தேடுதல்

2026.06.22 Saluto ai partecipanti all'Estate Ragazzi

தொழில்நுட்பம் மனித உறவுகளுக்கு மாற்றாகாது!

வத்திக்கான் சிறார் கோடைக்கால முகாமில் பங்கேற்ற குழந்தைகளைச் சந்தித்த திருத்தந்தை, தொழில்நுட்பம் பயனுள்ளதாக இருந்தாலும் அது மனித உறவுகளை மாற்ற முடியாது என்று வலியுறுத்தினார். குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரம் செலவிடுதல், திரை நேரத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் செப வாழ்வை வளர்த்துக்கொள்ளுதல் அவசியம் எனக் கூறிய அவர், தொழில்நுட்பத்தை மட்டுமே சார்ந்திருக்காமல் சிந்திக்கும் திறனையும் பகுத்தறிவையும் வளர்த்துக்கொள்ளுமாறு குழந்தைகளை ஊக்குவித்தார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

கைப்பேசி மற்றும் திரை பயன்பாடு குறித்த குழந்தையின் கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, தொழில்நுட்பம் பல நன்மைகளை வழங்கினாலும் அது மனித உறவுகளுக்கு மாற்றாக இருக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.

ஜூன் 22, திங்களன்று, வத்திக்கானில் நடைபெற்று வரும் "சிறார் கோடைக்கால முகாம்" நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, தொழில்நுட்பப் பயன்பாடு, நட்பு மற்றும் ஆன்மீக வாழ்க்கை குறித்து முக்கியமான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

நண்பர்களுடன் நேரம் செலவிடுதல், ஒன்றாக விளையாடுதல், உரையாடுதல், குடும்பத்தினருடன் இணைந்து வாழ்தல் ஆகியவை மனித வளர்ச்சிக்கு இன்றியமையாதவை என்று குறிப்பிட்ட திருத்தந்தை, சில செயலிகள் மனிதர்களை அதிகமாக ஈர்த்துப் பயன்படுத்த வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், தொழில்நுட்ப அடிமைத்தனத்திலிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் திரை நேரத்திற்கு வரம்பு விதித்து, குடும்பத்தினருடன் உரையாடவும், ஒன்றாக செபிக்கவும் நேரம் ஒதுக்குமாறு குழந்தைகளை திருத்தந்தை கேட்டுக்கொண்டார். 

பயண அனுபவம் குறித்த மற்றொரு கேள்விக்கு பதிலளித்த திருத்தந்தை, சில நேரங்களில் ஜிபிஎஸ் ( GPS) வழிகாட்டுதலை முழுமையாக நம்பியதால் தவறான பாதையில் சென்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், இதன் மூலம் தொழில்நுட்பத்தை மட்டுமே சார்ந்திருக்காமல், சிந்திக்கும் திறனையும் பகுத்தறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

இறுதியாக, குழந்தைகள் தங்களது பெற்றோருடன் இந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை,  செபம் கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை அம்சமாகும் என்று வலியுறுத்தி தனது உரையை நிறைவு செய்தார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

23 ஜூன் 2026, 08:07