தேடுதல்

இயேசுவின் இரக்கம் மனிதகுலத்திற்கு புதிய நம்பிக்கை!

போர், வன்முறை, ஒடுக்குமுறை மற்றும் நுகர்வுக் கலாச்சாரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இயேசு அன்புடன் நோக்குகிறார் என்றும், அவரது இரக்கம் மனிதர்களை மீட்டு புதிய வாழ்வை அளிக்கும் அன்பின் வெளிப்பாடாகும் என்றும் திருத்தந்தை கூறினார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

மனிதகுலத்தின் துயரங்களையும் வேதனைகளையும் கருணையுடன் நோக்கும் இயேசுவின் பார்வை உலகை மாற்றும் வல்லமை கொண்டது என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.

ஜூன் 14, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில் இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, மத்தேயு நற்செய்தியை மேற்கோள்காட்டி, இயேசுவின் கருணை நிறைந்த பார்வையை அந்நற்செய்தி வெளிப்படுத்துவதாகக் திருத்தந்தை குறிப்பிட்டார்.

போர், வன்முறை, ஒடுக்குமுறை மற்றும் நுகர்வுக் கலாச்சாரத்தால் ஏற்படும் வெறுமை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மனிதர்களை இயேசு காண்கிறார் என்றும், சிதைந்த குடும்பங்களையும் வழிதவறிய இளைஞர்களையும் அவர் அன்புடன் நோக்குகிறார் என்றும் திருத்தந்தை எடுத்துக்காட்டினார்.

மேலும் இயேசுவின் இரக்கம் என்பது வெறும் அனுதாப உணர்வு மட்டுமல்ல; மனிதர்களை மீட்டு அவர்களுக்கு புதிய வாழ்வை வழங்க வேண்டும் என்ற அவரது அன்பின் வெளிப்பாடாகும் என்று  சுட்டிக்காட்டிய திருத்தந்தை,  நல்ல மேய்ப்பரான கிறிஸ்து, துன்பத்தில் இருப்போருக்கு ஆறுதலையும், வறுமையில் வாடுவோருக்கு அன்பையும், மனவேதனையில் இருப்போருக்கு நம்பிக்கையையும், நம்பிக்கையில் தளர்ந்தோருக்கு இறைநம்பிக்கையையும் வழங்குவதற்காக தனது சீடர்களை அனுப்புகிறார் என்றும் எடுத்துரைத்தார்.

நற்செய்தியின் மையச் செய்தியான "விண்ணரசு நெருங்கிவந்துவிட்டது" என்பது இன்றும் உலகிற்கு நம்பிக்கையூட்டும் அழைப்பாகத் திகழ்கிறது என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, இயேசு கிறிஸ்துவில் வெளிப்பட்ட கடவுளின் அன்பு, எல்லா மக்களையும் நாடுகளையும் சென்றடைகிறது என்றும் குறிப்பிட்டார்.

இயேசுவின் அன்பான பார்வை புதிய மக்களாகிய திருஅவையை உருவாக்கியுள்ளது என்றும், "இலவசமாகப் பெற்றீர்கள்; இலவசமாகக் கொடுங்கள்" என்ற அழைப்பின் வழியாக திருஅவை தனது மறைப்பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்றும் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

இறுதியாக, நற்செய்தி அறிவிக்கும் பணி இறைவனின் அருள்கொடையிலிருந்து பிறக்கிறது என்றும், உலகிற்கு மன்னிப்பையும், ஏழைகளுக்கான சேவையையும், நீதிக்கான அர்ப்பணிப்பையும் வழங்கும் இந்தப் பணிக்கு மகிழ்ச்சியுடனும் துணிச்சலுடனும் பதிலளிக்க அன்னை கன்னி மரியாளின் பரிந்துரையை வேண்டி  தனது உரையை நிறைவு செய்தார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

15 ஜூன் 2026, 07:56