தேடுதல்

2026.06.20 Azerbaijan

20 ஸ்பானிய மறைசாட்சிகளின் அருளாளர் பட்ட உயர்வுக்கு திருத்தந்தை ஒப்புதல்!

936ஆம் ஆண்டு ஸ்பெயின் உள்நாட்டுப் போரில் விசுவாசத்திற்காக உயிர்தியாகம் செய்த 20 மறைமாவட்ட அருள்பணியாளர்களின் வீரத்துவ பண்புகளை அங்கீகரித்து, அவர்களின் அருளாளர் பட்ட உயர்வுக்கான ஆணைகளுக்கு திருத்தந்தை ஒப்புதல் வழங்கியுள்ளார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஸ்பெயின் உள்நாட்டுப் போரின்போது 1936ஆம் ஆண்டில் விசுவாசத்திற்காக உயிர்தியாகம் செய்த 20 மறைமாவட்ட அருள்பணியாளர்களின் வீரத்துவ பண்புகளையும், கத்தோலிக்க விசுவாசத்தின் மீதான அவர்களது பற்றுதலையும் அங்கீகரித்து, அவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கும் பணியை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் ஆணைகளுக்கு  திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார் .

ஜூன் 18,  வியாழனன்று,  புனிதர் பட்ட படிநிலைகளுக்குரிய திருப்பீடத் துறையின் தலைவரான கர்தினால் மார்செல்லோ செமெராரோ அவர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இந்த ஒப்புதலை திருத்தந்தை வழங்கியுள்ளார்.

அருள்பணி யுவான் தோரெஸ் தோரெஸ் தலைமையிலான இந்த அருள்பணியாளர்கள், 1936ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இடம்பெற்ற கடுமையான மதத் துன்புறுத்தல்களின் போது கொல்லப்பட்டனர். அக்காலத்தில் இபிசா தீவில் பணியாற்றிய அருள்பணியாளர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினராக இருந்த இவர்களின் விசுவாசச் சாட்சியும் தியாக வாழ்வும், அப்பகுதி திருஅவையின் வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுள்ளன.

வணக்கத்திற்குரியவர் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டவர்களில், மயோர்கா தீவைச் சேர்ந்த ஆழ்ந்த செப வாழ்வும் மறையுணர்வு ஆன்மீக அனுபவமும் கொண்ட அன்னை கிளாரா அந்த்ரேயு இ மால்ஃபெரிட், பிரேசிலில் பல துறவற சபைகளை நிறுவிய பெல்ஜிய மறைப்பணியாளர் அருள்பணி ஜூலியோ எமிலியோ அல்பெர்டோ டே லொம்பார்தே, துறவற உருவாக்கம் மற்றும் பயிற்சிப் பணிக்காக தன்னை அர்ப்பணித்த சகோதரி மரியா பெத்ரா ஜோர்தானோ, அமெரிக்காவில் மரியா மாசற்ற அன்னையின் பங்குத்தளப் பார்வையாளர்கள் (Parish Visitors of Mary Immaculate) என்ற அமைப்பை நிறுவிய அன்னை மரியா தெரேசா டால்லன், மேலும் இரண்டாம் உலகப் போரின் போது யூதர்களுக்கு அடைக்கலம் அளித்து, பின்னர் புனித யோசேப்பின் இறைப்பற்றுள்ள தொழிலாளர்கள் (Pious Workers of Saint Joseph) என்ற துறவற அமைப்பைத் தோற்றுவித்த அன்னை மரியா அக்னேஸ் திரிப்பியோலி ஆகியோர் அடங்குகின்றனர்.

விசுவாசத்திற்காக உயிர்தியாகம் செய்தவர்களையும், தங்களது வாழ்நாள் முழுவதும் இறையன்பு, சேவை, தியாகம் மற்றும் வீரத்தன்மைமிக்க கிறிஸ்தவ வாழ்வுக்குச் சாட்சியமளித்தவர்களையும் திருஅவை தொடர்ந்து அங்கீகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

20 ஜூன் 2026, 16:00