தேடுதல்

தைபேய் பிரகடனத் திருத்தம் குறித்த மூன்றாவது நிபுணர் கூட்டம். தைபேய் பிரகடனத் திருத்தம் குறித்த மூன்றாவது நிபுணர் கூட்டம். 

நலவாழ்வுத் தரவுத்தளங்களில் அறநெறி பாதுகாப்புத் தேவை!

உலக மருத்துவக் கழகத்தின் 'தாய்பெய் பிரகடன' மறுஆய்வுக் கூட்டத்தை முன்னிட்டு அனுப்பிய செய்தியில், தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் இக்காலத்தில் மனித மாண்பைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் காலத்தில் மனித மாண்பைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

உலக மருத்துவக் கழகத்தின் 'தாய்பெய் பிரகடனத்தை' (Declaration of Taipei) மறுஆய்வு செய்வதற்கான மூன்றாவது நிபுணர் குழுக் கூட்டத்தை முன்னிட்டு, பேராயர் ரென்சோ பெகோராரோ அவர்களுக்கு அனுப்பிய செய்தியில் இவ்வாறு திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள இச்செய்தியில், 'எண்ணிம (டிஜிட்டல்) தொழில்நுட்பங்களின் அதிவேக வளர்ச்சியானது, தரவுப் பாதுகாப்பு மற்றும் தனிநபர் தனியுரிமைக் கொள்கைகளை மறுஆய்வு செய்து புதுப்பிப்பதை தற்போதைய காலத்தின் அவசரத் தேவையாகவும், முதன்மை முன்னுரிமையாகவும் மாற்றியுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது 'மாண்புமிகு மனிதநேயம்' என்ற திருத்தூது மடலை மேற்கோள்காட்டிய திருத்தந்தை, தனிமனித வாழ்க்கையை சுரண்டத்தக்க தரவுகளாக மாற்ற முயலும் ஒரு புதிய வகை காலனித்துவத்திற்கு எதிராக எச்சரித்துள்ளார்.

"ஒவ்வொரு மனிதனும் கடவுளின் உருவத்திலும் சாயலிலும் படைக்கப்பட்டவர்கள்" என்றும், "தனித்துவமான மற்றும் அளவிட முடியாத மதிப்புடையவர்கள்"  என்றும், "சுரண்டல் மற்றும் வணிகமயமாக்கலில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்"  என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

நலவாழ்வு பற்றிய தரவுத்தளங்கள் மற்றும் உயிரியல் களஞ்சியங்களுக்கான அறநெறி வழிகாட்டுதல்களை மறுபரிசீலனை செய்யும் முயற்சியில் ஈடுபடும் பங்கேற்பாளர்களை ஊக்குவித்த திருத்தந்தை, "அவர்களின் பணி மனித மாண்பை நிலை நிறுத்தவும்  பொது நலனுக்காக பகிரப்பட்ட அறிவை ஊக்குவிக்கவும் வேண்டும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 ஜூன் 2026, 13:16