புனிதத்துவமே அருள்பணியாளர்களின் உண்மையான சாட்சி
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
இயேசுவின் திரு இருதயப் பெருவிழாவன்று, அனைத்து அருள்பணியாளர்களும் தங்கள் புனித அழைப்பைப் பற்றி ஆழமாகச் சிந்திக்க அழைப்பு விடுத்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், புனிதத்துவம் என்பது விருப்பத்திற்குரிய தேர்வு அல்ல, அது அனைத்து இறைமக்களுக்கும், குறிப்பாக அருள்பணியாளர்களுக்கு மிகவும் அவசியமானது என்பதை வலியுறுத்தியுள்ளார்.
ஜூன் 12, வெள்ளியன்று கொண்டாடப்படும் அருள்பணியாளர்களின் புனிதப்படுத்துதலுக்கான உலக செப நாளை முன்னிட்டு, அருள்பணியாளர்களுக்கு விடுக்கப்பட்ட செய்தியில் இவ்வாறு திருத்தந்தை கூறியுள்ளார்.
"நான் தூய்மையாக இருப்பது போல நீங்களும் தூய்மையாய் இருங்கள்" என்ற இறைவனின் கட்டளையை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, "கிறிஸ்துவுடனான ஒன்றிப்பின் வழியாக இறைவனின் புனிதத்துவத்தில் பங்கேற்க அருள்பணியாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்" என்றும் "இருப்பினும் அவர்கள் இந்த அருள்கொடையை மனித பலவீனங்களுக்கு மத்தியிலேயே சுமக்கிறார்கள்" என்றும் விளக்கியுள்ளார்.
மேலும் "குத்தித் திறக்கப்பட்ட இயேசுவின் திரு இருதயத்திற்கு அருகில் இருப்பதன் மூலம் அருள்பணியாளர்கள் அமைதியையும் வலிமையையும் பெற்று இந்தச் சவாலான நிலைக்குத் தீர்வு காண்கிறார்கள்" என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
"புனிதத்துவம் என்பது வெறும் விடாமுயற்சி அல்லது முழுமைத்தன்மையால் மட்டும் அடையக்கூடியது அல்ல, மாறாக கிறிஸ்துவுடனான அன்றாட உறவின் மூலம், குறிப்பாக நற்கருணை, செபம், திருவிவிலியம் மற்றும் தாழ்ச்சிமிக்க பணி ஆகியவற்றின் மூலம் கிடைப்பதாகும்" என்று திருத்தந்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
"மகிழ்ச்சியான தருணங்கள், போராட்டங்கள், பணிகள் மற்றும் துன்பங்கள் ஆகிய அருள்பணித்துவ வாழ்வின் ஒவ்வொரு சூழலையும் இறைவனைச் சந்திக்கும் இடமாக மாற்ற முடியும்" என்றும் "ஒன்றிணைந்து செயல்படக்கூடிய மற்றும் தாழ்மையான இதயம் கொண்ட ஒரு அருள்பணியாளர், பிளவுபட்ட உலகில் அமைதி, இரக்கம் மற்றும் நல்லிணக்கத்தின் சான்றாக மாறுகிறார்" என்றும் திருத்தந்தை எடுத்துக்காட்டியுள்ளார்.
"அருள்பணித்துவ புனிதத்துவம் என்பது தனிமை அல்லது அதிகப்படியான செயல்பாடுகளில் அல்ல, மாறாக அருகாமை, கருணை, செவிமடுத்தல் மற்றும் சகோதரத்துவத்தின் மூலம் வெளிப்படுகிறது" என்று கூறிய திருத்தந்தை, தியாகம், பொறுமை மற்றும் நம்பிக்கையின் ஊற்றாக விளங்கும் இயேசுவின் திருஇருதயத்தில், கடவுளின் அளவற்ற அன்பு வெளிப்படுகிறது” என்றும் கூறியுள்ளார்.
கிறிஸ்துவை தங்கள் உள்ளத்தில் வாழ அனுமதித்து, உலகில் அவரது அன்பின் வாழும் அடையாளங்களாகத் திகழ அருள்பணியாளர்களுக்கு அழைப்பு விடுத்து திருத்தந்தை தனது உரையை நிறைவு செய்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
