துன்புறுவோரில் கிறிஸ்துவைக் காண அழைப்பு விடுக்கும் திருத்தந்தை!

கனாரியா தீவுகளின் அர்குயினெகுயின் துறைமுகத்தில் புலம்பெயர்ந்தோருக்காகப் பணியாற்றும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மக்கள் நல அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், புலம்பெயர்ந்தோர் வெறும் புள்ளிவிவரங்களோ எண்களோ அல்ல; மாறாக, பெயர்கள், குடும்பங்கள், கதைகள் மற்றும் கனவுகளைக் கொண்ட மனிதர்கள் என வலியுறுத்தினார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஜூன் 11, வியாழக்கிழமை, ஸ்பெயின் நாட்டிற்கான தனது திருத்தூதுப் பயணத்தின் ஒரு பகுதியாக, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், கனாரியா தீவுகளில் உள்ள அர்குயினெகுயின் (Arguineguín) துறைமுகத்திற்கு வருகை தந்து, புலம்பெயர்ந்தோருக்காகப் பணியாற்றும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மக்கள் நல அமைப்புகளை நேரில் சந்தித்து  உரையாடினார். அச்சந்திப்பின்போது திருத்தந்தை அவர்கள் ஆற்றிய உரை: 

அன்பான சகோதர சகோதரிகளே,

இன்று, நாம் கடலோரத்தில் கூடியிருக்கின்ற வேளையில், நற்செய்தி நம்முன் ஓர் ஆழமான கேள்வியை முன்வைக்கிறது: அச்சம், பசி, வன்முறை மற்றும் துன்பங்களால் பாதிக்கப்பட்டு நம் கரைகளை வந்தடையும் மக்களிடம் நாம் கிறிஸ்துவைக் காண்கிறோமா? இந்தத் துறைமுகம் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரின் துயரங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் சாட்சியாக மாறியுள்ளது. தங்கள் வீடுகளையும் குடும்பங்களையும் விட்டு வெளியேறக் கட்டாயப்படுத்தப்பட்ட பலர், பாதுகாப்பையும் சிறந்த எதிர்காலத்தையும் தேடி ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர். சிலர் மீட்கப்படுகிறார்கள், மற்றவர்கள் கடலிலேயே தங்கள் உயிர்களை இழக்கின்றனர். இதனால்தான், வறுமை, வன்முறை, இடப்பெயர்வு அல்லது சுரண்டல் ஆகியவற்றால் மனித மாண்பு எங்கு காயப்பட்டாலும் திருஅவையால் அலட்சியமாக இருக்க முடியாது.

இன்றும் கூட, அதிகார சக்திகள் பலவீனமானவர்களைத் தொடர்ந்து வேட்டையாடுகின்றன: மனித வணிகர்கள், குற்றவியல் வலைப்பின்னல்கள் மற்றும் அவநம்பிக்கையிலிருந்து இலாபம் ஈட்டும் சுரண்டல் அமைப்புகள் இதில் அடங்கும். ஆயினும், கடவுள் தீமையை விட வலியவர் என்பதை நமது நம்பிக்கை நமக்குக் கற்பிக்கிறது. புயலை அடக்கி, கடலின் நடுவே பாதையை உருவாக்கிய ஆண்டவர், உயிரைப் பாதுகாக்கவும் மனித மாண்பை நிலைநிறுத்தவும் நம்மைத் தொடர்ந்து அழைக்கிறார். எனவே, நமது சகோதர சகோதரிகள் பலர் துன்பத்தில் கைவிடப்படும்போது திருஅவையால் அமைதியாக இருக்க முடியாது.

புலம்பெயர்ந்தோர் வெறும் புள்ளிவிவரங்களோ, கோப்புகளோ அல்லது எண்களோ அல்ல. அவர்கள் பெயர்கள், குடும்பங்கள், கதைகள் மற்றும் கனவுகளைக் கொண்ட மனிதர்கள். ஒவ்வொரு மனித உயிரும் கடவுளின் கொடையாகும், அது படைத்தவரின் சாயலைப் பிரதிபலிக்கிறது. கடத்தல், சுரண்டல் அல்லது துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நான் சொல்ல விரும்புவது: உங்கள் மாண்பை ஒருபோதும் யாராலும் பறிக்க முடியாது. நீங்கள் கடவுளின் அன்புக்குரிய மகன்கள் மற்றும் மகள்கள்.

கட்டாய இடம்பெயர்வு என்ற துயரம் நாடுகளின் மனசாட்சியைத் தட்டியெழுப்ப வேண்டும். சொந்த நாடுகள் அமைதி, நீதி மற்றும் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும். புலம்பெயர்வோர் கடந்து செல்லும் நாடுகள், பாதிக்கப்படக்கூடியவர்களை குற்றவியல் வலைப்பின்னல்களிலிருந்து பாதுகாக்க வேண்டும். அனைத்துலக சமூகம் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும், மேலும் மனித உரிமைகள் மதிக்கப்படுவதையும் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

திருஅவையும் தாராள மனதுடன் செயல்பட வேண்டும். புலம்பெயர்ந்தோரை வரவேற்பது என்பது சில தன்னார்வலர்களின் பணியாக மட்டுமே இருக்க முடியாது; இது ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமூகமும் பகிர்ந்துகொள்ள வேண்டிய பொறுப்பாகும். நற்கருணையில் கிறிஸ்துவை ஆராதித்துவிட்டு, துன்பப்படுபவர்களில் அவரை நாம் புறக்கணிக்க முடியாது.மனித மாண்பு எந்த நாட்டின் எல்லைகளாலும் கட்டுப்படுத்தப்படுவதில்லை. எந்த எல்லையிலும் அது தன் மதிப்பை இழப்பதில்லை. தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது அடைக்கலம் தேடும் உரிமை மக்களுக்கு இருந்தாலும், அச்சம், பசி, போர் அல்லது துன்புறுத்தல் இல்லாமல் தங்கள் சொந்த நாட்டிலேயே தங்கியிருப்பதற்கும் அவர்களுக்கு உரிமை உண்டு. ஏழைகள், அந்நியர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் கிறிஸ்துவைக் காணும் அருளைக் கடவுள் நமக்கு வழங்குவாராக. மற்றவர்களின் துன்பங்களுக்கு நாம் பழகிப்போகாமல், பரிவு, ஒருமைப்பாடு மற்றும் துணிச்சலான அன்புடன் செயல்படுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

11 ஜூன் 2026, 13:30