற்றும் சாரணர் இயக்கத்தினரைச் சந்தித்த போது. திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள் பால் ஆறாம் அரங்கில் இத்தாலிய கத்தோலிக்க வழிகாட்டிகள் மற்றும் சாரணர் இயக்கத்தினரைச் சந்தித்த போது.  (@VATICAN MEDIA)

இயற்கைசார் வாழ்வும், நற்செய்தி வழிகாட்டுதலும் சாரணர்களின் வாழ்வாக மாறட்டும்!

இன்றைய சிக்கலான சூழலில், ஐரோப்பாவை வெறும் வியாபாரக் களமாகப் பார்க்காமல், உன்னத கிறிஸ்தவ விழுமியங்களின் அடிப்படையில் "மக்களுக்கான ஐரோப்பாவாக" மாற்ற உழைக்க வேண்டும் என்று திருத்தந்தை குறிப்பிட்டார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

இன்றைய சிக்கலான வரலாற்றுச் சூழலில், மிக உயர்ந்த கிறிஸ்தவ பாரம்பரிய விழுமியங்களால் ஒன்றுபட்ட வியாபாரத்திற்கான ஐரோப்பாவாக மட்டுமல்லாமல், மக்களுக்கான ஐரோப்பாவாக" மாற்றுவதற்கு உழைப்பது மிகவும் முக்கியம் என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் குறிப்பிட்டார்.

ஜூன் 01, திங்களன்று, ஐரோப்பிய கத்தோலிக்க வழிகாட்டிகள் மற்றும் சாரணர்கள் சங்கத்தின் 50-வது ஆண்டு பொன்விழா நிகழ்வில் கலந்துகொண்டவர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, இந்த ஜூபிலி கொண்டாட்டத்தை அண்மையில் கொண்டாடிய தூய ஆவியார் பெருவிழாவோடு  ஒப்பிட்டு 'பெந்தெகொஸ்தே' என்ற சொல்லுக்கே ஐம்பதாவது என்றுதான் பொருள் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

சாரணர் இயக்கத்தின் இந்த மகிழ்ச்சியான பொன்விழா ஆண்டு, ஒரு புதிய பெந்தெகொஸ்தே நிகழ்வாக மாறட்டும் என்று வாழ்த்திய திருத்தந்தை, அன்று மாடி அறையில் கூடியிருந்த திருத்தூதர்கள்மீது தூய ஆவியானவர் இறங்கியது போல,  இந்த இயக்கத்தின் ஒவ்வொரு உறுப்பினர் மீதும் இறங்கி வர வேண்டும் என்று இறைவேண்டல் செய்தார்.

மேலும் பேடன்-பவல்லின் (Baden-Powell) சாரணக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, இளைஞர்கள் இயேசு கிறிஸ்துவை ஒரு நம்பிக்கையான நண்பராகவும், வழிகாட்டியாகவும், போதகராகவும் கண்டுகொள்ள உதவுகின்ற இந்தச் சங்கத்தின் கல்விப் பணியைத் திருத்தந்தை பாராட்டி மகிழ்ந்தார்.

படைப்போடு ஒன்றிணைந்து வாழ்வதன் முக்கியத்துவத்தையும், அந்த இயற்கையுடனான ஆன்மீக நெருக்கத்தையும் எடுத்துக்காட்டிய திருத்தந்தை, ஏனெனில் இவை படைப்பின் வழியாகக் கடவுளின் நன்மையை வெளிப்படுத்துகின்றன என்றும்  குறிப்பிட்டார்.

நற்செய்தியை வாழ்வின் உண்மையான "வழிகாட்டி வரைபடம்" (map of life) என்று வர்ணித்த திருத்தந்தை, திருவிவிலியத்திலிருந்து தங்களுக்குத் தேவையான ஆற்றலைப் பெற்றுக்கொள்ளுமாறு சாரணர்களை ஊக்குவித்ததுடன், சாரணத் தலைவர்களின் முன்மாதிரியான வாழ்க்கை, நம்பிக்கை மற்றும் முதிர்ச்சி ஆகியவை இளைஞர்களின் ஆளுமை உருவாக்கத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று அவர்களுக்கு சுட்டிக்காட்டினார்.

மேலும் ஜெபம், திருவருட்சாதனங்கள் மற்றும் தங்களின் இறையழைப்பை தெளிந்து தேர்தல் (vocational discernment) ஆகியவற்றின் வழியாக, கிறிஸ்துவின் அழைப்பிற்கு தாராள மனதோடு பதிலளிக்க முன்வருமாறு சாரணர்களுக்கு திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.

மனிதனின் முழுமையான வளர்ச்சி, பொறுப்புணர்வு மற்றும் உண்மையான உறவுகளை வளர்க்கும் சாரண இயக்க வழிமுறையின் மதிப்பை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, அத்துடன் கிறிஸ்தவ மனிதநேய விழுமியங்களின் அடிப்படையில், ஒன்றுபட்ட ஐரோப்பா என்ற கலாச்சாரப் பார்வையை வளர்ப்பதில் இந்தச் சங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் பாராட்டினார்.

இறுதியாக, சாரண இயக்கத்தின் மையப்பகுதியாக விளங்குவது "சேவை" தான் என்று வலியுறுத்திய திருத்தந்தை, சுயநலமற்ற இந்தச் சேவையின் வழியாக, இளைஞர்கள் ஒருமைப்பாட்டு உணர்வையும், பொறுப்புணர்வையும், பிறர்மீது அக்கறை கொள்வதையும் கற்றுக்கொள்கிறார்கள் என்றும், இதன்மூலம் இன்றைய உலகில் அவர்கள் அன்பு, வரவேற்பு மற்றும் அமைதிக்கான சாட்சிகளாக மாறுகிறார்கள் என்றும்  குறிப்பிட்டு தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 ஜூன் 2026, 10:56