தேடுதல்

கருத்து வேறுபாடுகளைக் கடந்து கனிவோடு இணைவோம்!

ஆயுதங்களாலோ அல்லது சுவர்களாலோ உண்மையான பாதுகாப்பு வராது; கல்வி, ஆராய்ச்சி மற்றும் மனிதநேயத்தில் முதலீடு செய்து, ஒருவரையொருவர் நம்பி ஒற்றுமையுடன் வாழ்வதே உண்மையான பாதுகாப்பு எனத் தெளிவுபடுத்துகிறது

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஜூன் 06, சனிக்கிழமையன்று, திருத்தந்தை ஸ்பெயின் நாட்டிற்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின் ஒரு நிகழ்வாக மாட்ரிட்டில் உள்ள அரசு மாளிகைக்குச் சென்றார். அங்கு அந்நாட்டு அரசு அதிகாரிகள், குடிமைச் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் தூதரக அதிகாரிகளை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் சந்தித்தார். அச்சந்திப்பின்போது திருத்தந்தை ஆற்றிய உரை:

மதிப்பிற்குரிய அதிபர் அவர்களே, அரசு அதிகாரிகளே, தூதரகப் பிரதிநிதிகளே, சகோதர, சகோதரிகளே

வரலாற்றுப் பாரம்பரியமும் கத்தோலிக்க நம்பிக்கையும்

ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகளாக நற்செய்தியால் ஆழமாக வடிவமைக்கப்பட்ட வரலாற்றைக் கொண்ட ஸ்பெயின் நாட்டிற்கு, இந்த திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்வதற்கான அழைப்பை நான் நன்றியோடு ஏற்றுக்கொள்கிறேன். இந்நாட்டின் நற்செய்தி அறிவிப்புப் பணியை திருத்தூதர் பெரிய யாக்கோபுடன்  இணைக்கும் பண்டைய பாரம்பரியம், திருஅவையின் அப்போஸ்தலிக்க பணிவாழ்வோடு ஸ்பெயின் நாட்டிற்கு இருக்கும் நிலையான தொடர்பை நமக்கு நினைவூட்டுகிறது.

கிறிஸ்தவ நம்பிக்கை ஸ்பானிய கலாச்சாரத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அவர்களின் மக்கள் பக்தி, கலை மற்றும் இசை மரபுகள், தொண்டு நிறுவனப் பணிகள் மற்றும் துடிப்பான சமூக அமைப்புகளில் தெளிவாகக் காணப்படுகிறது. இந்த பாரம்பரியங்கள், இயேசு கிறிஸ்துவுக்கும் ஸ்பானிய மக்களுக்கும் இடையே ஏற்பட்ட கனிமிகு சந்திப்பிற்கு இன்றும் சான்றாக விளங்குகின்றன.

உரையாடலின் வழியே சமூக நல்லிணக்கம்

நற்செய்திக்கு மீண்டும் உண்மையோடு இருப்பதனை ஊக்குவிக்கவும், சமுதாயம் முழுவதும் நல்லிணக்கத்தையும் ஒத்துழைப்பையும் வளர்க்கவும் நான் உங்களிடையே வந்துள்ளேன். மோதல்களைத் தவிர்த்து, ஒருவரையொருவர் சந்தித்துப் புரிந்து கொள்ளும் பண்பாடே நிலைத்தன்மை, செழுமை மற்றும் அமைதிக்கான வழி என்பதை ஸ்பெயினின் சொந்த வரலாறு நமக்குக் கற்பிக்கிறது. எந்தவொரு கொள்கையையும் விட உண்மையானது மேலானது; நாம் பிரிவினைகளைக் கடந்து, ஒரு கூட்டு எதிர்காலத்தை உருவாக்க வேண்டுமானால் உண்மையான உரையாடல் அவசியமாகும்.

இதன் அடிப்படையில் சிலுவையின் புனித யோவான் மற்றும் அவிலாவின் புனித தெரேசா  ஆகியோரின் ஆன்மீக மரபு இன்றும் தனிச்சிறப்புடன் பொருந்தக்கூடியதாக இருக்கிறது. இருள் மற்றும் நிச்சயமற்ற காலங்கள்கூட நம்மைத் தூய்மைப்படுத்தவும், புதுப்பிக்கவும், நாம் வளர்ச்சியடையவும் வழிவகுக்கும் வாய்ப்புகளாக மாறக்கூடும் என்பதை அவர்கள் நமக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள். மோதல்களாலும் ஆழமான சமநிலையின்மையாலும் பாதிக்கப்பட்டுள்ள நமது உலகம், அமைதிக்காகவும், மனித மாண்பிற்கான மதிப்பிற்காகவும், அன்பின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட ஒரு நாகரிகத்திற்காகவும் ஏங்குகிறது.

மனிதாபிமானமும் புதிய தொழில்நுட்ப சவால்களும்

இன்று, நாம் சமூகப் பிரிவினை மற்றும் துருவமயமாக்கல் (polarization) எனும் சலனத்திற்கு ஆளாவதை எதிர்த்து நிற்க வேண்டும்; மேலும் மத சுதந்திரம், மனச்சாட்சியின் சுதந்திரம் மற்றும் ஒவ்வொரு மனிதனின் மாண்பையும் பாதுகாக்க வேண்டும். நமக்கு கலாச்சாரம், அகநோக்கு சிந்தனை (interiority), தரமான கல்வி மற்றும் ஆன்மீக உன்னதத்திற்கான திறந்த மனநிலை ஆகியவை தேவைப்படுகின்றன. புதிய தொழில்நுட்பங்கள் சிறந்த வாய்ப்புகளை வழங்குகின்றன, ஆனால் அவை மனிதகுலத்திற்கு சேவை செய்யவும், விமர்சன சிந்தனையை வலுப்படுத்தவும், பொதுநலனை மேம்படுத்தவும் பயன்பட வேண்டும்.

கலாச்சாரங்களுக்கும் மதங்களுக்கும் இடையிலான உரையாடலுக்கு ஸ்பெயினின் வரலாறும் ஒரு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறது. கோர்டோபா (Córdoba) மற்றும் டொலிடோ (Toledo) போன்ற நகரங்கள், மக்களிடையேயான சந்திப்புகளும், கற்றலும், ஒருவரையொருவர் மதிப்பதும் எவ்வாறு கருத்து வேறுபாடுகளை வளமை மற்றும் முன்னேற்றத்திற்கான ஆதாரங்களாக மாற்ற முடியும் என்பதைக் காட்டுகின்றன."

உண்மையான பாதுகாப்பும் உலகளாவிய சகோதரத்துவமும்

கல்வி, ஆராய்ச்சி, உள்ளூர் சமூகங்கள் மற்றும் குடிமைச் சமூகம் ஆகியவற்றில் முதலீடு செய்யுமாறு அரசியல், பொருளாதார மற்றும் நிறுவனத் தலைவர்களை நான் ஊக்குவிக்கிறேன். உண்மையான பாதுகாப்பு என்பது சுவர்களாலும் ஆயுதங்களாலும் கட்டமைக்கப்படுவதில்லை, மாறாக ஒற்றுமையிலும் ஒருவரையொருவர் நம்புவதிலும் நாம் இணைந்து வளர்வதன் மூலமே உருவாக்கப்படுகிறது.

இறுதியாக, அனைத்துலகச் சட்டம் (international law), பன்னாட்டுக் கூட்டுறவு (multilateral cooperation), அமைதி மற்றும் மக்களிடையேயான ஒற்றுமை ஆகியவற்றில் ஸ்பெயின் கொண்டுள்ள அர்ப்பணிப்பிற்காக நான்  நன்றி கூறுகிறேன். இந்நாடு தொடர்ந்து குடிமை நட்புறவை (civic friendship) வளர்க்கவும், ஏழைகள் மற்றும் இளைஞர்களின் குரல்களுக்குச் செவிசாய்க்கவும், ஒற்றுமையையும் பன்முகத்தன்மையையும் இணக்கமாகக் கொண்டு செல்லவும், மேலும் ஒன்றிணைந்த ஐரோப்பாவிற்கும் மற்றும் உலகளாவிய சகோதரத்துவத்திற்கும் தன் பங்களிப்பை வழங்கவும் வாழ்த்துகிறேன்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

06 ஜூன் 2026, 16:24