திருத்தந்தையின் ஸ்பெயின் நாட்டிற்கான திருத்தூதுப் பயணத்தின் நான்காம் நாள் நிகழ்வுகள்!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
ஸ்பெயின் நாட்டிற்கான தனது அதிகாரப்பூர்வ திருத்தூதுப் பயணத்தின் முக்கியக் கட்டமாக, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் இன்று மாட்ரிட் நகரிலிருந்து பார்சிலோனா நகருக்குச் செல்கிறார்.
மாட்ரிட் நகரின் பயணத் திட்டங்களை நிறைவு செய்யும் விதமாக, இன்று காலை 10:20 மணிக்கு மாட்ரிட்டில் உள்ள 'ஐஃபெமா' (IFEMA) கண்காட்சி மையத்தின் 3-வது அரங்கில் (Pavilion 3) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட கூட்டத்தில் திருத்தந்தை கலந்துகொள்கிறார். அங்கு தன்னார்வலர்களைச் சந்தித்து, உரை ஆற்றுகிறார்.
அந்த சந்திப்பைத் தொடர்ந்து, காலை 11:10 மணிக்கு மாட்ரிட்டின் அடோல்போ சுவாரஸ் பராஹாஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் பார்சிலோனா புறப்படுகிறார். மதியம் மணி12:25 க்கு பார்சிலோனாவின் ஜோசப் தர்ரடெல்லாஸ் எல் பிராட் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைகிறார். அங்கு திருத்தந்தைக்கு, அரசு அதிகாரிகளும் திருஅவை தலைவர்களும் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
பார்சிலோனா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு மதியம் 1:00 மணியளவில் நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க புனித சிலுவை மற்றும் புனித இயூலாலியா பேராலயத்தை (Cathedral of the Holy Cross and Saint Eulalia) வந்தடைகிறார். அங்கு நூற்றுக்கணக்கான நம்பிக்கையாளர்களின் வாழ்த்தொலிகளுக்கு இடையே நடைபெறும் சிறப்பு நண்பகல் ஜெப வழிபாட்டிற்கு (Midday Prayer) திருத்தந்தை தலைமை தாங்குகிறார்.
இன்றைய நாளின் இறுதி நிகழ்வாக, இரவு 8:00 மணிக்கு லூயிஸ் காம்பனிஸ் ஒலிம்பிக் மைதானத்தில் (Lluís Companys Olympic Stadium) பல்லாயிரக்கணக்கான நம்பிக்கையாளர்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு இரவு விழிப்பு வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
