திருத்தந்தை திருத்தந்தை   (ANSA)

திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள்

ஜூன் 7 ஞாயிற்றுக்கிழமை இன்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் காலை 10:00 மணிக்கு மார்டிட் நகரின் பிளாசா டி சிபெலெஸவில் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றுகிறார். பின்னர் மலை மணி 4:30 க்கு தூதரக மையத்தில் புனித அகுஸ்தினார் துறவிகளை தனிப்பட்ட முறையில் சந்திக்கிறார். மாலை 6:00 மணிக்கு கலாச்சாரம் மற்றும் பொருளாதார உலகினரைச் சந்திக்கிறார். இரவு மணி 7:30 க்கு பேராயர் இல்லத்தில் இரவு விருந்தில் பங்குகொண்டு தனது இன்றைய நாளுக்கான பயணத்தை நிறைவு செய்கிறார்.

இம்மானுவேல் மரியான் – வத்திக்கான் 

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஸ்பெயின் நாட்டிற்கான தனது திருத்தூதுப் பயணத்தின்  இரண்டாம் நாளை இன்று ஜூன்  7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியிருக்கிறார்.

காலை 10:00 மணிக்கு மார்டிட் நகரின் பிளாசா டி சிபெலெஸவில் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றுகிறார். பிளாசா டி சிபெலெஸ் (Plaza de Cibeles) என்பது ஸ்பெயினின் தலைநகரான மாட்ரிட்டின் ஒரு சாதாரண நகரச் சதுக்கம் மட்டுமல்ல. அது ஸ்பெயினின் வரலாற்றையும், அதன் ஆன்மாவையும், அதன் எதிர்கால நம்பிக்கையையும் பிரதிபலிக்கும் உணர்வுபூர்வமான மற்றும் வரலாற்று மையமாகும். அந்த நகரத்தின் இயற்கையின் தெய்வமான சிபெலெஸின் கம்பீரமான நீரூற்று இங்கு அமைந்துள்ளது.  ரியல் மாட்ரிட் (Real Madrid) கால்பந்து அணியின் அதிகாரப்பூர்வ கொண்டாட்ட இடமாகும்.

மாலை மணி 4:30 க்கு தூதரக மையத்தில் புனித அகுஸ்தினார் துறவிகளை தனிப்பட்ட முறையில் சந்திக்கிறார். பின்னர் மாலை 6 மணிக்கு கலாச்சாரம் மற்றும் பொருளாதார உலகினரைச் சந்திக்கிறார்.

ஸ்பெயின் நாட்டின் கலாச்சார வளர்ச்சியில் கத்தோலிக்க திருஅவையின் பங்கு மிகவும் ஆழமானது. புனிதர் மரபுகள், கலை, இசை, இலக்கியம், கல்வி, கட்டிடக்கலை ஆகிய அனைத்திலும் திருஅவையின் செல்வாக்கு காணப்படுகிறது. புனித இசிதோர் ஆஃப் செவில்லே, புனித தெரேசா அவிலா, புனித சிலுவை யோவான் ஆகியோர் ஸ்பெயின் கலாச்சாரத்தையும் ஆன்மீகத்தையும் வடிவமைத்த முக்கிய ஆளுமைகள்.

திருத்தந்தை ஏன் கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், அறிவியலாளர்கள், தொழிலதிபர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் சமூகத் தலைவர்களைச் சந்திக்கிறார் என்ற கேள்வி எழலாம். ஆனால் திருஅவையின் வரலாற்றைப் பார்த்தால், நம்பிக்கை என்பது ஆலயத்திற்குள் மட்டுமல்லாமல் மனித வாழ்வின் அனைத்து துறைகளுடனும் உரையாடும் ஒரு சக்தியாக இருந்து வந்துள்ளது.

மக்கள் டிஜிட்டல் திரைகளிலும், சித்தாந்த வேறுபாடுகளிலும் மூழ்கியிருக்கும் இக்காலத்தில், பொருளாதார மற்றும் கலாச்சார உலகத்துடனான திருத்தந்தையின் சந்திப்பு, "நமது பார்வையை உயர்த்தக்" கோரும் ஒரு அழைப்பாகும்.

திருத்தந்தை லியோ தனது Magnifica Humanitas என்ற சுற்றறிக்கையில், "மனித மாண்பு சமூகத்தின் தார்மீக வழிகாட்டியாக இருக்க வேண்டும்" என்று வலியுறுத்துகிறார். நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும் சரி, கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தின் இறுதி நோக்கம் மனித குலத்திற்கு சேவை செய்வதாகவே இருக்க வேண்டும்.

இரவு மணி 7:30 க்கு பேராயர் இல்லத்தில் இரவு விருந்தில் பங்குகொண்டு தனது இரண்டாம் நாள் திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்கிறார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

07 ஜூன் 2026, 18:22