தேடுதல்

ஆயர் ஒசோரியோ சித்தோரா அஃபோன்சோ ஆயர் ஒசோரியோ சித்தோரா அஃபோன்சோ  

படுகொலை செய்யப்பட்ட மொசாம்பிக் ஆயருக்காக ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த திருத்தந்தை!

மொசாம்பிக்கில் படுகொலை செய்யப்பட்ட ஆயர் ஒசோரியோ சித்தோரா அஃபோன்சோ அவர்களின் மறைவுக்கு திருத்தந்தை பதினான்காம் லியோ ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

மொசாம்பிக் நாட்டின் குவெலிமானே மறைமாவட்ட ஆயரும், பெய்ரா பேராயமாவட்டத்தின் திருத்தந்தை நிர்வாகியுமான ஆயர் ஒசோரியோ சித்தோரா அஃபோன்சோ அவர்கள், ஜூன் 6, சனிக்கிழமையன்று, ஆயர் இல்லத்தில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

மொசாம்பிக் ஆயர் பேரவையின் தலைவரும், நம்புலா பேராயருமான பேராயர் இனாசியோ சாவ்ரே அவர்களுக்கு அனுப்பிய செய்தியில், இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை, மறைந்த ஆயரின் குடும்பத்தினர், கன்சொலாத்தா மறைப்பணியாளர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் இறைமக்கள் அனைவருக்கும் தனது செபங்களையும் ஆன்மீக நெருக்கத்தையும் உறுதியளித்துள்ளார்.

இந்தக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மைகள் முழுமையாக வெளிச்சத்துக்கு வர வேண்டும் என்று குறிப்பிட்ட திருத்தந்தை, மறைந்த ஆயரை ஆண்டவர் தம் வான்வீட்டில் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும், மொசாம்பிக் திருஅவை மன்னிப்பு, நல்லிணக்கம் மற்றும் அமைதியை அறிவிப்பதில் உறுதியாக நிலைத்திருக்க வேண்டுமென்றும் இறைவேண்டல் செய்துள்ளார்.

ஆயரின் இறுதித் திருப்பலி ஜூன் 13 அன்று குவெலிமானேயில் உள்ள விடுதலையின் அன்னை பேராலயத்தில் மொசாம்பிக்கிற்கான திருத்தந்தைத் தூதர் பேராயர் லூயிஸ் மிகுவேல் முன்யோஸ் கார்தாபா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் மொசாம்பிக் அரசுத் தலைவர் டேனியல் பிரான்சிஸ்கோ சாபோ உட்பட பலர் பங்கேற்றனர்.

தனது மறையுரையில், பேராயர் கார்தாபா அவர்கள், இந்தக் கொலையின் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளிப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், ஆயர் ஒசோரியோவை “அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் மனிதர்” எனப் புகழ்ந்துள்ளார். .

54 வயதான ஆயர் ஒசோரியோ அவர்கள், கன்சொலாத்தா மறைப்பணியாளராகப் பணியாற்றியதோடு, 2017 முதல் 2023 வரை உரோமையிலுள்ள நற்செய்தி அறிவிப்புப் பணிக்கான திருப்பீடத்துறையில் பணியாற்றினார். கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே மற்றும் கர்தினால் புரோத்தாசே ருகாம்ப்வா ஆகியோர் அவரை இறைவன், திருவிவிலியம் மற்றும் திருஅவையின் மீது ஆழ்ந்த அன்பு கொண்ட அர்ப்பணிப்புமிக்க மேய்ப்பராக நினைவுகூர்ந்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

13 ஜூன் 2026, 11:38