கர்தினால் கமில்லோ ரூயினி: உண்மை மற்றும் நம்பிக்கையின் சாட்சியாக வாழ்ந்தவர்
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
“உண்மை உங்களை விடுதலையாக்கும்” என்ற இறைவார்த்தைகளை தனது ஆயர் பணிக்குறிக்கோளாகத் தேர்ந்தெடுத்த கர்தினால் ரூயினி அவர்கள், உண்மை, நம்பிக்கை மற்றும் திருஅவைக்கான நம்பிக்கையின் சிறந்த சாட்சியாக வாழ்ந்தார் என்றும், அவரது வாழ்வு இன்றைய உலகிற்கும் திருஅவைக்கும் ஒரு முன்மாதிரியாக விளங்குகிறது என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.
ஜூன் 18, வியாழனன்று, புனித பேதுரு பெருங்கோவிலில் இடம்பெற்ற கர்தினால் கமில்லோ ரூயினி அவர்களின் இறுதிச் சடங்கு திருப்பலியில் மறையுரை ஆற்றியபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, குருவாகவும், ஆயராகவும், கர்தினாலாகவும் பணியாற்றிய ரூயினி அவர்கள், கல்வி, இறையியல் ஆய்வு, இளைஞர் பணி, பொதுநிலையினர் வளர்ச்சி மற்றும் திருஅவை நிர்வாகம் உள்ளிட்ட பல துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதாக எடுத்துக்காட்டினார்.
மேலும் அவரை “ஞானமும் அக்கறையும் நிறைந்த மேய்ப்பர் ”என்று போற்றிய திருத்தந்தை, ஏறக்குறைய 17 ஆண்டுகள் இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவராகவும், உரோம் மறைமாவட்டத்தில் திருத்தந்தையின் பிரதிநிதியாகவும் பணியாற்றிய கர்தினால் ரூயினி அவர்கள், திருஅவை எதிர்கொண்ட முக்கியமான மாற்றங்களும் சவால்களும் நிறைந்த காலகட்டத்தில் சிறந்த வழிகாட்டியாக விளங்கினார் என்று குறிப்பிட்டார்.
அவரது தலைமையில் முன்னெடுக்கப்பட்ட “கலாச்சாரத் திட்டம்”, உரோம் மறைமாவட்ட மாமன்றம் மற்றும் அதன் செயலாக்கப் பணிகள் உள்ளிட்ட பல முயற்சிகள், திருஅவையின் வளர்ச்சிக்கும் சமூகத்தில் அதன் பங்களிப்பை வலுப்படுத்துவதற்கும் முக்கிய அடித்தளமாக அமைந்ததாகவும் திருத்தந்தை எடுத்துக்காட்டினார்.
“இறைவனின் அன்பிலிருந்து எதுவும் நம்மைப் பிரிக்க முடியாது” என்ற புனித பவுலின் வார்த்தைகளே கர்தினால் ரூயினி அவர்களின் வாழ்வையும் பணியையும் வழிநடத்தியதாக குறிப்பிட்ட திருத்தந்தை, தனது ஆன்மீக சாட்சியத்தில் , “நான் வழங்கியதைப் போலவே மற்றவர்களிடமிருந்தும் பெற்றேன்” என்று அவர் எழுதியிருந்ததை மேற்கோள்காட்டி, அவரது தாழ்மை மற்றும் நன்றியுணர்வை பாராட்டினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
