தேடுதல்

திருத்தூதுப் பயணத்தின் போது முதியோர் இல்லத்தில் உள்ளவர்களைச் சந்தித்த திருத்தந்தை பதினான்காம் லியோ திருத்தூதுப் பயணத்தின் போது முதியோர் இல்லத்தில் உள்ளவர்களைச் சந்தித்த திருத்தந்தை பதினான்காம் லியோ 

முதியோரை அன்புடன் அணுக இளைஞர்களுக்கு திருத்தந்தை அழைப்பு!

ஜூலை மாதத்தில் கொண்டாடப்படவுள்ள உலக தாத்தா-பாட்டிகள் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள தனது செய்தியில், திருத்தந்தை, இறைவன் ஒவ்வொருவரையும் அன்போடு நினைவில் வைத்திருக்கிறார் என்று வலியுறுத்தினார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

முதுமை என்பது ஆன்மீக வளர்ச்சிக்கும், இறைவனின் அன்பை புதிதாகக் கண்டறிவதற்கும், நம்பிக்கையை ஆழப்படுத்துவதற்குமான அருள்நிறைந்த காலம் என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார். 

ஜூன் 15, திங்களன்று, நான் உன்னை ஒருபோதும் மறப்பதில்லை” (எசாயா 49:15) என்ற மையப்பொருளில் ஜூலை மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ள ஆறாவது உலக தாத்தா-பாட்டிகள் மற்றும் முதியோர்கள் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, இறைவன் ஒவ்வொரு மனிதரையும் மறவாமல் அன்போடு நினைவில் வைத்திருக்கிறார் என்றும் வலியுறுத்தினார்.

“நான் உன்னை ஒருபோதும் மறப்பதில்லை”  என்ற இறைவாக்கினர் எசாயாவின் இறைவார்த்தைகளை மேற்கோள்காட்டிய திருத்தந்தை, தனிமை, புறக்கணிப்பு மற்றும் சமூக அக்கறையின்மையால் பல முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும், குடும்பங்களிலும், முதியோர் பராமரிப்பு இல்லங்களிலும், சமூகத்திலும் பல முதியவர்கள் கவனிக்கப்படாமல் விடப்படுகின்றனர் என்ற வருத்தத்தையும் வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், தாத்தா-பாட்டிகளையும், தனிமையில் வாழும் முதியவர்களையும் நேரில் சந்தித்து அவர்களுடன் நேரம் செலவிடும் பழக்கத்தை இளைஞர்களும் குடும்பங்களும் புதுப்பிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த திருத்தந்தை, அன்பும் அக்கறையும் நிறைந்த சந்திப்புகள் மூலம் இறைவனின் அன்பை அவர்களுக்கு உணர்த்த முடியும் என்றும் எடுத்துக்காட்டினார்.

மேலும் முதியோர் தங்களின் பலவீனங்களைக் கண்டு மனம் தளர வேண்டியதில்லை என்று கூறிய திருத்தந்தை, வயது முதிர்ந்தாலும் அவர்கள் இறைவனின் அன்பிலும் பராமரிப்பிலும் நிலைத்திருக்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

உலகளவில் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களை “புதிய மக்கள்” என வர்ணித்த திருத்தந்தை, முதியவர்கள் பலவீனங்களையும் வரம்புகளையும் ஏற்றுக்கொண்டு, அவற்றின் வழியாக நம்பிக்கை, இரக்கம் மற்றும் ஆன்மீக வலிமையை வெளிப்படுத்துமாறும், மேலும், உலக அமைதிக்காக தங்கள் இறைவேண்டல் பணியை தொடர்ந்து அர்ப்பணிக்குமாறும் திருத்தந்தை அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இறுதியாக, தங்களின்இறைவேண்டல்களால்  திருஅவையைத் தாங்கி நிற்கும் அனைத்து முதியோர்களுக்கும் நன்றியைத் தெரிவித்த திருத்தந்தை, “இறைவன் ஒருபோதும் நம்மை மறப்பதில்லை” என்ற நம்பிக்கையோடு வாழுமாறு அவர்களை ஊக்குவித்து தனது செய்தியை செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

16 ஜூன் 2026, 11:09