திருஇதயத்தின் இரக்கம் மனிதகுலத்தை புதுப்பிக்கட்டும்!

இயேசுவில், இந்த தெய்வீக அன்பின் முழுமையான வெளிப்பாட்டை நாம் காண்கிறோம். புறக்கணிப்பு, துன்பம் மற்றும் தியாகங்களுக்கு மத்தியிலும் அவருடைய திருஇதயம் உறுதியாக நிலைத்திருந்தது. அவரை நோக்கிப் பார்க்கும்போது, நாம் வாழ்வின் ஒரு புதிய வழியைக் கண்டடைகிறோம்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஜூன் 11, வியாழக்கிழமையன்று, ஸ்பெயின் நாட்டிற்கான தனது திருத்தூதுப் பயணத்தின் ஒரு பகுதியாக,  லாஸ் பால்மாஸ் நகரிலுள்ள கிரான் கனாரியா விளையாட்டரங்கில் திருஇதய ஆண்டவர் பெருவிழாவை முன்னிட்டு இடம்பெற்ற திருப்பலிக்கு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தலைமையேற்று சிறப்பித்தார். அத்திருப்பலியின்போது திருத்தந்தை அவர்கள் ஆற்றிய மறையுரை.

அன்பான சகோதர சகோதரிகளே,

இந்த நாளின் முடிவில், இந்த பலிபீடத்தின் முன்னால் கூடியிருக்கும் நாம், இந்த மண்ணில் நடந்துள்ள அனைத்து நன்மைகளுக்காகவும் நாம் கடவுளுக்கு நன்றி செலுத்துவோம். மேலும், கடலில் தங்கள் உயிரை இழந்த நம் சகோதர சகோதரிகளை நாம் சிறப்பாக நினைவுகூர்ந்து, அவர்களை ஆண்டவரின் இரக்கத்திடம் ஒப்படைப்போம்.

இயேசுவின் திருஇதயப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்நாளில், கிறிஸ்துவின் இதயத்திலிருந்து வழியும் இரக்கம், பரிவு மற்றும் அன்பில் நாமும் பங்குபெறத் தேவையான அருளை வேண்டுவோம். மனிதகுலத்தின் மீதான கடவுளின் நிபந்தனையற்ற அன்பை இந்தத் திருஇதயம் நமக்கு வெளிப்படுத்துகிறது. இந்த அன்பு தகுதியினாலோ அல்லது சலுகையினாலோ பெறப்பட்டதல்ல, மாறாக முற்றிலும் இலவசமாக நமக்கு வழங்கப்பட்டதாகும். நாம் அதற்குப் பதிலன்பு செலுத்தத் தவறினாலும், நம்மை ஒருபோதும் கைவிடாத நம்பிக்கைமிக்க அன்பு அது.

இயேசுவில், இந்த தெய்வீக அன்பின் முழுமையான வெளிப்பாட்டை நாம் காண்கிறோம். புறக்கணிப்பு, துன்பம் மற்றும் தியாகங்களுக்கு மத்தியிலும் அவருடைய திருஇதயம் உறுதியாக நிலைத்திருந்தது. அவரை நோக்கிப் பார்க்கும்போது, நாம் வாழ்வின் ஒரு புதிய வழியைக் கண்டடைகிறோம்: அது தோழமை, சேவை மற்றும் தியாக அன்பை மையமாகக் கொண்ட ஒரு வாழ்க்கை. கிறிஸ்துவின் அன்பிற்கு நாம் காட்டும் பதிலன்பானது, நம் சகோதர சகோதரிகள் மீது குறிப்பாக ஏழைகள், நலிவுற்றோர் மீதும், நமக்குத் கைம்மாறு செய்ய இயலாதவர்கள் மீதும் நாம் பொழியும் தியாக அன்பின் வழியாகவே அது வெளிப்பட வேண்டும்.

இந்தத் தீவுகளில், இந்த அன்பானது விருந்தோம்பல், ஒருவருக்கொருவர் ஆதரவு மற்றும் தாராளமான சேவையின் மூலம் கண்கூடாகத் தெரிகிறது. உண்மையான பிறரன்பு என்பது உடனடித் தேவைகளுக்குப் பதிலளிப்பது மட்டுமல்லாமல், மக்கள் கடவுளின் பிள்ளைகளாக முழுமையாக மலரும்படி, அவர்கள் தங்கள் நம்பிக்கை, மாண்பு மற்றும் சுயமரியாதையை மீண்டும் பெறவும் உதவுகிறது. கிறிஸ்தவ அன்பு ஒவ்வொரு மனிதனின் முழுமையான வளர்ச்சியை நாடுகின்றது; மேலும் சமூகத்தில் அவர்கள் மாண்போடும் மரியாதையோடும் பங்கெடுப்பதை ஊக்குவிக்கிறது.

உண்மையான பிறரன்பிற்கு தாழ்ச்சி அவசியம் என்பதையும் நற்செய்தி நமக்கு நினைவூட்டுகிறது. இயேசுவின் திருஇதயம் தாழ்மையுள்ளது; தாழ்மையான இதயங்களால் மட்டுமே பிறரின் தேவைகளை உண்மையாகவே கண்டுகொள்ள முடியும். அகந்தை நம்மைத் தனிமைப்படுத்தி, நாமே நமக்கு போதுமானவர்கள் என்று நம்ப வைக்கிறது. ஆனால், மனத்தாழ்மையோ நம்மை கடவுளுக்கும் பிறருக்கும் முன்னால் திறந்த மனதுடன் வழிநடத்துகிறது. தாழ்ச்சி இருக்கும் இடத்தில் அன்பு வளர்கிறது; அன்பு வளரும் இடத்தில் அமைதி செழிக்கிறது.

இன்று, முள்முடி சூட்டப்பட்டதும் அன்பினால் சுடர்விட்டு எரிவதுமான இயேசுவின் திருஇதயத்தை நாம் வணங்கும்போது, இவ்வுலகில் கிறிஸ்துவின் வாழும் சாட்சிகளாக இருக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை நினைவில் கொள்வோம். பிறரன்போடு சேவை செய்யவும், தாராள மனதோடு மன்னிக்கவும், மற்றும் மரியாதை, நம்பிக்கை, ஒருமைப்பாடு ஆகியவற்றால் அடையாளப்படுத்தப்பட்ட சமூகங்களைக் கட்டியெழுப்பவும் நம் அர்ப்பணிப்பைப் புதுப்பிப்போம்.

திருஇதயத்தின் அன்பு நம் இதயங்களை உருமாற்றி, நம்மை இரக்கத்தின் மற்றும் அமைதியின் கருவிகளாக மாற்றுவதாக. போர்கள் ஒழியட்டும், பிரிவினைகள் குணமாகட்டும், அன்பினால் ஒப்புரவாக்கப்பட்ட ஒரு புதிய மனிதகுலம் உலகம் முழுவதும் மலரட்டும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

11 ஜூன் 2026, 15:29