உலகளாவிய நற்பணிகளை முன்னெடுக்கும் திருத்தந்தையர் அறக்கட்டளை
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
திருத்தந்தையர் அறக்கட்டளை (The Papal Foundation), 2026-ஆம் ஆண்டிற்கான மானியமாக 15 மில்லியன் டாலருக்கும் அதிகமான (ஏறத்தாழ 125 கோடி ரூபாய்) நிதியை அறிவித்துள்ளது. இந்த நிதியுதவியானது, உலகெங்கிலும் உள்ள 75 நாடுகளில் உள்ள மிக முக்கியமான 144 திட்டங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.
இந்த நிதியுதவியானது, வத்திக்கானால் அடையாளம் காணப்பட்ட உள்கட்டமைப்பு, கல்வி மற்றும் மனிதாபிமான உதவிகளை மேம்படுத்தி, உலகின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய விளிம்புநிலைச் சமூகங்களைச் சென்றடையும்.
இந்த மானியங்கள் பள்ளிகள், அனாதை இல்லங்கள் மற்றும் மருத்துவமனைகளைக் கட்டுதல் மற்றும் புதுப்பித்தல் போன்ற முன்முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும்; அத்துடன் தான்சானியாவில் சுரண்டலிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க ஒரு தங்குமிடம் (dormitory), இந்தியாவில் பழங்குடியின குழந்தைகளுக்காக ஒரு பாதுகாப்பான பள்ளி, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஒரு தொழில்நுட்ப மையம், பிலிப்பைன்ஸில் பெண்களுக்கான தகவல் தொழில்நுட்ப (IT) பயிற்சி மற்றும் கினியாவில் குடிநீர் வசதிகள் போன்ற சிறப்புத் திட்டங்களுக்கும் இந்த நிதி உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அறக்கட்டளையின் தலைவர் வார்ட் ஃபிட்ஸ்ஜெரால்ட் அவர்கள் (Ward Fitzgerald), இந்த மானியங்கள் ஏழைகளுக்குச் சேவை செய்யவும் மற்றும் உலகளாவிய சமூகங்களை வலுப்படுத்தவும் திருஅவை கொண்டுள்ள நோக்கத்தைப் பிரதிபலிக்கின்றன என்று வலியுறுத்தினார். மானியக் குழுவால் நடத்தப்பட்ட ஒரு கடுமையான ஆய்வு முறைக்குப் பிறகே இந்த நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன.
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் அழைப்பால் ஈர்க்கப்பட்டு, பல புதிய குடும்பங்கள் இந்த அறக்கட்டளையில் இணைந்து வருகின்றனர். இவ்வமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை, 2,700-க்கும் மேற்பட்ட உலகளாவிய திட்டங்களுக்கு 270 மில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியை வழங்கியுள்ளது. இதன் வழியாக, வெறும் பேச்சோடு நின்றுவிடாமல் விசுவாசத்தை நற்செயல்கள் மூலம் மெய்ப்பிக்கும் தனது உயரிய மரபை இந்த அறக்கட்டளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
