தேடுதல்

கிரான் கனாரியாவின் ஆர்கினெகுயின் துறைமுகத்தில் உள்ள இளம் புலம்பெயர்ந்தவர். கிரான் கனாரியாவின் ஆர்கினெகுயின் துறைமுகத்தில் உள்ள இளம் புலம்பெயர்ந்தவர். 

அவமானத்தின் கரையிலிருந்து புதிய விடியல்: திருத்தந்தையை வரவேற்கும் புலம்பெயர்ந்த இளைஞர்!

செனகல் நாட்டைச் சேர்ந்த உசைய்னு, தன் சகோதரனுடன் மரப்படகில் புலம்பெயர்ந்தபோது நேர்ந்த விபத்தில், அவரது கண் முன்னாலேயே சகோதரர் உட்பட பலர் கடலில் மூழ்கி மடிந்தனர். அர்கினேகின் துறைமுகத்தில் மீட்கப்பட்ட உசைய்னுவை ஓர் உள்ளூர் குடும்பம் அரவணைத்தது. எழுதப்படிக்கத் தெரியாமல் வந்த அவர், இன்று ஸ்பானிஷ் மொழியைக் கற்று ஒரு ஹோட்டல் தலைமைச் சமையல் கலைஞராக உயர்ந்துள்ளார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

கடந்த 2020-ஆம் ஆண்டு செனகல் நாட்டில் ஏற்பட்ட வாழ்வாதார நெருக்கடி காரணமாக, உசைய்னு ஃபால் (Ousseynou Fall) தன் சகோதரனுடன் ஒரு சிறிய மரப்படகில் ஆபத்தான அத்லாந்திக் கடல் வழியே புலம்பெயர்ந்தார். அந்த கொடூரமான பயணத்தில் அவரது சகோதரர் உட்பட பலர் கடலிலேயே மடிந்தனர். தாகத்தோடும் மரண பயத்தோடும் தத்தளித்த உசைய்னு, இறுதி நேரத்தில் மீட்கப்பட்டு கேனரி தீவுகளின் அர்கினேகின் (Arguineguín) துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டார்.

அக்காலத்தில் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் அடுக்கடுக்காக, அவல நிலையில் தங்க வைக்கப்பட்டிருந்ததால் அத்துறைமுகம் "அவமானத்தின் கரை" என்று அழைக்கப்பட்டது. ஆனால், உள்ளூர் சமூகத்தின் மனிதநேயத்தாலும், செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆதரவாலும் புதிய வாழ்வு பெற்ற உசைய்னு, ஸ்பானிஷ் மொழியைக் கற்று இன்று ஒரு ஹோட்டல் தலைமைச் சமையல் கலைஞராக (Chef) உயர்ந்துள்ளார்.

தனது இந்த உருக்கமான கதையை விவரித்து, தங்கள் வாழ்விற்கு விடியல் தந்த இடத்திற்கு வருமாறு உசைய்னு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். இக்கதை திருத்தந்தை பிரான்சிஸ்  அவர்களின் உள்ளத்தை நெகிழ வைத்தது. அங்கு செல்ல அவர் திட்டமிட்டிருந்த நிலையில், அவரது மறைவு காரணமாக அப்பயணம் தடைபட்டது. தற்போது, புதிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தனது முன்னோடியின் ஆசையை நிறைவேற்றும் விதமாக, வரும் ஜூன் 11-12 தேதிகளில் கேனரி தீவுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு குளிரிலும் தாகத்திலும் தவித்து, அதே துறைமுகக் கரையின் ஓரத்தில் படுத்திருந்த உசைய்னு, இழந்த தன் மனித மாண்பையும் எதிர்காலத்தையும் மீட்டெடுத்த ஒரு சுதந்திரக் குடிமகனாகத் திருத்தந்தையை வரவேற்க ஆவலோடு காத்திருக்கிறார்.

"நான் திருத்தந்தையுடன் பேச முடிந்தால், முதலில் கேட்கும் விஷயம் ஒன்றுதான்: பயணத்தின் வழியிலேயே இறந்து போகும் புலம்பெயர்ந்த மக்களுக்காக நாம் இன்னும் அதிகமாக உதவ வேண்டும் என்பதுதான். இங்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டு, ஆனால் கரையை அடைய முடியாமல் போன மனிதர்கள் அவர்கள். என் சொந்த சகோதரனும் இந்தத் கொடிய பயணத்தின் போதுதான் கடலில் இறந்து போனான். அவனோடு இன்னும் எத்தனையோ பேரும் இறந்து போனார்கள் என்று உசைய்னு தெரிவித்திருந்தார்.

ஜூன் 11, வியாழனன்று, அர்கினேகின் துறைமுகத்தில் திருத்தந்தையை எதிர்கொள்ளக் காத்திருக்கும் உசைய்னு, அன்று தன்னை ஒரு அகதியாக அல்ல; மாறாக, பிறரின் ஒருமைப்பாட்டாலும் இரக்கத்தாலும் தன் மனித மாண்பை மீட்டெடுத்த ஒரு சுதந்திரக் குடிமகனாக உணர்வதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

05 ஜூன் 2026, 12:16