தேடுதல்

அல்முதேனா அன்னையின் நிழலில் சமாதானத்தின் தூதர்களாக உருவெடுப்போம்!

சவால்கள் நிறைந்த ஒரு காலகட்டத்தில், அன்னை மரியாளின் திருவுருவம் மேட்ரிட் நகர அரண் சுவர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தச் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தபோது, அன்னை எவ்விதச் சேதமும் இன்றி மீட்கப்பட்டார். இந்த இடிந்த சுவரே அன்னை தனது மக்களோடு மீண்டும் இணைய வழிவகுத்தது.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஜூன் 08,  திங்களன்று , திருத்தந்தை ஸ்பெயின் நாட்டிற்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின் ஒரு நிகழ்வாக மேட்ரிட் நகரில் அமைந்துள்ள அல்முதேனாவின் புனித மரியாள் பேராலயத்திற்குச் சென்று அங்கு இடம்பெற்ற வழிபாட்டில் பங்கு கொண்டு திருத்தந்தை உரை நிகழ்த்தினார். அவ்வழிபாட்டில் இடம்பெற்ற திருத்தந்தையின் உரை.

அன்பான சகோதர, சகோதரிகளே!

மேட்ரிட் பேராயர் அவர்கள் என் மீது கொண்டுள்ள அன்போடு ஆற்றிய நல்வரவேற்பு உரையாடலுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மறைமாவட்டத்தின் அன்னையாகவும், பாதுகாவலியாகவும் விளங்கும் அல்முதேனா அன்னைக்கு (Our Lady of Almudena) தங்களது பக்தியையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் விதமாக இன்று இங்கு கூடியிருக்கும் உங்கள் அனைவரையும் மிகுந்த அன்போடு வாழ்த்துகிறேன். இந்த வழிபாட்டின் போது, அன்னை மரியாளின் மீது திருத்தந்தையாகிய நான் கொண்டுள்ள ஆழமான பாசத்தின் அடையாளமாக, அவரது பாதங்களில் 'தங்க ரோஜாவை' சமர்ப்பிக்கின்றேன்.

மேட்ரிட் நகரின் எண்ணற்ற தலைமுறை நம்பிக்கையாளர்கள், பல நூற்றாண்டுகளாக, தனது தெய்வீக மகனைத் தனது கைகளில் ஏந்தி நமக்குக் காட்சியளிக்கும் இந்தத் தூய அன்னை மரியாளின் திருவுருவப் படத்தை மிகுந்த பக்தியோடு வணங்கி வந்துள்ளனர். கிறிஸ்தவ சமூகத்திற்குப் பெரும் சவால்கள் நிறைந்த கடினமான காலகட்டங்கள் ஏற்பட்டபோது, அன்னை மரியாளின் இந்தத் திருவுருவம்  பாதுகாப்பிற்காக இந்நகரத்தின் பாதுகாப்பு அரண் சுவர்களுக்குள் ஒரு மறைவான பகுதியில் மறைத்து வைக்கப்பட்டதாகப் பாரம்பரிய வரலாறுகள் நமக்குக் கூறுகின்றன. அவ்வாறே அந்தத்  திருவுருவம்   பல ஆண்டுகளாக அங்கு மறைந்திருந்தது. பின்னர், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், அந்தச் சுவரின் ஒரு பகுதி அதிசயமாக இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, எவ்விதச் சேதமும் இன்றி முழுமையாக, அப்படியே அந்த அன்னை மரியாளின் திருவுருவம் மீண்டும் கண்டெடுக்கப்பட்டது.

உங்களால் ஆழமாகப் போற்றப்படும் இந்தத் தொன்மையான மரியன்னை பக்தி, உங்கள் மக்களுக்கு உயிர் கொடுக்கும் கிறிஸ்தவ வேர்களின் அடையாளமாகும். உங்களது நம்பிக்கைப் பயணத்தைத் தொடர்ந்து தாங்கிப் பிடிக்கும் மாபெரும் நம்பிக்கையின் அடையாளமும் இதுவே ஆகும். இடிந்து விழுந்த ஒரு சுவரின் வழியாகத்தான் அன்னை தனது மக்களோடு மீண்டும் இணைந்தார். இந்த நிகழ்வு நமக்கு ஒரு ஆழமான பாடத்தைக் கற்றுத் தருகிறது; ஏனெனில், இயேசு தனது தூய அன்னையின் வழியாக நாம் பின்பற்ற அழைக்கும் பாதையை இது சுட்டிக்காட்டுகிறது.

ஆரம்பத்தில், ஒரு சுவர் இடிந்து விழும்போது சத்தமும், குழப்பமும் ஏற்படுவது இயல்பு. இருப்பினும், அது புதிய இடங்களைத் திறக்கிறது, நல்வாய்ப்புகளை மீட்டெடுக்கிறது, மேலும் மறுசீரமைப்பிற்கான ஊக்கத்தைத் தருகிறது. இன்றைய நம் சமுதாயத்தில், மக்களைப் பாதுகாக்காமல், மாறாக அவர்களைப் பிரித்து, தூரப்படுத்தி, தனிமைப்படுத்தும் சுவர்கள் இன்னும் பல உள்ளன. சில நேரங்களில், அந்தச் சுவர்களுக்கு அப்பால் என்ன இருக்குமோ என்ற பயத்தினால், நாம் அவற்றை அப்படியே ஆதரித்து சொகுசாக வாழ நினைக்கிறோம் அல்லது பெரும்பாலான நேரங்களில் அவற்றை அப்படியே புறக்கணித்து விடுகிறோம்.

ஆனால், அல்முதேனா அன்னை தனது பிரசன்னத்தாலும் அன்பான பாதுகாப்பாலும் நமக்கு வேறு ஒன்றைச் சொல்கிறார். புதிய, அழகான மற்றும் நிலையான ஒன்றை நாம் உருவாக்க வேண்டுமானால், சுவர்களைத் தகர்த்தெறிய நாம் தயாராக இருக்க வேண்டும். புதிய தொடக்கங்களுக்குத் திறந்தவெளிகள் தேவை, அப்போதுதான் நம்மால் மீண்டும் எல்லையை நோக்கிப் பார்க்க முடியும்.

ஆண்டவர் தனது தூய மக்களோடு நடந்து வருகிறார், அவர்களின் பயங்களைக் கேட்கிறார், நன்மைக்காக எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியையும் அன்போடு ஏற்றுக்கொள்கிறார் என்ற நம்பிக்கையோடு, நீங்கள் உங்களது நம்பிக்கை சாட்சியத்தில் ஒருபோதும் சோர்வடைய வேண்டாம் என்று உங்களை ஊக்குவிக்கிறேன்; அப்போதுதான் தந்தையாம் இறைவனின் அன்பான திட்டத்தை உங்களால் தியானிக்க முடியும். பிறரன்புப் பணிகளில் தொய்வடையாமல், சகோதர சகோதரிகளாக ஒரே குடும்பமாய் இணைந்திருங்கள். நம்பிக்கையை இழக்காமல், இவ்வுலகில் உங்களது ஆன்மீகப் பணியில் ஒருவருக்கொருவர் துணையாக நில்லுங்கள்.

ஆண்டவரின் பெருமையை உலகறியச் செய்து, தனது மீட்பராகிய இறைவனில் எப்போதுமே அகமகிழ்ந்து பாடிய ‘மகிழ்ச்சிப் பாடலின்’ (Magnificat) நாயகியாம் அல்முதேனா அன்னை மரியாளின் முன்மாதிரியாலும், அவரது பரிந்துரையாலும், இயேசுவின் மீதும் திருஅவையின் மீதும் நீங்கள் கொண்டுள்ள விசுவாச அன்பை இறைவன் இன்னும் அதிகமாய் உறுதிப்படுத்த வேண்டும் என நான் வேண்டுகிறேன். உலகளாவிய ஒற்றுமை, சகோதரத்துவத் தோழமை மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை மீண்டும் நிலைநிறுத்தக்கூடிய உன்னத உறவுகளைக் கட்டியெழுப்புபவர்களாக நீங்கள் உருவெடுக்க வேண்டும்.

அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட பாடலின் வரிகளை எனதாக்கிக் கொண்டு, உங்களை அவரது தாய்மை அன்பின் சக்திவாய்ந்த பாதுகாப்பில் ஒப்படைக்கிறேன்:

அல்முதேனாவின் தூய மரியாயே,

மீட்பரின் கன்னித்தாயே,

விண்ணக அரசியே, அன்பின் தாயே,

எளிய கன்னியே, உமது ஆடையின் நிழலில்

உமது பிள்ளைகளாகிய நாங்கள் பாதுகாப்புத் தேடுகிறோம்.

அன்பான தாயே, இறைவனின் ஆலயமே,

எங்களைப் பாதுகாத்து எங்களுக்குத் துணையாக இரும்,

நாங்கள் அமைதியையும் சமாதானத்தையும்

உருவாக்குபவர்களாக மாற எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

09 ஜூன் 2026, 09:35