தேடுதல்

திருத்தந்தை பதினான்காம் லியோ திருத்தந்தை பதினான்காம் லியோ   (ANSA)

திருத்தந்தையின் ஸ்பெயின் நாட்டிற்கான திருத்தூதுப் பயணம் : முன்தூது

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் திருத்தூதுப் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்குச் செல்கிறார். இது திருத்தந்தையின் நான்காவது திருத்தூதுப் பயணம் ஆகும்.

இம்மானுவேல் மரியான் – வத்திக்கான்

ஜூன் 06 ஆம் தேதி திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் திருத்தூதுப் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்குச் செல்கிறார். இது திருத்தந்தையின் நான்காவது திருத்தூதுப் பயணம் ஆகும். இத்தாலிக்கு வெளியே ஐரோப்பா நாட்டிற்குச் செல்லும் முதல் பயணம் ஆகும். இந்த பயணம் புனித யோவான் நற்செய்தி அதிகாரம் 4 ஆம் இறைவார்த்தை 35 இல் குறிப்பிடுவதுபோல, உங்கள் கண்களை உயர்த்திப் பாருங்கள்’ என்னும் மையப்பொருளை அடிப்படையாகக் கொண்டு, நம்பிக்கை, எதிர்நோக்கு மற்றும் மனித மாண்பை வளர்க்கும் விதமாக, புலம்பெயர்ந்தோர், இளைஞர்கள் மற்றும் விளிம்புநிலை மக்களோடு இணைந்து பயணிக்கும் நோக்கில் இத்திருத்தூதுப் பயணம் அமைகிறது.

ஸ்பெயின் நாட்டில் கத்தோலிக்க நம்பிக்கையைப் புதுப்பித்தல், இளைஞர்கள் மத்தியில் கிறிஸ்தவ நெறிகளை மீண்டும் மீட்டெடுத்தல் குறிப்பாக கனாரி தீவுகள் வழியாக வரும் புலம்பெயர்ந்தோருடன் ஒற்றுமையை வெளிப்படுத்தல், மனித மாண்பு, சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கும் சமூகத்தை ஊக்குவித்தல், பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதலும் நீதியும் வழங்குதல், Sagrada Família ஆலயத்தின் முக்கிய கட்டுமான நிறைவை முன்னிட்டு திருஅவையின் சாட்சியத்தை வலுப்படுத்துதல், சமூக மற்றும் அரசியல் பிளவுகளுக்கிடையில் ஒற்றுமையின் செய்தியை அறிவித்தல் போன்ற கருத்துக்கள் இத்திருத்தூதுப் பயணத்தில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் நோக்கமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

உலகக் கத்தோலிக்க வரலாற்றில் ஸ்பெயின் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. புனிதர்கள், மறைப்பணியாளர்கள், துறவியர் மரபுகள், மரியன்னை பக்தி, கலை மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றின் மூலம் உலக திருஅவைக்கு ஸ்பெயின் அளித்த பங்களிப்பு அளப்பரியது.  எனவே ஜூன் 6 ஆம் தேதி தொடங்கும் இத்திருத்தூதுப் பயணத்தில் ஸ்பெயின் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த மாட்ரிட், பார்சிலோனா, மாண்ட்செராட், லாஸ் பால்மாஸ் மற்றும் தெனெரிஃபே ஆகிய நகரங்களுக்குச் சென்று பல்வேறு நிகழ்வுகளில் பங்குகொண்டு ஜூன் 12 ஆம் தேதி உரோமை நகருக்குத் திரும்புகிறார்.

இப்போது ஸ்பெயின் நாட்டில் திருத்தந்தை செல்லும் நகர்களைப் பற்றி பார்ப்போம்.

திருத்தந்தை அவர்கள் ஜூன் மாதம் 6 ஆம் தேதியிலிருந்து 9 ஆம் தேதிவரை ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மாட்ரிட்டில் பல்வேறு நிகழ்வுகளை மேற்கொள்கிறார். மாட்ரிட் ஸ்பெயின் நாட்டின் தலைநகரமும் அரசியல், கலாச்சார மற்றும் திருஅவை வாழ்வின் முக்கிய மையமும் ஆகும். பல நூற்றாண்டுகளாக கத்தோலிக்க நம்பிக்கை இந்த நகரின் அடையாளத்தை வடிவமைத்துள்ளது. பள்ளிகள், மருத்துவமனைகள், பிறரன்புப்பணிகள், இளைஞர் இயக்கங்கள், மறைப்பணி நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் திருஅவை தொடர்ந்து சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இன்றைய ஐரோப்பாவில் காணப்படும் மதச்சார்பின்மை, இளைஞர்களின் ஆன்மீகத் தேடல் மற்றும் குடும்ப வாழ்வின் சவால்கள் அனைத்தும் மாட்ரிட்டில் பிரதிபலிக்கின்றன. இந்தச் சூழலில் திருத்தந்தையின் வருகை நம்பிக்கையையும் புதுப்பிப்பையும் வழங்குகிறது. அவர் ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் திருத்தந்தையாக வரலாறு படைக்கிறார்.

அடுத்து திருத்தந்தை அவர்கள் ஜூன் 09 ஆம் தேதி பார்சிலோனா செல்கிறார். பார்சிலோனாவிற்கு திருத்தந்தை செல்லும் பயணம், புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் அந்தோனி கவுடியின் (Antoni Gaudí) 100-வது நினைவு ஆண்டை ஒட்டி அமைகிறது. உலகப் புகழ்பெற்ற திருக்குடும்ப பேராலயத்தில் (Sagrada Família) திருப்பலி நிறைவேற்றி, புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ள "இயேசு கிறிஸ்து கோபுரத்தை" (Tower of Jesus Christ) அவர் முறைப்படி திறந்து வைத்து ஆசீர்வதிக்கிறார். 172.5 மீட்டர் உயரமுள்ள இந்த கோபுரம் திறக்கப்படுவதன் மூலம், திருக்குடும்ப பேராலயம் உலகின் மிக உயரமான தேவாலயம் என்ற சிறப்பைப் பெறுகிறது. இறை ஊழியர் ஆண்டோனி கௌடி வடிவமைத்த இந்த மகத்தான ஆலயம், கல்லாலும் கலைத்தாலும் நற்செய்தியை அறிவிக்கும் ஒரு மறைப்பணியாக விளங்குகிறது. இந்நகரம் கலை, கலாச்சாரம் மற்றும் நம்பிக்கை சந்திக்கும் இடமாக உள்ளது. குடியேறிகள், ஏழைகள் மற்றும் இளைஞர்களுக்கான திருஅவையின் பணிகள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன.

பார்சிலோனியாவிலிருந்து அதன் அருகில் அமைந்துள்ள மொன்செராட் செல்கிறார். இது ஸ்பெயினின் முக்கிய மரியன்னைத் திருத்தலங்களில் ஒன்றாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எண்ணற்ற திருப்பயணிகள் இந்த மலையில் ஏறி செபம், மனமாற்றம் மற்றும் ஆன்மீகப் புதுப்பிப்பை நாடி வருகின்றனர். இங்கு வணங்கப்படும் கருநிற அன்னை மரியாள் உருவம் "லா மொரெனெட்டா" என அன்போடு அழைக்கப்படுகிறது. புனித இஞ்ஞாசியார் தமது வாழ்க்கையின் முக்கிய திருப்பத்தை இங்கிருந்து தொடங்கினார். துறவறம், இசை, கல்வி மற்றும் திருப்பயண மரபுகளின் மையமாக மொன்செராட் விளங்குகிறது. மொன்செராட்டிலிருந்து புறப்பட்டு பகேனரி தீவுகளில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களாகிய லாஸ் பால்மாஸ் மற்றும் தெனெரிஃபேக்கு 10,11,12 தேதிகளில் செல்கிறார். லாஸ் பால்மாஸ் நகர் இது புலம்பெயர்ந்தோரின் நுழைவாயில் என அழைக்கப்படுகிறது. கனாரி தீவுகளில் அமைந்துள்ள லாஸ் பால்மாஸ், ஐரோப்பாவை அடைய முயலும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரின் முதல் நம்பிக்கைத் தளமாக மாறியுள்ளது. "இங்குள்ள திருஅவை உணவு, தங்குமிடம், மருத்துவ உதவி மற்றும் ஆன்மீக ஆதரவை வழங்கி, தனது அன்பியப் பணியை முன்னெடுத்து வருகிறது. திருத்தந்தையின் வருகை உலகம் மறந்து விடும் மக்களின் வேதனைகளை உலக மனச்சாட்சிக்கு முன்வைக்கிறது.

தெனெரிஃபே நகர் எல்லைப்புறங்களில் நம்பிக்கையின் திருஅவை என அழைக்கப்படுகிறது. கனாரி தீவுகளின் மிகப்பெரிய தீவான தெனெரிஃபே, இன்று புலம்பெயர்ந்தோரின் வாழ்வுப் போராட்டங்களின் சாட்சியாக உள்ளது. இங்கு திருத்தந்தை புலம்பெயர்ந்தோர், தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் திருஅவை பணியாளர்களைச் சந்திக்கிறார். அர்குயினெகுயின் (Arguineguín) துறைமுகம் மற்றும் லாஸ் ராய்சஸ் (Las Raíces) அகதிகள் முகாமிற்கு நேரில் சென்று, கடலைக் கடந்து வந்த அகதிகளையும், அவர்களுக்கு உதவும் மனிதாபிமான அமைப்புகளையும் சந்தித்து திருத்தந்தை  உரையாடுகிறார். ஜூன் மாதம் 12ஆம் தேதி மாலை உரோமை நகருக்கு திரும்புகிறார்.

திருத்தந்தையின் இந்த நான்காவது திருத்தூதுப் பயணத்தில் மூவொரு இறைவன் தமது திருவுளப்படி திருத்தந்தையை இந்த திருத்தூதுப் பயணத்தில் வழிநடத்தவும் இந்நாடுகளில் மூவொரு இறைவனின் அருள் நிறைவாய் தங்கும்படியாகவும் சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

05 ஜூன் 2026, 10:58