"ஒன்றிணைந்து நடப்பதும், ஒருவருக்கொருவர் துணையாக இருப்பதும் கிறிஸ்தவ அழைப்பு"
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
ஜூன் 10, புதன்கிழமை, ஸ்பெயின் நாட்டிற்கான தனது திருத்தூதுப் பயணத்தின் ஒரு பகுதியாக, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் பார்சிலோனாவில் உள்ள புனித அகுஸ்தின் ஆலயத்தில் மறைமாவட்ட தொண்டு நிறுவனங்கள் மற்றும் மக்கள் நல அமைப்புகளுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஆற்றிய உரை.
அன்பு சகோதர சகோதரிகளே,
என்னை அன்புடன் வரவேற்ற கர்தினால் பேராயருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, தங்களின் சேவை மற்றும் பிறரன்புப்பணி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் எனது நன்றிகள். குறிப்பாக, அதிகத் தேவையில் உள்ளவர்களுக்கு உதவத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட தன்னார்வலர்கள், பணியாளர்கள் மற்றும் நம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியுணர்வை வெளிப்படுத்த நான் கடமைப்பட்டுள்ளேன்.
இன்று, சில எளிய ஆனால் முக்கியமான உண்மைகளைப் பற்றி சிந்திக்க விரும்புகிறேன். முதலாவதாக, வாழ்க்கை என்பது ஒன்றாக இணைந்து வாழ்வதற்காகவே படைக்கப்பட்டது. கால்பந்து போன்ற விளையாட்டுகள் இதை நமக்கு நினைவூட்டுகின்றன. எந்த வீரரும் தனித்து வெற்றி பெறுவதில்லை. விளையாட்டு நமக்கு குழு உணர்வு, தாராள மனப்பான்மை மற்றும் நம்பிக்கையை கற்றுக்கொடுக்கிறது. அதேபோல், வாழ்க்கையும் நமது சொந்த வெற்றியைத் தேடுவதைப் பற்றியது மட்டும் அல்ல, மாறாக ஒருவருக்கொருவர் துணையாக இணைந்து நடப்பதையும், உதவி செய்வதையும் பற்றியது.
தங்களின் வாழ்க்கையில் கடவுளின் திட்டத்தை எவ்வாறு கண்டறிவது என்று பல இளைஞர்கள் கேட்கிறார்கள். நாம் என்ன தொழிலைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்பது முக்கியமல்ல, இயேசுவின் நண்பர்களாக இருக்க விரும்புகிறோமா என்பதே மிக முக்கியமான கேள்வி. கிறிஸ்துவுடனான நட்பு நம் இதயங்களை மகிழ்ச்சியால் நிரப்புகிறது, நமக்கு சுதந்திரத்தைத் தருகிறது, மேலும் நம் ஒவ்வொருவருக்கும் கடவுள் தயார் செய்துள்ள பாதையைக் கண்டறிய உதவுகிறது. ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு மனிதரும் கடவுளின் கனவாக இருக்கிறார்கள், அவருடைய அன்பில் வாழ அழைக்கப்படுகிறார்கள்.
துன்பம் மற்றும் தீமை குறித்த கடினமான கேள்விகளையும் நாம் எதிர்கொள்கிறோம். இயேசுவை நாம் உற்றுநோக்கும் போது, கடவுள் நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை என்பதை உணர்கிறோம். கிறிஸ்து துன்பத்தையும் சிலுவையையும் அனுபவித்தார், ஆனால் அவரது உயிர்ப்பு மூலம் பாவத்தையும் மரணத்தையும் வென்றுள்ளார். இது நமக்கு நம்பிக்கையை அளிக்கிறது. நம்முடைய இருள் சூழ்ந்த தருணங்களிலும், ஆண்டவர் நம்முடன் நடந்து, நம்மை பலப்படுத்தி, முடிவில்லா வாழ்விற்கான வாக்குறுதியை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறார்.
தாத்தா பாட்டிகள் மற்றும் முதியவர்களைப் பற்றியும் நான் பேச விரும்புகிறேன். அவர்கள் நம் குடும்பங்களுக்கும் சமூகத்திற்கும் கிடைத்த ஒரு புதையல். அவர்களின் ஞானம், நம்பிக்கை மற்றும் அன்பின் மூலம் இளைய தலைமுறை மேன்மையடைய உதவுகிறார்கள். அத்தகைய முதியவர்கள் தாங்கள் கைவிடப்பட்டதாகவோ அல்லது மறக்கப்பட்டதாகவோ உணர நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. நாம் தனிமையை அனுபவிக்க விரும்பவில்லை என்றால், மற்றவர்கள் தனிமையில் இல்லாதிருப்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும்.
கிறிஸ்தவ வாழ்க்கையின் மற்றொரு முக்கியமான பகுதியாக மன்னிப்பு விளங்குகிறது. எப்பொழுதும் மன்னிக்க வேண்டும் என்று இயேசு நமக்குக் கற்பிக்கிறார். மன்னிப்பு என்பது தவறைப் புறக்கணிப்பதோ அல்லது வலி இல்லை என்று நடிப்பதோ அல்ல. மாறாக, வெறுப்பு நம் இதயங்களில் வேரூன்றாமல் பார்த்துக் கொள்வதே மன்னிப்பு ஆகும். மன்னிப்பதன் மூலம், தன்னை சிலுவையில் அறைந்தவர்களைக் கூட மன்னித்த கிறிஸ்துவை நாம் பின்பற்றுபவர்களாகிறோம்.
அன்பு நண்பர்களே, கிறிஸ்தவராக இருப்பது என்பது எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளின் அருளால் கிடைக்கும் ஒரு கொடையாகும். கிறிஸ்துவில் வேரூன்றி, தூய ஆவியாரின் வழிநடத்துதலோடு கடவுளின் அன்பை உலகிற்கு எடுத்துச் செல்ல நாம் அழைக்கப்படுகிறோம். ஒவ்வொரு மனிதனும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டிருப்பதால், நாம் ஒவ்வொருவரும் நம்மிடமிருந்து பறிக்க முடியாத மாண்பை பெற்றுள்ளோம். இதனாலேயே, நாம் ஒவ்வொருவரையும் சகோதர சகோதரியாக ஏற்று வரவேற்க வேண்டும். துன்பம், வறுமை மற்றும் புறக்கணிப்பைக் களைய இணைந்து உழைக்க வேண்டும்.
உங்கள் பிறரன்புப்பணிகளையும் சேவைகளையும் தொடர நான் உங்களை ஊக்குவிக்கிறேன். உங்கள் செயல்களின் மூலம் நற்செய்தியின் அழகை வெளிப்படுத்தி, நம்பிக்கையின் சான்றுகளாக இருங்கள். உங்களைச் சந்திப்பவர்கள் பொருள்சார்ந்த உதவியை மட்டுமல்லாமல், கடவுளின் அன்பு, நட்பு மற்றும் இரக்கத்தையும் அனுபவிக்கட்டும்.
உங்கள் அனைவரையும், உங்கள் பணிகளையும் நல் ஆலோசனை வழங்கும் நம் அன்னை மரியாவின் பராமரிப்பில் ஒப்படைக்கிறேன். அவர் உங்களை எப்போதும் வழிநடத்தட்டும், உங்கள் முயற்சிகளை இறைவன் மிகுதியான பலன்களுடன் ஆசீர்வதிப்பாராக.
நன்றி, இறைவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
