"இளைஞர்களே! உலகிற்கு ஒளியாக மாறி வரலாற்றை மாற்றி அமையுங்கள்"
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
ஜூன் 06, சனிக்கிழமையன்று, ஸ்பெயின் நாட்டிற்கான தனது திருத்தூதுப் பயணத்தின் ஒரு பகுதியாக, அந்நாட்டின் தலைநகரான மாட்ரிட்டில் உள்ள புகழ்பெற்ற 'பிளாசா டி லிமா' (Plaza de Lima) மைதானத்தில் இளைஞர்களுடன் இடம்பெற்ற இரவு செப வழிபாட்டில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கலந்து கொண்டார். அந்த இரவு செப வழிபாட்டின்போது திருத்தந்தை ஆற்றிய உரை.
அன்புள்ள இளைஞர்களே!
ஒரு கிறிஸ்தவனாக, குருவாக, மறைப்பணியாளராக மற்றும் ஆயராக நான் வாழ்ந்த இந்த வாழ்நாள் முழுவதும், பல புனிதர்களின் வாழ்வு எனக்குப் பெருமளவிலான உந்துதலையும் வழிகாட்டுதலையும் அளித்துள்ளது. அவர்களுக்குள், திருவிவிலியத்தின் மீது கொண்ட அளப்பரிய அன்பிற்காகவும், நற்செய்திக்கு அவர் தந்த துணிச்சலான சான்றுக்காகவும் இன்றும் நமக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழும் புனித யோவான் கிறிசோஸ்தோம்; தமது ஞானத்தாலும் பேரன்பினாலும் திருஅவைக்கானப் பணியைச் செம்மையாக வழிநடத்திய வில்லநோவா நகர் புனித தோமா; மற்றும் பெரு நாட்டில் நற்செய்தி அறிவிப்பு, சமூக நீதி மற்றும் ஏழை எளிய மக்களின் பணிக்காகத் தனது வாழ்வையே முழுமையாக அர்ப்பணித்த மறைப்பணி ஆயரான புனித தோரிபியஸ் மகுரோவேஹோ ஆகியோர் அடங்குவர்.
புனிதத்தன்மை என்பது நம் அனைவருக்கும் சாத்தியமான ஒன்றுதான் என்பதை இவர்களது உன்னத வாழ்வு நமக்கு இன்றும் நினைவூட்டுகிறது. பெரு நாட்டில் நான் கழித்த ஆண்டுகள், எத்தகைய கடினமான சூழ்நிலைகளிலும் தளராமல் உறுதியாக இருக்கும் ஒரு விசுவாசத்தின் அழகை எனக்குக் கற்றுக்கொடுத்தன. அங்கிருந்த சாதாரண எளிய மக்களின் அன்றாடப் போராட்டங்களையும், அவர்களின் நம்பிக்கைகளையும் நேரில் சந்தித்தது, நான் இயேசுவின் ஒரு சிறந்த சீடனாக வளர்வதற்குப் பெரிதும் உதவியது. மோதல்களும் அமைதியின்மையும் நிலவும் இடங்களில் நற்செய்தி எவ்வாறு அமைதியைக் கொண்டுவருகிறது என்பதையும், அதுவே சமாதானத்திற்கும் சமூக நீதிக்கும் ஊற்றாக மாறுகிறது என்பதையும் நான் அங்கேதான் கற்றுக்கொண்டேன்.
நம்முடைய இந்த உலகத்தின் எண்ணற்ற சத்தங்களுக்கு மத்தியில், கடவுளின் குரலை நாம் பிரித்தறிந்து அடையாளம் காண்பதற்கு அமைதி இன்றியமையாததாகும். அந்த அமைதியில்தான், பிறருக்குச் செவிமடுக்கவும், இறைவனிடம் செபிக்கவும், தற்காலிகமான உலகக் கொள்கைகள் மறைந்துபோன பிறகும் என்றும் நிலைத்திருக்கும் உண்மைகளைக் கண்டறியவும் நாம் கற்றுக்கொள்கிறோம். நாம் சிறப்பான விதமாக செபத்திலும், திருவிவிலியத்திலும், நற்கருணை ஆராதனையிலும் இயேசு கிறிஸ்துவை நேருக்கு நேர் சந்திக்கிறோம்; அங்கேதான் அவருடைய பிரசன்னத்திற்கும் பேரன்பிற்கும் நம் இதயங்களை முழுமையாகத் திறந்து வைக்க முடிகிறது.
பிறர் தங்களது இறை நம்பிக்கையைக் கண்டடைவதற்கு நீங்கள் துணையாக இருக்கும்போது, நாம் அனைவரும் போதகர்களாக மாறுவதற்கு முன்பாக, முதலில் இயேசுவின் சீடர்களாக இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் ஆன்மீகப் பயணத்தின் எதார்த்தத்தை உண்மையாகப் பிறரோடு பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களுடைய செபம், விசுவாசம் மற்றும் விசுவாசம் மாறாத உண்மைத்தன்மை ஆகியவை ஒரு வாழும் சாட்சியமாக மாறட்டும். இன்றைய இளைஞர்கள் வெறும் கோட்பாடுகளால் ஈர்க்கப்படுவதில்லை; மாறாக, கிறிஸ்துவின் அன்பால் மறுமலர்ச்சி பெற்ற உன்னத வாழ்வைக் கண்டுதான் அவர்கள் உந்துதல் பெறுகிறார்கள். இன்றைய சமுதாயத்தில் வாழும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள், கிறிஸ்துவுக்குள் சுதந்திரமாக வாழ அழைக்கப்படுகிறீர்கள். அவருடைய பேரன்பு நம்மை பயம், போலி வாக்குறுதிகள் மற்றும் தற்காலிக உலக மோகங்களில் இருந்து விடுவிக்கிறது. குடும்பங்கள், பல்கலைக்கழகங்கள், பணியிடங்கள் மற்றும் டிஜிட்டல் (இணைய) உலகம் ஆகியவற்றிற்குள் நற்செய்தியின் ஒளியைக் கொண்டு செல்ல நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள். உங்களது அன்றாட உறவுகளின் வழியாக, இன்னும் கூடுதலான மனிதநேயமும் நம்பிக்கையும் கொண்ட ஒரு சமுதாயத்தை உருவாக்க உங்களால் உதவ முடியும்.
நீங்கள் மண்ணிற்கு உப்பாகவும், உலகிற்கு ஒளியாகவும் விளங்குமாறு உங்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். நீங்கள் வாழும் இந்த காலக்கட்டத்தின் எதார்த்த நிலைகளைப் புரிந்து கொண்டு, அவற்றை உங்களது ஞானம், பிறரன்பு மற்றும் விசுவாசத்தின் வழியாக மாற்றித் தியுங்கள். அலட்சியம், மோதல்கள் மற்றும் நிலையற்ற தன்மைகளால் ஆட்கொள்ளப்பட்டுள்ள இந்த உலகத்தில், நீங்கள் நம்பிக்கையின் மற்றும் புதுப்பித்தலின் அடையாளங்களாக மாறுங்கள். உங்களிடம் நான் ஒப்படைக்கும் இந்த மறைப்பணி எளிமையானது, அதே வேளையில் மிகவும் ஆழமானது; அதுவே, 'உண்மையான மனிதநேயத்தோடு வாழ்வது' (Be truly human) ஆகும். நேர்மை, இரக்கம் மற்றும் சமூக நீதி கொண்ட மனிதர்களாகத் திகழுங்கள். உண்மைகளைத் தேடி நாடுங்கள், மனித மாண்பைப் பாதுகாத்திடுங்கள், தேவையிலிருக்கும் எளியோரை அன்போடு அரவணைத்துப் பராமரியுங்கள். நிறைவான மனிதராக வாழ்ந்து காட்டிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி, இன்றைய உலகத்தில் நற்செய்தியின் உண்மையான மறைப்பணியாளர்களாக மாறுங்கள்.
பிறரன்பின் வழியாக வாழப்படும் விசுவாசத்திற்கு, வரலாற்றையே மாற்றி அமைக்கும் உன்னத ஆற்றல் உண்டு. உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்; இறைவன் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக!"
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
