கூட்டொருங்கியக்கப் பாதையும் நற்செய்திப் பணியும்!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
ஜூன் 08, திங்களன்று, திருத்தந்தை ஸ்பெயின் நாட்டிற்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின் ஒரு நிகழ்வாக மேட்ரிட் நகரில் அமைந்துள்ள ஆயர் பேரவையின் தலைமையகத்தில் ஸ்பெயின் நாட்டு ஆயர்களை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் சந்தித்தார். அச்சந்திப்பின்போது திருத்தந்தை ஆற்றிய உரை:
அன்புமிக்க ஆயர்களே,
எனது ஸ்பெயின் நாட்டு திருத்தூதுப் பயணத்தின் போது உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். உங்களின் பற்றுறுதிமிக்க பணிக்காகவும், இறைமக்கள் வழியாகப் பேசும் கடவுளின் குரலை ஆழமாகக் கேட்க நம்மை அழைக்கும் கூட்டொருங்கியக்கப் பாதையில் நீங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பிற்காகவும் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.
நம்பிக்கையின் ஊற்றும் நற்கருணை எனும் வாழ்வாதாரமும்
இறைவனை இலக்காகக் கொண்ட ஒரு பயணத்தின் உருவகத்தை நான் உங்களுக்கு முன்வைக்க விரும்புகிறேன். திருப்பயணிகளாகிய நாம், சுதந்திரத்தோடும் துணிச்சலோடும் முன்னேற அழைக்கப்பட்டுள்ளோம். அதே நேரத்தில், நம் நம்பிக்கையை வலுப்படுத்தும் செல்வங்களைப் பாதுகாத்துக்கொண்டு, நமது பணியை நிறைவேற்றுவதற்கு உதவாத கட்டமைப்புகளையும் பழக்கவழக்கங்களையும் இனி நாம் விட்டுவிட வேண்டும். ஸ்பெயின் நாடு அளப்பரிய கிறிஸ்தவ பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது; அது நற்செய்தி அறிவிப்பிற்கும் நம்பிக்கைக்கும் ஒரு வலிமையான ஊற்றாக இன்றும் விளங்குகிறது. இந்த வளமான பாரம்பரியம் இன்றைய மக்களின் வாழ்வில் தொடர்ந்து கனிகளைத் தருவதை நாம் உறுதி செய்ய வேண்டும். நம்மோடு இருக்கும் மிகப் பெரிய செல்வங்களில் இறைவார்த்தையும் நற்கருணையும் முதன்மையானவை. இவை விருப்பத்தேர்வுகள் அல்ல, மாறாக நமது பயணத்தைத் தாங்கி நிற்கும் மற்றும் நமது பணிகளுக்கு அர்த்தம் அளிக்கும் இன்றியமையாத ஊட்டமாகும்.
நவீன உலகச் சவால்களும் நற்செய்தி அறிவிப்பும்
நற்செய்தியைத் திறம்பட அறிவிக்க வேண்டியது நமது கடமையாகும். இன்றைய சமூகம் கலாச்சார பன்முகத்தன்மை, இடம்பெயர்வு, மதச்சார்பின்மை மற்றும் எண்ணிமப் புரட்சியால் அடையாளப்படுத்தப்படுகிறது. கடந்த காலத்தின் சிறந்த மறைப்பணியாளர்களைப் போல, புதிய மொழிகளைக் கற்றுக்கொள்ளவும், மரியாதைக்குரிய உரையாடல்களில் ஈடுபடவும், நற்செய்தி ஒவ்வொரு இதயத்தையும் சென்றடைய உதவும் பாலங்களை உருவாக்கவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம். துருவமுனைப்பும் பிரிவினையும் அதிகரித்து வரும் உலகில், திருஅவை ஒன்றிப்பின் அடையாளமாக இருக்க வேண்டும். ஆயர்களாகிய நாம், ஒற்றுமையைப் பாதுகாக்கவும், உரையாடலை ஊக்குவிக்கவும், காயங்களை ஆற்றவும், இறைமக்கள் மீது தூய ஆவியார் பொழியும் பல்வேறு கனிகளையும் அருள்கொடைகளையும் வரவேற்கவும் அழைக்கப்பட்டுள்ளோம். உண்மையான ஒன்றிப்பே ஒரு ஆற்றல்மிக்க சான்றாகவும், மறைப்பணி வலிமையின் ஊற்றாகவும் மாறுகிறது.
இளையோரின் இறையழைத்தலும் காயப்பட்டோர் பராமரிப்பும்
இன்றைய மக்கள் பலர், குறிப்பாக இளைஞர்கள், அர்த்தத்தைத் தேடி "யாருக்காக நான்?" என்ற கேள்வியை எழுப்புகின்றனர். தன்னைத் தருவதிலும் கிறிஸ்துவைப் பின்தொடர்வதிலுமே வாழ்வு முழுமையடைகிறது என்பதை அவர்கள் கண்டறிய இறையழைத்தல் பணி உதவ வேண்டும். வலுவான கிறிஸ்தவ சமூகங்கள், மகிழ்ச்சியான அருள்பணியாளர்கள், நம்பிக்கையுள்ள குடும்பங்கள் மற்றும் உண்மையான சான்று வாழ்வு ஆகியவை புதிய அழைத்தல்கள் வளர சிறந்த மண்ணாகத் திகழ்கின்றன. காயப்பட்டவர்களையும், குறிப்பாக துன்புறுத்தலுக்கு உள்ளானவர்களையும் நாம் ஆதரிக்க வேண்டும். திருஅவை செவிமடுத்தல், உண்மை, நீதி, குணப்படுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றின் மீது கொண்ட உறுதியான அர்ப்பணிப்புடன் பதிலளிக்க வேண்டும்.
அன்னை மரியாவின் பரிந்துரையும் இறைவனின் திருஇருதயமும்
நாம் ஒற்றுமையாக பயணிக்கும் இந்த வேளையில், திருஅவையின் அன்னையான புனித கன்னி மரியாளிடம் நம்மை ஒப்புக்கொடுப்போம். அவர் நம்மை பற்றுறுதியிலும் ஒன்றிப்பிலும் நம்பிக்கையிலும் வழிநடத்தட்டும். அவிலா நகரின் புனித யோவானின் முன்மாதிரியைப் பின்பற்றி நாம் "ஆண்டவரே, உம் இதயத்தை எங்களுக்குத் தாரும்" என்று இறைவேண்டல் செய்வோம். செவிமெடுக்கவும், சேவை செய்யவும், பகுத்தறியவும், அன்பு கூறவும், நற்செய்தியை மகிழ்ச்சியுடன் அறிவிக்கவும் கூடிய இறைவனின் இதயம் அது.
இறைவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. நன்றி.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
