மானுட மாண்பும் உலகளாவிய அமைதியும்!

ஒரு தேசத்தின் உண்மையான மகத்துவம் அதன் வலுக்குறைந்தவர்களைப் பாதுகாப்பதில்தான் உள்ளது. கருவில் இருக்கும் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் மற்றும் ஏழைகளின் வாழ்வு அனைத்து நிலைகளிலும் பாதுகாக்கப்பட வேண்டும்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

ஜூன் 08, திங்களன்று, திருத்தந்தை ஸ்பெயின் நாட்டிற்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின் ஒரு நிகழ்வாக மேட்ரிட்டில் உள்ள நாடாளுமன்ற அவையில் ஸ்பெயின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார். அச்சந்திப்பின்போது திருத்தந்தை ஆற்றிய உரை:

மதிப்பிற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களே,

தங்களின் அன்பான வரவேற்பிற்கும், இந்த புகழ்பெற்ற அவையில் உரையாற்றும் வாய்ப்பளித்தமைக்கும் நான் நன்றி கூறுகிறேன். உரோமின் ஆயராக, நட்பு, ஒத்துழைப்பு மற்றும் மனிதகுலத்திற்குப் பணிபுரியும் ஒரு செய்தியுடன் உங்கள் முன் நிற்கிறேன்.

மனித மாண்பும் சட்டத்தின் அடித்தளமும்

சுதந்திரம், நீதி மற்றும் மனித மாண்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த ஒரு சமூகத்தை உருவாக்கும் பொருட்டு நம்பிக்கை, பகுத்தறிவு, சட்டம் மற்றும் கலாச்சாரம் ஆகியவை ஒன்றிணைந்து செயல்பட்ட ஒரு வளமான பாரம்பரியத்தை ஸ்பெயின் கொண்டுள்ளது. சலமன்காவின் ஞானம் முதல் சிறந்த சிந்தனையாளர்களின் பங்களிப்புகள் வரை, ஒவ்வொரு மனிதரும் மதிக்கப்பட வேண்டிய மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய உள்ளார்ந்த மாண்பைக் கொண்டுள்ளனர் என்பதை உலகுக்கு உணர்த்த ஸ்பெயின் உதவியுள்ளது. இன்று, நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் அரசு ஊழியர்களாகவும், நீங்கள் ஒரு முக்கியமான கேள்வியை எதிர்கொள்கிறீர்கள்: "நீங்கள் இயற்றும் சட்டங்கள் எத்தகைய மனிதர் குறித்த பார்வையை ஊக்குவிக்கின்றன, அந்தச் சட்டங்கள் எத்தகைய சமூகத்தை உருவாக்குகின்றன?" என்பதே அந்தக் கேள்வி. உண்மையிலேயே நீதியான ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு மனிதனின் மீற முடியாத மாண்பை அங்கீகரிப்பதன் மூலம்தான் நிலைத்திருக்கிறது. இந்த மாண்பு, அரசு அல்லது மாற்றத்திற்கு உட்பட்ட பொதுக்கருத்திலிருந்து வருவதில்லை; மாறாக இது அவர்கள் ஒரு மனிதராக இருப்பதாலேயே ஒவ்வொருவருக்கும் உரிமையாகிறது.

மனித மாண்பும் பலவீனமானவர்களின் பாதுகாப்பும்

இந்தக் காரணத்தினால், மனித வாழ்வை அதன் ஒவ்வொரு நிலையிலும், குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய கருவில் இருக்கும் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள், ஏழைகள் மற்றும் மனதிற்குள்ளேயே வேதனையை அனுபவிப்பவர்கள் என அனைவரையும் பாதுகாக்க வேண்டும் என்று நான் உங்களை வலியுறுத்துகிறேன். ஒரு தேசத்தின் மகத்துவம் என்பது அந்நாட்டிலுள்ள வலுக்குறைந்தவர்களைப் பாதுகாப்பதிலும் கவனித்துக்கொள்வதிலும் தான் அளவிடப்படுகிறது. பொதுவாழ்வின் வழிகாட்டி பொதுநலனே. சமுதாயத்தின் அடித்தளமான குடும்பங்களே மனிதநேயத்தின் முதல் பள்ளி; அங்குதான் அன்பு, பொறுப்பு, மன்னிப்பு மற்றும் ஒற்றுமையை நாம் கற்றுக்கொள்கிறோம். அதேபோல், உண்மையை நாடி சமூகத்திற்குச் சேவை செய்யும் வருங்காலச் சந்ததியை உருவாக்குவதில் கல்வி முதன்மைப் பங்கு வகிக்கிறது.

உலகளாவிய சவால்களும் நெறிமுறை சார்ந்த வளர்ச்சியும்

நமது உலகம் கூட குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்கிறது. புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகளின் மாண்பை அங்கீகரித்து, நீதி, கருணை மற்றும் அனைத்துலக ஒத்துழைப்புடன் பதிலளிக்க புலம்பெயர்வு நம்மை அழைக்கிறது. அதேபோல், செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் விரைவான வளர்ச்சிக்கு நெறிமுறை சார்ந்த விவேகம் தேவை, ஏனெனில் வளர்ச்சித் திட்டங்கள் எப்போதும் மனிதகுலத்திற்குச் சேவை செய்ய வேண்டுமே தவிர ஒருபோதும் மனித மாண்பைக் குறைக்கக்கூடாது. பிரிவினை, மோதல் மற்றும் நிச்சயமற்ற தன்மை நிறைந்த இக்காலத்தில், அமைதிக்கான வேண்டுகோளை நான் புதுப்பிக்க விரும்புகிறேன். உண்மையான பாதுகாப்பு என்பது பயத்தின் மீதோ அல்லது ஆயுதங்களைக் குவிப்பதன் மீதோ கட்டப்படவில்லை, மாறாக நீதி, உரையாடல், ஒருவருக்கொருவர் காட்டும் மரியாதை மற்றும் அனைத்துலக ஒத்துழைப்பின் மீதுதான் கட்டப்படுகிறது. அமைதி என்பது நமது இதயங்களிலும், நமது வார்த்தைகளிலும், ஒருவருக்கொருவர் செவிசாய்ப்பதில் நான் கொண்டுள்ள விருப்பத்திலும் தொடங்குகிறது. ஸ்பெயின் நாடு சந்திப்புகள், கலாச்சாரம், ஒற்றுமை மற்றும் நம்பிக்கையின் தேசமாகத் தொடர்ந்து திகழட்டும். உங்கள் பொதுச்சேவை எப்போதும் உறுதியான நம்பிக்கைகளையும், மரியாதைக்குரிய உரையாடலையும், பொதுநலத்திற்கான நேர்மையான அர்ப்பணிப்பையும் இணைக்கட்டும்.

"ஸ்பெயின் நாட்டு மக்கள் அனைவரும் நீதி, அமைதி மற்றும் வளமான வாழ்வைப் பெற்றிட இறைவனின் பேரருள் என்றும் துணை நிற்கட்டும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

08 ஜூன் 2026, 12:00