தேடுதல்

திருத்தந்தை பதினான்காம் லியோ திருத்தந்தை பதினான்காம் லியோ   (@Vatican Media)

திருத்தந்தையின் ஸ்பெயின் நாட்டிற்கான திருத்தூதுப் பயணத்தின் ஐந்தாம் நாள் நிகழ்வுகள்!

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஸ்பெயின் பயணத்தின் ஐந்தாம் நாளில் கைதிகள், துறவிகள் மற்றும் கத்தோலிக்கத் தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளைச் சந்தித்து, உலக அமைதிக்காக ஜெபமாலை செபிக்கிறார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஸ்பெயின் நாட்டிற்கான தனது திருத்தூதுப் பயணத்தின் ஐந்தாம் நாளை இன்று ஜூன்10ஆம் தேதி புதன்கிழமை தொடங்கியிருக்கிறார்.

இன்றைய நாளின் முதல் நிகழ்வாக, காலை மணி 10:50 க்கு திருத்தந்தை பார்சிலோனாவில் உள்ள 'பிரையன்ஸ் 1' (Brians 1) மத்திய சிறைச்சாலைக்குச் செல்கிறார். அங்கு சிறைக்கைதிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் வழங்குவதுடன் அங்குள்ள கைதிகள் மற்றும் சிறை ஊழியர்களுடன்  கலந்துரையாடுகிறார்.

அதனைத் தொடர்ந்து திருத்தந்தை மான்செராட் மலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற 'அன்னை மரியா ஆசிரமத்திற்கு' (Abbey of Our Lady of Montserrat) செல்கிறார். அங்கு நண்பகல் 12:00 மணிக்கு தூய ஜெபமாலை வழிபாட்டைத் திருத்தந்தை முன்னின்று நடத்துகிறார். கத்தோலிக்க மக்களால் பெரிதும் மதிக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க 'கறுப்பு அன்னை மரியா' (Black Madonna) திருவுருவத்தின் முன்பாக உலக அமைதிக்காக இந்தச் சிறப்பு இறைவேண்டல் நடைபெறுகிறது.

பின்னர். மதியம் 01.00  மணிக்கு மான்செராட் மடாலயத்தில் தங்கி ஆன்மீகப் பணிபுரியும் பெனடிக்டைன்  சபைத் துறவிகளுடன் திருத்தந்தை மதிய உணவு அருந்துகிறார். இந்தச் சந்திப்பின் போது துறவிகளின் ஆன்மீகப் பணிகள் குறித்து அவர் கேட்டறிகிறார்.

அதன்பிறகு மணி 4.30 க்கு பார்சிலோனா நகரிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 'சாந்தா அகஸ்தி' (Sant Agustí) ஆலயத்திற்கு வருகை தருகிறார். அங்கு மறைமாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு கத்தோலிக்கத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஏழை எளியோருக்காக உழைக்கும் சமூக நல அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசுகிறார். ஏழைகளின் நலன் மற்றும் தற்போதைய சமூகச் சவால்கள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படுகிறது.

புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் அந்தோனி கவுடியின் (Antoni Gaudí) 100-வது நினைவு தினமான இன்று, இரவு 7:30 க்கு திருக்குடும்பப் பேராலயத்தில் சிறப்புத் திருப்பலி நடைபெறுகிறது.

இறுதியாக, உலகமே ஆவலோடு எதிர்பார்த்த 'இயேசு கிறிஸ்து கோபுரம்' (Tower of Jesus Christ) திருத்தந்தையால் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டு, புனிதப்படுத்தப்படுகிறது. இந்நிகழ்வுடன்  இன்றைய நாளுக்கான தனது  திருத்தூதுப் பயணத்தை திருத்தந்தை நிறைவு செய்கிறார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

10 ஜூன் 2026, 11:56