கிறிஸ்துவை மையமாகக் கொண்டு உயிருள்ள திருஅவையாக வாழ திருத்தந்தை அழைப்பு!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
ஜூன் 20, சனிக்கிழமையன்று, பாவியா மற்றும் சாந்த்'ஆன்ஜலோ லோடிஜியானோ மேய்ப்புப்பணிப் பயணத்தின் ஒரு பகுதியாக, பாவியாவில் உள்ள புனித பேதுரு “இன் சியேல் த'ஓரோ” பேராலயத்தில் இடம்பெற்ற இறைவார்த்தை வழிபாட்டில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் மறையுரை வழங்கினார். அம்மறையுரைக்கு இப்போது செவிமெடுப்போம்.
அன்பான ஆயர்களே, அருள்பணியாளர்களே, துறவியரே, இறையியல் மாணவர்களே மற்றும் இறைமக்களே,
உங்களிடையே இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பாவியா திருஅவை, தனது பழமையான விசுவாச மரபைத் தக்கவைத்துக் கொண்டு, இன்றைய உலகின் சவால்களையும் தைரியமாக எதிர்கொண்டு செயல்படுவதை அறிந்து மகிழ்கிறேன். நம்பிக்கை குறைந்து வரும் சூழலிலும் நாம் மனம் தளராமல் இருக்க வேண்டும். அதற்குத் தேவையானது, வெளிப்படையாகத் தோன்றுவதைக் கடந்தும் இறைவனின் செயல்பாட்டைக் காணும் விசுவாசக் கண்களாகும்.
திருத்தூதர் பேதுரு கிறிஸ்தவர்களை “உயிருள்ள கற்கள்” என்று அழைக்கிறார். இன்று நாம் உயிருள்ள திருஅவையாக இருக்க வேண்டுமெனில் முதலில் கிறிஸ்துவோடு உறுதியாக இணைந்திருக்க வேண்டும். அவரே திருஅவையின் மூலைக்கல். நமது அனைத்து பணிகளும், திட்டங்களும், முயற்சிகளும் கிறிஸ்துவை மையமாகக் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் நாம் சிதறாமல், ஒன்றுபட்ட சகோதரத்துவத்தோடு இறையாட்சிக்காக மகிழ்ச்சியுடன் உழைக்க முடியும்.
சில பழைய கட்டமைப்புகளையும் பாதுகாப்பு உணர்வுகளையும் விட்டுவிட வேண்டியிருந்தாலும், நற்செய்தியை அறிவிப்பதே நமது முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும். குறிப்பாக அருள்பணியாளர்களும் துறவியரும் தங்களின் பணிச்சுமைகளுக்கிடையில் கிறிஸ்துவோடு உள்ள உறவிலிருந்து தொடர்ந்து வலிமை பெற வேண்டும்.
இன்றைய உலகில் பலர் ஆன்மீக உணர்வை இழந்திருக்கிறார்கள். ஆகவே இயேசு கிறிஸ்துவின் மகிழ்ச்சியூட்டும், விடுதலை தரும் நற்செய்தியை புதிய உற்சாகத்துடன் அறிவிக்க வேண்டியது அவசியமாகிறது. மனித வாழ்வின் அர்த்தத்தையும், இறைவனின் அன்பையும் வெளிப்படுத்தும் இந்த நற்செய்தி அனைவரையும் மீண்டும் விசுவாசப் பாதைக்கு அழைக்கிறது.
புனித அகுஸ்தினாரின் வாழ்க்கையும் மாற்றமும் நமக்கு உள்ளார்ந்த வாழ்வின் முக்கியத்துவத்தை நினைவூட்டுகின்றன. “உன்னுள் திரும்பிச் செல்; உண்மை மனிதனின் உள்ளத்தில் குடிகொண்டிருக்கிறது” என்ற அவரது வார்த்தைகள் இன்றும் பொருந்துகின்றன. குறிப்பாக இளைஞர்களின் தேடல்களுக்கு அவை வழிகாட்டுகின்றன.
உயிருள்ள கற்களாக அழைக்கப்பட்டுள்ள நாம், மக்களின் வாழ்வோடும் அவர்களின் மகிழ்ச்சிகள், சவால்கள் மற்றும் எதிர்பார்ப்புகளோடும் இணைந்து பயணிக்கும் திருஅவையாக இருக்க வேண்டும். குடும்பங்கள், இளைஞர்கள், திருவருட்சாதனங்களைப் பெறத் தயாராகும் விசுவாசிகள், மேலும் இறைநம்பிக்கையிலிருந்து விலகியிருப்போர் ஆகிய அனைவரையும் அன்புடனும் அக்கறையுடனும் அணுக வேண்டும். சிறிய கிறிஸ்தவக் குழுக்களை ஊக்குவித்து, இறைவார்த்தையைக் கேட்டு வாழும் மனப்பான்மையையும், ஏழைகளுக்கான சேவையையும், கல்வி மற்றும் கலாச்சாரத் துறைகளுடனான உரையாடலையும் வளர்த்து, நற்செய்திக்குச் சாட்சிகளாக இருக்க வேண்டும்.
அன்னை மரியா நமக்காகப் பரிந்துரைத்து, நற்செய்தியை அன்போடும் உற்சாகத்தோடும் வாழவும் சாட்சியமளிக்கவும் அருள் பெற்றுத்தரட்டும். புனித அகுஸ்தினார் மற்றும் புனித சீரோ இந்த திருஅவைக்கும் பாவியா நகருக்கும் எப்போதும் மன்றாடட்டும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
