தெற்கு லெபனோன் அருள்பணியாளர்களுக்கு காணொளி வாயிலாக ஊக்கமளித்த திருத்தந்தை
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
மே 6, புதனன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தெற்கு லெபனானில் பணியாற்றும் அருள்பணியாளர்களை காணொளி வாயிலாக அழைத்து அவர்களை வியப்பில் ஆழ்த்தியதோடு தனது உடனிருப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இஸ்ரேலிய எல்லைக்கு அருகிலுள்ள 'நீலக் கோடு' என அழைக்கப்படும் தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலின் இராணுவம் விலகி இருப்பதை உறுதி செய்வதற்காக, 2000 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் நிறுவப்பட்ட 120 கிலோமீட்டர் நீளமுள்ள தற்காலிக எல்லைக்கோட்டுப் பகுதிகளில், தொடர் வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களில் பணியாற்றும் இந்த அருள்பணியாளர்கள் இணையவழியில் இணைந்திருந்தபோது, திருத்தந்தை காணொளி வாயிலாக அவர்களுக்குத் தனது இறைவேண்டல்களையும், திருத்தூது ஆசீரையும் வழங்கியுள்ளார்.
மேலும் அவர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய திருத்தந்தை, கடினமான சூழலில் அவர்கள் ஆற்றி வரும் பணிக்குத் தனது ஆதரவையும் உடனிருப்பையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
திருத்தந்தையின் லெபனான் நாட்டிற்கான திருத்தூதரகத் தூதுவர் பேராயர் பாவ்லோ போர்ஜியா அவர்கள், திருத்தந்தையுடன் மேற்கொண்ட சந்திப்பின் போது இந்த காணொளி அழைப்பு இடம்பெற்றது. இந்த நிகழ்வின் போது டயர் (Tyre) பகுதியின் கிரேக்க-கத்தோலிக்க ஆயர் மற்றும் முதன்மை அருள்பணியாளர் ஆகியோரும் உடனிருந்தனர்.
திருத்தந்தையின் இந்த காணொளி அழைப்பு, மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீது திருஅவை கொண்டுள்ள நெருக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, 2025 ஆம் ஆண்டு டிசம்பரில் திருத்தந்தையாகத் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக லெபனானுக்குச் சென்றதிலிருந்து, அந்நாட்டுச் சூழலை அவர் கவனித்து வருகிறார்.
பேராயர் பாவ்லோ போர்ஜியா அவர்கள் இப்பகுதியில் உள்ள சமூகங்களுக்கு உதவிகளையும் மேய்ப்புப்பணிகளையும் வழங்கி அவர்களுக்கு ஆதரவளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருத்தந்தையின் இந்த அழைப்பை "நம்பிக்கையின் சுவாசம்" என்று விவரித்த ரமீஷ் (Rmeish) பகுதியைச் சேர்ந்த அருள்பணி டோனி எலியாஸ் அவர்கள், திருத்தந்தையின் ஊக்கத்திற்கும், அப்பகுதிக்கு துணிச்சலுடன் உதவிக்கரம் நீட்டி வரும் திருப்பீடத் தூதரின் முயற்சிகளுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
