“கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அமைதியின் சாட்சிகளாக வாழ அழைக்கப்படுகிறார்கள்”
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
ஜூன்10, புதன்கிழமையன்று, ஸ்பெயின் நாட்டிற்கான தனது திருத்தூதுப் பயணத்தின் ஒரு பகுதியாக, பார்சிலோனா நகரிலுள்ள திருக்குடும்ப பேராலயத்தில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் திருப்பலி நிறைவேற்றினார். அத்திருப்பலியின்போது திருத்தந்தை அவர்கள் ஆற்றிய மறையுரை.
அன்பு சகோதர சகோதரிகளே,
“ஆண்டவரே! எங்கள் தலைவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது!” என்ற திருப்பாடல் ஆசிரியரின் மகிழ்ச்சியான சொற்களுடன், இன்று இங்கே குழுமியிருக்கும் உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறேன். குடிமைப்பணி மற்றும் மத அதிகாரிகள், எனது சகோதர ஆயர்கள், அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், துறவியர்கள் மற்றும் எங்களுடன் இணைந்து செபிக்கும் அனைத்து இறைமக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த கொண்டாட்டத்தில் கலந்துகொண்டிருக்கும் பிற கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கும் பிற சமயங்களைச் சேர்ந்தவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்று, திருக்குடும்பப் பேராலயம் நம்மை திறந்த கரங்களுடன் வரவேற்கிறது. இந்த புனித இடத்தில், கடவுளின் வார்த்தையால் ஒன்றிணைந்து, நற்கருணையால் ஊட்டம்பெற்று ஒரே குடும்பமாக நாம் கூடியிருக்கிறோம். இங்கே, பார்சிலோனா, கேட்டலோனியா மற்றும் ஸ்பெயின் மக்கள் அனைவரும் இயேசு கிறிஸ்து வெளிப்படுத்திய கடவுளின் முகத்தை நோக்கித் தங்கள் கண்களை உயர்த்துகிறார்கள்.
கண்ணுக்குப் புலப்படாத கடவுளின் கண்ணுக்குப் புலப்படும் அடையாளமாக கடந்த 2010 ஆம் ஆண்டில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களால் அர்ப்பணிக்கப்பட்ட இந்த அற்புதமான பேராலயத்திற்காக நாம் ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறோம். இதன் உயர்ந்து நிற்கும் கோபுரங்கள் நம் பார்வையை விண்ணுலகை நோக்கித் திருப்புகின்றன, நம்மிடையே உள்ள கடவுளின் மகிமையையும் பிரசன்னத்தையும் நமக்கு நினைவூட்டுகின்றன. இன்று, இயேசு கிறிஸ்துவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிக உயர்ந்த கோபுரத்தின் அர்ப்பணிப்பையும் நாம் கொண்டாடுகிறோம்.
இந்த ஆலயம் நமக்கு ஒரு முக்கியமான பாடத்தைக் கற்பிக்கிறது. இது பிரம்மாண்டமானதாக இருந்தாலும், இன்னும் முழுமையடையாமல் உள்ளது. இருப்பினும் அதன் முழுமையின்மை ஒரு குறையாக இல்லாமல், ஒரு வாக்குறுதியாக விளங்குகிறது. கிறிஸ்தவ வாழ்க்கை எப்போதும் ஒரு பயணம் என்பதையும், கடவுள் நம்முள் தனது பணியைத் தொடர்ந்து செய்கிறார் என்பதையும் இது நமக்கு நினைவூட்டுகிறது. இந்த கட்டிடத்தை உருவாக்கும் பல கற்களைப் போல, நாமும் நம் வாழ்வை கிறிஸ்து என்னும் அடித்தளத்தின் மீது கட்ட அழைக்கப்படும் உயிருள்ள கற்களாக இருக்கிறோம். அவரே நம்முடைய அடித்தளமும் நிறைவுமாய் விளங்குகிறார்.
கடவுளுக்கான ஒரு உறைவிடத்தை நாம் கட்டுவதில்லை; மாறாக, கடவுளே தனது இதயத்தில் நமக்காக ஓர் இடத்தை ஆயத்தம் செய்கிறார் என்பதை மறைநூல் நமக்கு நினைவூட்டுகிறது. இயேசு கிறிஸ்து வழியாக, தந்தையாம் இறைவனின் அன்பின் ஆழத்தை நாம் கண்டறிகிறோம். அவர் நமக்கு மன்னிப்பையும், மீட்பையும், புதிய வாழ்வையும் வழங்குகிறார். கிறிஸ்துவிடம் கொள்ளும் நம்பிக்கை, ஒரு பதிலிறுப்பையும் கோருகிறது. அப்பாவி மக்களுக்கு வேதனை அளிக்கும் வன்முறையையும் போரையும் ஊக்குவித்துக்கொண்டு, துயரத்தில் இருப்பவர்களுக்கும் அடைக்கலம் தேடுபவர்களுக்கும் உதவ மறுத்துக்கொண்டு, கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூற முடியாது.
இந்த பேராலயத்தின் உச்சியில் இடம்பெற்றிருக்கும் சிலுவை நம்பிக்கையின் ஆற்றல்மிக்க அடையாளமாக நிற்கிறது. தனது பாடுகள், இறப்பு மற்றும் உயிர்ப்பு வழியாக, கிறிஸ்து துன்பத்தின் கருவியை அன்பு மற்றும் மீட்பின் குறியீடாக மாற்றினார். அவரை உற்றுநோக்குவதன் மூலம், கடவுளைப் பற்றியும் நம்மைப் பற்றியும் உண்மையை நாம் கண்டறிகிறோம். அவருடைய ஒளி இருளில் தொடர்ந்து ஒளிர்கிறது மற்றும் மனிதகுலத்தை அமைதி மற்றும் முடிவில்லா வாழ்வை நோக்கி வழிநடத்துகிறது என்பதே அந்த உண்மை.
இன்று நாம் அந்தோனி கௌடியையும் நினைவு கூர்கிறோம், அவருடைய பற்றுறுதி இந்த தலைசிறந்த படைப்பை உருவாக்க அவரைத் தூண்டியது. கட்டிடக்கலை, அழகு மற்றும் படைப்பாற்றல் மூலம் அவர் நற்செய்தியை அறிவித்துள்ளார். இந்த பேராலயம் ஒரு நினைவுச் சின்னத்தை விட மேலானது; இது கற்கள், நிறம் மற்றும் ஒளியின் மூலம் நம்பிக்கையை பறைசாற்றும் ஒரு கருவியாகச் செயல்பட்டு அனைவரையும் கிறிஸ்துவைச் சந்திக்க அழைக்கிறது.
அன்பு சகோதர சகோதரிகளே, இந்த ஆலயத்தின் அழகு நாம் நற்செய்தியை இன்னும் உண்மையுடன் வாழ நம்மைத் தூண்டுவதாக. வீழ்ந்திருப்பவர்களை உயர்த்துவோம், தேவையில் உள்ளவர்களுக்குப் பணிவிடை செய்வோம், நம்பிக்கையுடன் ஒன்றிணைந்து நடப்போம். கிறிஸ்துவின் சிலுவை நம் பாதையை ஒளிரச் செய்து, கடவுளின் அரசை நோக்கி நம்மை வழிநடத்துவதாக.
கடவுள் என்றென்றும் போற்றப்பெறுவாராக.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
