திருத்தூது மடலின் தொலைநோக்குப் பார்வையில் "சகோதரன் சூரியன்" அறக்கட்டளை உதயம்!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2024 ஆம் ஆண்டு வெளியிட்ட திருத்தூது மடலான "சகோதரன் சூரியன்" (Fratello Sole) எனும் மடலில் முன்வைத்த தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், அதிகாரப்பூர்வமாக "சகோதரன் சூரியன்" அறக்கட்டளையை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் நிறுவியுள்ளார்
இந்த முன்முயற்சியானது வத்திக்கானின் எல்லைக்கு வெளியில் உள்ள சாண்டா மரியா டி காலேரியா பகுதியில் வேளாண்-சூரிய ஆற்றல் (agrivoltaic) பூங்காவை உருவாக்குவதன் மூலம் வளங்குன்றா வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டம் அப்பகுதியில் அமைந்துள்ள வத்திக்கான் வானொலி ஒலிபரப்பு நிலையத்திற்கு மட்டுமின்றி, வத்திக்கான் நகர் அரசின் முழுமையான மின்னாற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தூய்மையான ஆற்றலை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பை வத்திக்கான் நகர் ஆளுநரகத்தின் தலைவரிடமும், திருப்பீடத்தின் சொத்துக்களை நிர்வகிக்கும் நிர்வாகத்தின் (APSA) தலைவரிடமும் ஒப்படைத்து, அவர்களை சிறப்பு ஆணையர்களாக நியமித்து விரிவான நிர்வாக அதிகாரங்களை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூலையில் கையெழுத்திடப்பட்டு, 2026 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைமுறைக்கு வந்துள்ள இத்தாலிய அதிகாரிகளுடனான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் இந்த அறக்கட்டளையை நிறுவுவதன் மூலம் இந்தத் திட்டத்திற்கு ஒரு உறுதியான வடிவத்தைக் கொடுப்பது அவசியம் என்று கருதினார்.
இந்த அறக்கட்டளை எதிர்காலத்திற்கான நம்பிக்கையின் அடையாளமாகவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அதே வேளையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை விவசாயத்துடன் ஒருங்கிணைப்பதற்கான ஒரு முன்மாதிரியாகவும் கருதப்படுகிறது.
'இறைவா உமக்கே புகழ்', 'கடவுளைப் புகழ்வோம்' ஆகிய திருத்தூது மடல்கள் மற்றும் திருஅவையின் சமூகக் கற்பித்தல் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட இந்த அறக்கட்டளை வத்திக்கான் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு, சாண்டா மரியா டி காலேரியாவில் செயல்பட உள்ளது.
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் இந்த அறக்கட்டளையின் சட்டதிட்டங்களுக்கு ஒப்புதல் அளித்ததுடன், முதல் மூன்றாண்டு காலத்திற்கு ஆளுநரகம் மற்றும் APSA-வின் தலைவர்களை அதன் தலைவர் மற்றும் துணைத் தலைவராக நியமித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
