தேடுதல்

போர்கோ லௌதாத்தோ சீ மையத்தில் நடைபெற்ற முதல் “போர்கோ உரையாடல்கள்” நிகழ்வில் பங்கேற்றவர்களைச் சந்தித்த திருத்தந்தை. போர்கோ லௌதாத்தோ சீ மையத்தில் நடைபெற்ற முதல் “போர்கோ உரையாடல்கள்” நிகழ்வில் பங்கேற்றவர்களைச் சந்தித்த திருத்தந்தை.  (@Vatican Media)

புதிய எருசலேமைக் கட்டியெழுப்பும் தலைமைத்துவத்திற்கு திருத்தந்தை அழைப்பு!

போர்கோ லௌதாத்தோ சீ மையத்தில் நடைபெற்ற முதல் “போர்கோ உரையாடல்கள்” நிகழ்வில் பங்கேற்றவர்களைச் சந்தித்த திருத்தந்தை, வரலாற்று வேர்களை மறந்து விடும் இன்றைய உலகிற்கு அறநெறி சார்ந்த தலைமைத்துவம் அவசியம் என்று வலியுறுத்தினார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

வரலாற்று வேர்களை மறந்து விடும் ஆன்மீக மற்றும் பண்பாட்டு குருட்டுத்தன்மை இன்றைய உலகில் காணப்படுவதாகக் குறிப்பிட்ட திருத்தந்தை, இலாபத்தை மட்டுமே நோக்கும் “பாபேல் கோபுர” மனப்பான்மைக்கு பதிலாக, அன்பை அடிப்படையாகக் கொண்ட “புதிய எருசலேம்” எனும் அன்பின் நாகரிகத்தை உருவாக்க அனைவரும் அழைக்கப்படுகிறோம் என்று கூறினார்.

ஜூன் 19, வெள்ளியன்று, இத்தாலியின் காஸ்தல் கந்தோல்போ (Castel Gandolfo) பகுதியில், வத்திக்கானின் முன்னெடுப்பில் உருவாக்கப்பட்ட ஒரு மையமான  போர்கோ லௌதாத்தோ சீ (Borgo Laudato Si’) மையத்தில் நடைபெற்ற முதல் “போர்கோ உரையாடல்கள்” (Borgo Dialogues) நிகழ்வில் பங்கேற்றவர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, இன்றைய பிளவுபட்ட உலகில் அறநெறி சார்ந்த தலைமைத்துவத்தை புதுப்பித்து மறுவடிவமைப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் மனிதம், முதுமை மற்றும் வாழ்வாற்றல், விளையாட்டு மற்றும் தூதரகம், நிலைத்த வளர்ச்சி போன்ற முக்கிய தலைப்புகள் குறித்து கலந்துரையாடிய பங்கேற்பாளர்களைப் பாராட்டிய திருத்தந்தை, பொதுநலனையும் அனைவருக்கும் மாண்பான வாழ்வையும் முன்னேற்றுவதற்காக அனைத்து மக்களுடனும் உரையாட வேண்டும் என்ற தனது மகத்தான மானுடம்  திருத்தூது மடலின் அழைப்பை நினைவூட்டினார்.

இறுதியாக, சிறிய ஆனால் உறுதியான நற்செயல்கள் மூலமே அன்பின் நாகரிகம் கட்டியெழுப்பப்படும் என்றும், படைப்பின் அழகால் தூண்டப்பட்டு உலகளாவிய பொறுப்புணர்வுடன் செயல்படும் துணிச்சலான தலைவர்களை உருவாக்குவது காலத்தின் தேவை என்று வலியுறுத்திய திருத்தந்தை, மனித மாண்பையும் அன்பையும் வளர்க்கும் “புதிய எருசலேமின் தாழ்மையான கட்டடக் கலைஞர்களாக” இருக்குமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்து தனது உரையை திருத்தந்தை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

19 ஜூன் 2026, 12:01