2026.06.22 refugee

அகதிகளை அரவணைக்க திருத்தந்தை அழைப்பு!

உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு அகதிகளைப் பாதுகாக்கவும், அவர்களை அரவணைக்கவும் நாடுகளுக்கு திருத்தந்தை அழைப்பு விடுத்தார். மேலும், பிரேசிலில் சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞர்களுக்காக செபங்களை உறுதியளித்த அவர், கத்தோலிக்க–பெந்தகொஸ்தே உரையாடலில் பங்கேற்றவர்களை வாழ்த்தி, கிறிஸ்தவ ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு அகதிகளின் பாதுகாப்பிற்காக நாடுகள் புதுப்பித்த அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டுமென திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அழைப்பு விடுத்தார்.

ஜூன் 21, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையின் இறுதியில் இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, 1951ஆம் ஆண்டின் அகதிகளின் நிலை குறித்த ஐக்கிய நாடுகள் சபை ஒப்பந்தத்தின் 75ஆம் ஆண்டு நிறைவை எடுத்துக்காட்டியதுடன், போர், வன்முறை மற்றும் துன்புறுத்தலால் தங்கள் சொந்த நாடுகளை விட்டு வெளியேற வேண்டியவர்களின் உரிமைகளை பாதுகாக்க இந்த ஒப்பந்தம் முக்கிய பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்டார்.

மேலும், “பாதுகாப்பும் பாதுகாப்பான வாழ்வும் தேடி வருபவர்களை யாரும் புறக்கணிக்க முடியாது” என்று  வலியுறுத்திய திருத்தந்தை, பிரேசிலின் சியாரா மாநிலத்தில் அண்மையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞர்களின் குடும்பங்களுக்கும் நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் செபங்களையும் தெரிவித்தார்.

இறுதியாக, கத்தோலிக்க மற்றும் பெந்தகொஸ்தே கிறிஸ்தவர்களுக்கிடையேயான அனைத்துலக உரையாடலில் பங்கேற்றவர்களை வாழ்த்திய திருத்தந்தை,  செபமும் நம்பிக்கையும் இடையிலான உறவைப் பற்றி இணைந்து சிந்திப்பது கிறிஸ்தவ ஒற்றுமையையும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் மனப்பாங்கையும் வளர்க்க உதவும் என்று  தெரிவித்து தனது உரையை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

22 ஜூன் 2026, 09:28