படைப்புலகைப் பாதுகாப்பது ஒவ்வொரு மனிதரின் பொறுப்பு!

வியன்னாவில் நடைபெற்ற ஆஸ்திரிய உலக உச்சி மாநாட்டிற்கு அனுப்பிய காணொளிச் செய்தியில், சுற்றுச்சூழல் நெருக்கடியை சமாளிக்க உலகளாவிய ஒத்துழைப்பும், ஏழை நாடுகளுக்கான ஆதரவும் அவசியம் என்று திருத்தந்தை தெரிவித்தார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

காலநிலை நெருக்கடியை திறம்பட எதிர்கொள்ள வேண்டுமெனில், சமுதாயம் எதிர்கொள்ளும் ஆழமான சமூக மற்றும் நெறிமுறைச் சவால்களையும் கையாள வேண்டியது அவசியம் என திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வலியுறுத்தினார்.

ஜூன் 16, செவ்வாயன்று, ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் இடம்பெற்ற பத்தாவது ஆஸ்திரிய உலக உச்சி மாநாட்டிற்கு (Austrian World Summit) அனுப்பிய காணொளிச் செய்தியில், இவ்வாறு கூறிய திருத்தந்தை, தனது மகத்தான மானுடம் என்ற  திருத்தூது மடலை மேற்கோள்காட்டி, சுற்றுச்சூழல் நெருக்கடி என்பது ஒரு தனிப்பட்ட பிரச்சனை அல்ல என்றும், அது விரிவான சமூக-பொருளாதார நெருக்கடியின் ஒரு பகுதியாகும் என்றும் குறிப்பிட்டார்.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான அடிப்படையாக, ஒவ்வொரு மனிதரின் சமமான மாண்பு, அடிப்படை மனித உரிமைகள், சமூக நீதி, ஒற்றுமை உணர்வு மற்றும் பொதுநலம் ஆகியவை அமைய வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை, குறிப்பாக ஏழைகள் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவால் அதிகம் பாதிக்கப்படுபவர்களின் தேவைகள் கவனிக்கப்படாத நிலையில், தொழில்நுட்பத் தீர்வுகள் மட்டும் போதுமான பலனை அளிக்காது என்றும் தெரிவித்தார்.

மேலும், விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்பு ஆகிய கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை நற்பண்புகளை மையமாகக் கொண்டு பேசிய திருத்தந்தை, இறைவன் மனிதகுலத்திற்குக் கொடுத்த அரிய பரிசாகிய படைப்புலகைப் பேணிப் பாதுகாப்பது ஒவ்வொரு மனிதரின் பொறுப்பு என்று வலியுறுத்தினார்.

உயிரினங்களையும் இயற்கைச் செல்வங்களையும் பாதுகாப்பதற்கான பொறுப்புணர்வை விசுவாசம் மனிதர்களிடம் வளர்க்கிறது என்று குறிப்பிட்ட திருத்தந்தை, படைப்புலகைப் பேணிக் காப்பது கிறிஸ்தவர்களின் கடமையாக மட்டுமன்றி, உலகின் பல்வேறு சமயங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஊக்குவிக்கப்படும் ஒரு பொதுவான மனித விழுமியமாகும் என்றும் வலியுறுத்தினார்.

அச்சத்தை வென்று நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் சக்தியாக நம்பிக்கை திகழ்கிறது என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, மேலும், உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்தவும், மனித மாண்பையும் ஒற்றுமையையும் மையமாகக் கொண்ட பொருளாதார மாற்றத்தை முன்னெடுக்கவும், செல்வமிக்க நாடுகள் ஏழை நாடுகளுக்கு அதிக நிதி உதவிகளை வழங்கவும் அழைப்பு விடுத்தார்.

மனிதர்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் உண்மையான பராமரிப்பு கலாச்சாரத்தை வளர்க்க வேண்டுமென வலியுறுத்திய திருத்தந்தை, அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சாரத் தலைவர்கள் இலாபத்தை விட பொதுநலனுக்கு முன்னுரிமை அளித்து, “அன்பின் நாகரிகம்” உருவாக பாடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இறுதியாக, உச்சி மாநாட்டில் பங்கேற்றவர்கள் பராமரிப்பு மற்றும் பொறுப்புணர்வு நிறைந்த கலாச்சாரத்தை ஊக்குவித்து, மேலும் நீதியுடனும் நிலைத்தன்மையுடனும் கூடிய எதிர்காலத்தை உருவாக்க பங்களிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் தனது செய்தியை திருத்தந்தை நிறைவுசெய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

17 ஜூன் 2026, 12:23