தேடுதல்

புனித பேதுரு பெருங்கோவில் வளாகம் புனித பேதுரு பெருங்கோவில் வளாகம்   (ANSA)

இரண்டாம் வத்திக்கான் சங்க ஆவணங்கள்: திருஅவையை வழிநடத்தும் நிலையான திசைகாட்டி

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் நிறைவுற்று 61 ஆண்டுகள் கடந்த நிலையில், அதன் மூல ஆவணங்களை மீண்டும் ஆழமாகப் பயில வேண்டியதன் அவசியத்தைத் திருத்தந்தை பதினான்காம் லியோ வலியுறுத்தியுள்ளார்.

ஜான்சிராணி அருளாந்து – வத்திக்கான்

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் முடிந்து அறுபத்தியொரு ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் ஆவணங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புதிய மறைக்கல்வித் தொடரை (Catecheses) திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தொடங்கியுள்ளார். இச்சங்கத்தைத் திருஅவைக்கான ஒரு நிலையான "திசைகாட்டி" என்று அவர் அழைத்துள்ளார்.

ஜனவரி 7-ஆம் தேதி இதனைத் தொடங்கி வைத்த அவர், இரண்டாம் வத்திக்கான் சங்கத்தை நேரில் அனுபவித்த பலர் இன்று உயிருடன் இல்லை என்பதை விளக்கினார். எனவே, அச்சங்கத்தைப் பற்றிய பிறரது விளக்கங்கள் அல்லது கேள்விப்பட்ட செய்திகளின் வழியாக அறிந்துகொள்வதை விட, அதன் மூல ஆவணங்களின் (Texts) வாயிலாக நேரடியாக மீண்டும் கண்டறிவது அவசியமானது என்று அவர் குறிப்பிட்டார்.

இதுவரை, திருத்தந்தை முக்கியமாக இரண்டு முக்கியமான ஆவணங்களைப் பற்றிச் சிந்தித்துள்ளார்: இறைவெளிப்பாடு குறித்த டேய் வெர்பம் (Dei Verbum) மற்றும் திருஅவை குறித்த மக்களினங்களின் ஒளி (Lumen gentium). டேய் வெர்பம் பற்றி விவாதிக்கும்போது, கடவுள் கிறிஸ்துவின் வழியாக மனிதகுலத்திடம் பேசுகிறார் என்பதை அவர் வலியுறுத்தினார், கிறிஸ்துவின் முழுமையான மனித இயல்பே தெய்வீக மறைபொருளை வெளிப்படுத்துகிறது. திருவிவிலியத்தை அடிப்படைவாதக் கண்ணோட்டத்துடன் வாசிப்பதற்கும், விவிலியத்தை வெறும் மனிதப் போதனையாகக் குறைப்பதற்கும் எதிராக அவர் எச்சரித்தார். அதற்குப் பதிலாக, நற்செய்தியை இன்றும் உண்மை மற்றும் ஆழமான பொருளை வழங்கிக் கொண்டிருக்கும் கடவுளுடனான ஒரு வாழும் சந்திப்பு என்று அவர் விவரித்தார்.

லூமென் ஜென்சியம் (Lumen gentium) வழியாக, திருத்தந்தை அவர்கள் பிளவுபட்ட உலகில் திருஅவையை ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாக முன்னிலைப்படுத்தியுள்ளார். திருஅவை ஏழைகள், சுரண்டப்படுபவர்கள் மற்றும் துன்பப்படுபவர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்றும், அதே வேளையில் தொடர்ச்சியான புதுப்பித்தல் மற்றும் சீர்திருத்தத்தின் மூலம் உண்மையுள்ளதாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பொதுநிலையினர் (laity)  திருஅவை கட்டமைப்புகளுக்குள் மட்டுமல்லாமல், அன்றாட வாழ்விலும் நீதிக்கும் அமைதிக்கும் சான்றுகளாக விளங்க அழைக்கப்படுகிறார்கள் என்று திருத்தந்தை வலியுருத்தினார். இறுதியாக, புனித வாழ்வு என்பது பிறரன்பு, நம்பிக்கை மற்றும் பிறருக்குச் செய்யும் சேவையின் வழியாக அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் உரிய அழைப்பு என்பதை அவர் நம்பிக்கையாளர்களுக்கு நினைவுபடுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 மே 2026, 11:48