நற்கருணை ஆன்மீகமே கிறிஸ்தவ வாழ்வின் ஊற்றும் உச்சமும்!

லாஸ் பால்மாஸ் நகரிலுள்ள புனித அன்னாள் பேராலயத்தில் ஆயர்கள், அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், துறவியர்கள், குருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் மறைப்பணியாளர்களைச் சந்தித்த திருத்தந்தை அவர்கள், கிறிஸ்துவின் சிலுவையை ஏற்றுக்கொண்டு நம்பிக்கையுடன் வாழவும், நற்கருணையை மையமாகக் கொண்ட ஆன்மீக வாழ்வை வளர்த்துக்கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஜூன் 11, வியாழக்கிழமையன்று, ஸ்பெயின் நாட்டிற்கான தனது திருத்தூதுப் பயணத்தின் ஒரு பகுதியாக, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள்  கனாரியா தீவுகளின் லாஸ் பால்மாஸ் நகரிலுள்ள புனித அன்னாள் பேராலயத்தில் ஆயர்கள், அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், இருபால் துறவியர், குருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் மேய்ப்புப்பணிப் பணியாளர்களைச் சந்தித்து உரையாற்றினார். அச்சந்திப்பின்போது திருத்தந்தை ஆற்றிய உரை.

அன்பான சகோதர சகோதரிகளே,

இன்று உங்களுடன் இருப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். உங்களது அன்பான வரவேற்பிற்கும், உங்கள் நம்பிக்கையின் சாட்சியத்திற்கும், திருஅவையின் வாழ்விற்கான உங்கள் அர்ப்பணிப்பிற்கும் நான் நன்றி கூறுகிறேன். உங்கள் சமூகங்களில், நம் காலத்து மக்களின் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கைகளையும், அதே போல் போராட்டங்களையும் துன்பங்களையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு துடிப்பான, வாழும் திருஅவையை நாம் காண்கிறோம்.

நம்பிக்கையில் ஒரு சகோதரனாகவும், பணியாற்றுவதற்காக அழைக்கப்பட்ட ஒரு ஆயனாகவும் நான் உங்களிடையே வந்திருக்கிறேன். திருஅவையை நமது மூலைக்கல்லாகிய கிறிஸ்துவின் மேல் ஒன்றிணைந்து கட்டியெழுப்ப நாம் அழைக்கப்பட்டுள்ளோம். கிறிஸ்துவின் முழு உடலின் நலனுக்காக நம் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான கொடைகளும் பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. நமது வேறுபாடுகளை மதித்து, பொதுவான நலனை நாடி, ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம், நாம் அன்பின் நாகரிகத்தை உருவாக்குபவர்களாக மாறுகிறோம்.

இன்று, நமது கிறிஸ்தவப் பயணத்திற்கு அவசியமான இரண்டு முக்கிய மனப்பான்மைகளைக் குறிப்பிட விரும்புகிறேன்.

முதலாவது, கிறிஸ்துவின் சிலுவையை ஏற்றுக்கொள்வது. கடலால் சூழப்பட்ட தீவுகளில் வாழும் உங்களுக்கு, பயணங்கள், சவால்கள் மற்றும் எல்லைகளின் அர்த்தம் நன்றாகவே தெரியும். கடல் என்பது நம்பிக்கையையும் அதே வேளையில் நிச்சயமற்ற தன்மையையும் குறிக்கக்கூடியது. இவ்வுலகமாகிய கடல், நமக்கும் நமது விண்ணகத் தாயகத்திற்கும் இடையே எல்லையாக நிற்கிறது; அதை நாம் கடந்து கரை சேர, கிறிஸ்துவின் சிலுவையே வழி என்று புனித அகுஸ்தினார் நமக்கு நினைவூட்டுகிறார். புனிதர்கள் இந்த உண்மையை உணர்ந்திருந்தார்கள். வாழ்வின் புயல்களுக்கு மத்தியில், அவர்கள் ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்து, சிலுவையை ஏற்றுக்கொண்டனர்; மேலும் அவரிடத்தில் அமைதியையும் பலத்தையும் கண்டடைந்தனர். அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றி, நமது சிலுவைகளை நம்பிக்கையோடு சுமக்கவும், துன்பம், தனிமை, வறுமை அல்லது இன்னல்களால் பாரம் சுமப்போருக்கு உதவவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம். தேவையிலுள்ளோருக்கு நீங்கள் செய்யும் தாராளமான சேவைக்காக நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.

இரண்டாவது, ஆழமான நற்கருணை ஆன்மீகத்தை வளர்த்தெடுப்பது. நற்கருணையே கிறிஸ்தவ வாழ்வின் ஊற்றும் உச்சமுமாகும். அங்கேதான் நாம் கிறிஸ்துவைச் சந்திக்கிறோம், அவருடைய அருளைப் பெறுகிறோம், மேலும் ஒரே விசுவாசக் குடும்பமாக ஒன்றிணைக்கப்படுகிறோம். நற்கருணை வழிபாடு மற்றும் ஆராதனை மூலம், நாம் கடவுளோடும் ஒருவரோடு ஒருவரும் இணைந்து வாழக் கற்றுக்கொள்கிறோம். இந்த இணைப்பானது இயற்கையாகவே நம்மைப் பிறரன்பிற்கும் தாராள மனப்பான்மைக்கும் வழிநடத்துகிறது.

கிறிஸ்துவுடனான நமது இந்த இணைப்பு, பிறர் மீது குறிப்பாக ஏழைகள், நோயாளிகள், தனிமையில் இருப்பவர்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் நலிவடைந்தோர் அனைவர் மீதும் நாம் காட்டும் அக்கறையில் பிரதிபலிக்க வேண்டும். ஆண்டவரிடமிருந்து நாம் பெறும் அன்பு விருந்தோம்பல், செவிமடுத்தல், இரக்கம் மற்றும் சேவை ஆகியவற்றின் மூலம் வெளிப்பட வேண்டும்.

கனாரியா தீவுகளின் (Canary Islands) அன்பான திருஅவையே, கிறிஸ்துவில் ஆழமாக வேரூன்றி இருங்கள்; உங்கள் பயணத்தைத் துணிவோடும் நம்பிக்கையோடும் தொடருங்கள். தூய ஆவியானவர் உங்களை நம்பிக்கையிலும், பிறரன்பிலும் பலப்படுத்துவாராக. கடல் விண்மீனான தூய கன்னி மரியா உங்களை எப்போதும் வழிநடத்திப் பாதுகாத்து, தன் மகனாகிய இயேசு கிறிஸ்துவிடம் உங்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வாராக.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

11 ஜூன் 2026, 15:00