திருஅவையின் மறைபொருள் மற்றும் நற்செய்தி வாழ்விற்கான திருத்தந்தையின் உன்னத அழைப்பு!

நமது குடும்பங்களும், பங்குகளும், சமூகங்களும் இறைவனின் அன்பான அரவணைப்பை மக்கள் உணர்ந்துகொள்ளும் இடங்களாக மாற வேண்டும்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

ஜூன் 09, செவ்வாயன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஸ்பெயின் நாட்டிற்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின் ஒரு பகுதியாக, பார்சிலோனா உயர் மறைமாவட்டத்தின் தலைமைக் கோவிலான திருச்சிலுவை மற்றும் புனித யூலாலியா பேராலயத்திற்குச் சென்றார். அங்கு இடம்பெற்ற நண்பகல் வழிபாட்டில் திருத்தந்தை கலந்து கொண்டார். அவ்வழிபாட்டின்போது திருத்தந்தை ஆற்றிய உரை.

அன்பு சகோதர சகோதரிகளே,

மிகுந்த மகிழ்ச்சியுடன், இந்த பேராலயத்தில் உங்களோடு இணைந்து இறைவேண்டல் செய்வதன் மூலம்  பார்சிலோனாவில் எனது பயணத்தைத் தொடங்குகிறேன். நம்பிக்கையிலும் எதிர்நோக்கிலும் ஒன்றிணைந்த ஒரே குடும்பமாக, நாம் அனைவரும் இணைந்து நமது இதயங்களை இறைவனிடம் உயர்த்துவோம்.

இன்று, திருஅவையின் மறைபொருளைப் புரிந்துகொள்ள உதவும் இரண்டு அழகான படிமங்களைப் பற்றி நான் சிந்திக்க விரும்புகிறேன்: அவை மணவாட்டி மற்றும் உடல் ஆகியவையாகும்.

முதலாவதாக, திருஅவை என்பது கிறிஸ்துவின் அன்பு மணவாட்டி. ஒவ்வொருவரையும் இந்தச் சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்க இறைவன் அழைத்திருக்கிறார், ஏனெனில் உங்கள் ஒவ்வொருவரிடமும் தனித்துவமான அழகையும் நற்பண்பையும் அவர் காண்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, திருஅவை என்பது இறைவனின் அன்பின் கனியாகும். அது மனித ஆற்றலால் மட்டுமே வளர்வதில்லை, மாறாக இறைவனின் அன்பை ஏற்றுக்கொள்வதன் மூலம் வளர்கிறது. இறைவனால் நாம் நேசிக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்தவர்களால் மட்டுமே, பிறருடன் உண்மையான அன்பையும் ஒன்றிப்பையும் உருவாக்க முடியும்.

"எனவேதான், நமது குடும்பங்கள், பங்குகள், நிறுவனங்கள் மற்றும் சமூகங்கள் யாவும், மக்கள் அனைவரும் இறைவனின் அன்பான அரவணைப்பை உணர்ந்துகொள்ளும் இடங்களாக மாற வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம்." சகோதரத்துவம், கருணை, ஒருவருக்கொருவர் காட்டும் அக்கறை, மன்னிப்பு மற்றும் ஒற்றுமை நிறைந்த சூழலை உருவாக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம். பார்சிலோனா நகரம், தாராள மனப்பான்மை மற்றும் விருந்தோம்பல் நிறைந்த வளமான கிறிஸ்தவ பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இந்த உணர்வு, உங்களிடையே செழித்து வரும் நற்செய்தி அறிவிப்பு, ஆன்மீக உருவாக்கம் மற்றும் தொண்டுப் பணிகள் மூலம் இன்றும் தொடர்கிறது.

இரண்டாவது படிமம் உடலைப் பற்றியது. கிறிஸ்து திருஅவையின் மணமகன் மட்டுமல்ல, அவர்தான் இந்த ஒரே உடலாகிய திருஅவையின் தலைவருமாவார். திருமுழுக்கின் வழியாக, நாம் அனைவரும் அந்த உடலின் உறுப்பினர்களாகிவிட்டோம்; ஒரே ஆவியால் இணைக்கப்பட்டு, ஒரே புனிதத்தை நோக்கி அழைக்கப்பட்டுள்ளோம்.

நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு கொடைகளையும் பொறுப்புகளையும் பெற்றுள்ளோம். சிலர் வெளிப்படையாகப் பணியாற்றுகிறார்கள், மற்றவர்கள் அமைதியாகவும் பெரும்பாலும் கவனிக்கப்படாமலும் பணியாற்றுகிறார்கள். இருப்பினும், ஒவ்வொரு அழைப்பும், ஒவ்வொரு பணிநிலையும் மற்றும் ஒவ்வொரு சேவையும் இன்றியமையாதது. ஒரு உயிருள்ள உடலின் உறுப்புகளைப் போலவே, நாம் ஒருவரை ஒருவர் சார்ந்துள்ளோம். நமது வலிமை நமது ஒற்றுமையிலிருந்து வருகிறது, நமது ஒற்றுமை கிறிஸ்துவின் ஆவியிலிருந்து வருகிறது.

எனவே, கடவுள் நமக்கு இடையே ஏற்படுத்திய ஒன்றிணைப்பை வலுவிழக்கச் செய்யும் பிரிவினையோ, துருவமுனைப்போ அல்லது சுயநலமோ எப்போதுமே இடம் பெற அனுமதிக்கக் கூடாது. போர், மோதல் மற்றும் வளர்ந்து வரும் தனிமனித வாதத்தால் காயமடைந்த உலகில், நாம் ஒற்றுமை, நல்லிணக்கம், வரவேற்பு மற்றும் அமைதியின் சான்றுகளாக இருக்க அழைக்கப்பட்டுள்ளோம்.

புனித யுலாலியா மற்றும் நமக்கு முன்னால் சென்ற பல புனிதர்களைப் போலவே, நமது வாழ்வை இறைவனுக்குத் தாராளமாக அர்ப்பணிப்போம். நிலையற்றவற்றின்மீது அல்லாமல் நிலைத்திருப்பவற்றின் மீது நம் வாழ்வைக் கட்டியெழுப்புவோம், உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்தவற்றிற்காக நம்மையே தியாகம் செய்யத் தயாராக இருப்போம்.

திருஅவையின் அன்னையும் ஒற்றுமையின் தாயுமான கன்னி மரியா, இந்த பணியில் நாம் உண்மையுள்ளவர்களாக இருக்க உதவுவாராக. இதன் மூலம் நாம் அனைவரும் கிறிஸ்துவில் ஒன்றாக இணைந்து, உலகிற்கு அவரது அன்பின் உயிருள்ள அடையாளமாகத் திகழ்வோமாக.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

10 ஜூன் 2026, 11:20