தேடுதல்

அன்பு, ஒற்றுமை மற்றும் ஆன்மீக புதுப்பித்தலுக்கான திருத்தந்தையின் அழைப்பு!

மூவொரு இறைவனின் மறைபொருள், மனிதகுலம் ஒருவரோடு ஒருவர் இணைந்து வாழவும், நல்லுறவை வளர்க்கவும், ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தவுமே படைக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

தந்தையையும் மகனையும் ஒன்றிணைக்கும் தூய ஆவியானவர் வழியாக, நம்பிக்கையாளர்கள் கடவுளோடும், ஒருவரோடும் ஒருவர் வாழும் உறவில் இணைக்கப்படுகிறார்கள் என்றும், இதன் மூலம், திருஅவையானது விண்ணகமும் மண்ணகமும் சந்திக்கும் இடமாகவும், அன்பு மற்றும் ஒற்றுமையின் மையமாகவும் திகழ்கிறது என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.

மே 31, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில் இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, பெந்தெகொஸ்தே திருநாளைத் தொடர்ந்து, திருஅவை மூவொரு கடவுள் பெருவிழாவைக் கொண்டாடும் இவ்வேளையில், இயேசு கிறிஸ்து வழியாக நமக்குக் கொடையாக வழங்கப்பட்டுள்ள இறைவனைப் பற்றிய ஆழமான புரிதலை தியானிக்க நம்பிக்கையாளர்கள் அழைக்கப்படுகிறார்கள் என்றும் எடுத்துக்காட்டினார்.

கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்; எனவே, அவரை நம்பும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டுத் தம் ஒரே மகனையே அளித்தார். கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பு அளிப்பதற்காக அல்ல, மாறாக அவர் வழியாக உலகம் மீட்புப் பெறுவதற்காகவே என்ற என்ற யோவான் நற்செய்திப் பகுதியை மேற்கோள்காட்டிய திருத்தந்தை, இயேசுவை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள விரும்பிய நிக்கதேமுவை இயேசு சந்திக்கிறார் என்றும், இயேசு அவருக்கு ஆன்மீக மறுபிறப்பைப்பற்றி கற்பித்து, கடவுளின் மீட்புத் திட்டத்தை வெளிப்படுத்துகிறார் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் மூவொரு இறைவனின் மறைபொருள், மனிதகுலம் ஒருவரோடு ஒருவர் இணைந்து வாழவும், நல்லுறவை வளர்க்கவும், ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தவுமே படைக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது என்றும், இதற்கு நேர்மாறாக, பிரிவினை, வெறுப்பு மற்றும் சமுதாயப் பிளவுகள் ஆகியவை துன்பத்திற்கும் அழிவிற்குமே வழிவகுக்கின்றன என்றும் திருத்தந்தை எடுத்துக்காட்டினார்.

இயேசுவுக்குத் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பாக, அவருடைய பேச்சைக் கேட்க வேண்டும் என்று மற்றவர்களிடம் வலியுறுத்தியதன் மூலம், நிக்கதேமு உண்மைக்கு மதிப்பளிப்பவர் என்பதை நிரூபித்தார் என்று குறிப்பிட்ட திருத்தந்தை, இந்த ஆன்மீக ஒன்றிப்பால் ஆட்கொள்ளப்பட்ட அவர், மனிதர்களிடையே ஏற்பட்ட மாற்றத்திற்கும் நல்புரிதலுக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தார் என்றும் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

இறுதியாக, தூய்மைமிகு மூவொரு கடவுள் பெருவிழாவானது அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கவும், அமைதியுடன் வாழவும், அன்னை மரியாவைப் போல கடவுளின் அன்பிற்கு தாராள மனதோடு பதிலளிக்கவும் அழைப்பு விடுக்கிறது என்றும், இதன் மூலமே அந்த அன்பு இவ்வுலகில் நற்கனிகளைத் தர முடியும் என்றும் கூறி தனது உரையை திருத்தந்தை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 ஜூன் 2026, 07:58