சீரோ-மலங்கரா கத்தோலிக்க திருஅவையின் பிரதிநிதிகளை திருத்தந்தை பதினான்காம் லியோ சந்தித்தபோது. சீரோ-மலங்கரா கத்தோலிக்க திருஅவையின் பிரதிநிதிகளை திருத்தந்தை பதினான்காம் லியோ சந்தித்தபோது.  (@VATICAN MEDIA)

சீரோ-மலங்கரா கத்தோலிக்கர்களின் விசுவாச மரபைப் பேணிக்காக்க அழைப்பு விடுத்த திருத்தந்தை!

ஐரோப்பாவில் வாழும் சீரோ-மலங்கரா கத்தோலிக்கர்களின் முதல் மாநாட்டை முன்னிட்டு அவர்களின் பிரதிநிதிகளை சந்தித்த திருத்தந்தை, கல்வி, சமூகநீதி மற்றும் மனித மேம்பாட்டிற்காக சீரோ-மலங்கரா திருஅவை ஆற்றிவரும் சேவைகளைப் பாராட்டினார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

கல்வி, சமூகநீதி மற்றும் மனித மேம்பாட்டிற்காக, குறிப்பாக விளிம்புநிலை மக்களிடையே சீரோ-மலங்கரா திருஅவை ஆற்றிவரும் சேவைகளைப் பாராட்டிய திருத்தந்தை, கிறிஸ்தவர்களின் வாழ்வும் அன்புப் பணிகளும் நற்செய்தி அறிவிப்பின் மிகச் சிறந்த கருவிகளாக விளங்குகின்றன என்று கூறினார்.

ஜூன் 15, திங்களன்று, ஐரோப்பாவில் வாழும் சீரோ-மலங்கரா கத்தோலிக்கர்களின் முதல் மாநாட்டை முன்னிட்டு, அத்திருஅவையைச் சேர்ந்த ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர் மற்றும் இறைமக்கள் குழுவினரை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, சீரோ-மலங்கரா திருஅவை, உரோமைத் திருஅவையுடனான முழுமையான திருஅவை ஒற்றுமையின் நூற்றாண்டை முன்னிட்டு மேற்கொண்டு வரும் ஆன்மீகப் புதுப்பிப்பு பயணத்தை பாராட்டினார்.

இந்த ஒற்றுமையை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய அருளாளர் மார் இவானியோஸ் மற்றும் மார் தியோபிலோஸ் ஆகியோரின் பங்களிப்புகளை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, மார்இவானியோஸை “இயேசுவின் இதயத்திற்கு ஏற்ப வாழ்ந்த உண்மையான மேய்ப்பர்” என்று வர்ணித்தார்.

மேலும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாக திருஅவையை உருவாக்க வேண்டும் என்ற அவரது தொலைநோக்கு பார்வையைப் புகழ்ந்த திருத்தந்தை, மேலும், வார்த்தைகளால் மட்டுமல்லாது, நற்பண்புகளாலும் அன்புப் பணிகளாலும் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்பதை மார் இவானியோஸ் உணர்ந்திருந்தார் என்றும் குறிப்பிட்டார்.

ஐரோப்பாவில் அதிகரித்து வரும் சீரோ-மலங்கரா கத்தோலிக்கர்களின் புலம்பெயர் சமூகத்தைப்பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை, அவர்களின் ஆன்மீக மற்றும் திருவழிபாட்டு மரபுகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன், இதற்காக ஐரோப்பாவிற்கான முதல் முழுநேர திருத்தூதுப் பார்வையாளராக ஆயர் மார்ஒஸ்தாத்தியோஸ் நியமிக்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இறுதியாக, திருஅவைத் தலைமைத்துவத்துடன் ஒன்றிப்பில் நிலைத்திருக்கவும், தங்களின் வளமான ஆன்மீக மரபுகளைப் பேணிக் காக்கவும், குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே நம்பிக்கை நிறைந்த குடும்பங்களை உருவாக்கவும் அழைப்பு விடுத்து திருத்தந்தை தனது உரையை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

16 ஜூன் 2026, 10:40